October 22, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-6)

தமிழகத்தை ஆண்ட நாயக்க மரபினரில் மிகக் குறைந்த காலமே ஆட்சியில் இருந்தவர்கள் செஞ்சி நாயக்கர்களே. கி.பி.1509 முதல் கி.பி.1649 வரை 140 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ஆண்டனர். 

செஞ்சி நாயக்கர்கள்

செஞ்சிக் கோட்டை (இராஜகிரி) 
சோழர்களின் காலத்திலேயே தொண்டை மண்டலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக விளங்கியது செஞ்சி. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், பாண்டியர்கள், காகதீயர்கள் (தெலுங்கர்), ஹொய்சளர்கள் (கன்னடர்) முதலானவர்களின் ஆட்சிகளின் கீழ் இருந்தது செஞ்சி. செஞ்சியிலுள்ள கோட்டையை முதன்முதலில் அமைத்தவர் ஆனந்தக் கோன் எனும் சிற்றரசர் என்று "கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்" கூறுகிறது.

விஜயநகரப் பேரரசு நிறுவனர் புக்கரது மகன் குமார கம்பணன், படைவீட்டு அரசர் இராஜ நாராயணச் சம்புவராயரைத் தோற்கடித்து தொண்டை மண்டலத்தை வெற்றிகொண்ட நாள் முதல் செஞ்சி விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது. குமார கம்பணனின் காலத்தில் தொண்டை மண்டலப் பகுதியின் தலைநகராக விளங்கியது செஞ்சி. கி.பி.1363 முதல் 1509 வரை விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட மண்டலேசுவரர்களாலேயே ஆளப்பட்டது.

துவக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் நதி வரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் கீழ் இருந்தன. பின்னர், விஜயநகரப் பேரரசின் ஆரவீடு மரபினர் வேலூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆளத் துவங்கியதும் வடக்கே பாலாறு முதல் தெற்கே கொள்ளிடம் வரையிலானதாக செஞ்சி நாயக்கர்களின் ஆட்சி எல்லை சுருங்கியது.

பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர்

செஞ்சிக் கோட்டை தானியக் கிடங்கு & கல்யாண மகால் 
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்திலேயே செஞ்சியில் தனி நாயக்கர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. கி.பி.1509-இல் முதல் செஞ்சி நாயக்கராக அமர்த்தப் பட்டவர் துப்பகுல கிருஷ்ணப்ப நாயக்கர் எனும் பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் ஆவார். செஞ்சி நாயக்க மரபினர்  தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டபலிஜ குலத்தின் செட்டி பிரிவைச் சேர்ந்தவர்கள். செஞ்சி நாயக்கர்களின் ஆட்சிமொழி யும் தெலுங்காகவே இருந்தது.

கிருஷ்ணதேவராயரது நன்மதிப்பைப் பெற்ற அவரது படைத் தளபதியான கோனேரி வையப்ப நாயக்கரின் மகனே பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர். செஞ்சி நாயக்கர்களில் குறிப்பிடத் தக்கவர் இவரே. இவர் பெயரால் செஞ்சி கிருஷ்ணாபுரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இன்றுள்ள வடிவில் செஞ்சிக் கோட்டையை வடிவமைத்தவர் பெத்த கிருஷ்ணப்பனே. செஞ்சிக் கோட்டையிலுள்ள தானியக் கிடங்குகள், கல்யாண மஹால், செஞ்சியிலுள்ள மூன்று குன்றுகளையும் உள்ளடக்கி எழுப்பப் பட்டுள்ள பெருஞ்சுவர்கள் ஆகியவை இவரால் கட்டுவிக்கப்பட்டவையே. 

ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில் 
செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரத்தில் வேங்கடரமணர் மற்றும் வேணுகோபால சுவாமி கோவில்கள், திருக்கோவிலூரை அடுத்துள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராகப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மலர்த் தோட்டம் ஆகியவை பெத்த கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டுவிக்கப்பட்டன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் 217 அடி உயரமுள்ள இராஜகோபுரம் கட்டுவிக்கும் பணி கிருஷ்ணதேவராயரின் உத்தரவுப்படி பெத்த கிருஷ்ணப்பரின் மேற்பார்வையில் துவக்கப்பட்டது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் அக்கோபுரத்தைக் கட்டுவித்தவர் தஞ்சை செவ்வப்ப நாயக்கரே என்று பல்வேறு வரலாற்று ஆவணங்களும் உறுதி செய்கின்றன. இச்செய்தி பாடலாக இன்றும் அக்கோவிலில் காணப்படுவதாகக் குறிப்பிடுவார் பேரா. மங்கள முருகேசன்.

துப்பகுல சூரப்ப நாயக்கர்

பெத்த கிருஷ்ணப்பருக்குப் பின், அவரது ஒரு மனைவி வெங்கலாம்பாவின் மகன் துப்பகுல சூரப்ப நாயக்கர் அரசுரிமை ஏற்றார். இவரது அரண்மனைப் புலவர் இரத்தினகேது ஸ்ரீனிவாச தீட்சிதர் என்பவர்  ஸாஹித்ய ஸஞ்சீவினி, ரஸார்ணவா,  அலங்கார கௌஸ்துபா, காவ்ய தர்ப்பணா, காவ்ய ஸார ஸங்க்ரஹா, ஸாஹித்ய ஸூக்ஷ்ம சரணி முதலான சம்ஸ்கிருத உரைநடை நூல்களும், பவன புருஷோத்தமம் என்ற சமஸ்கிருத நாடகமும் இயற்றினார்.

முதல் மற்றும் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்கள் 

சூரப்ப நாயக்கருக்குப் பின் பெத்த கிருஷ்ணப்பனின் மற்றொரு மனைவி லட்சுமாம்பாவின் மகன் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் எனும் துப்பகுல வேங்கட கிருஷ்ணப்பர் கி.பி.1557-இல் அரசரானார். கி.பி.1565 தக்காண சுல்தான்களுக்கும் விஜயநகரப் பேரரசுக்கும் இடையில் நடந்த தலைக்கோட்டைப் போரில் பேரரசருக்குத் துணையாக நின்று போரிட்டவர் வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கரே. 

வேங்கட கிருஷ்ணப்பனுக்குப் பின் அரசேற்றவர் அவரது மகன் இரண்டாம் கிருஷ்ணப்பன் எனும் துப்பகுலத் திரயம்பக கிருஷ்ணப்ப நாயக்கராவார். தலைக்கோட்டைப் போருக்குப் பின் பலவீனமுற்றிருந்த விஜயநகரப் பேரரசை எதிர்த்துப் பெரும் கிளர்ச்சி செய்த இரண்டாம் கிருஷ்ணப்பன் பேரரசர் இரண்டாம் வேங்கடவனது படையால் கைது செய்யப்பட்டதாகவும், தஞ்சை இரகுத நாயக்கரின் தலையீட்டின் பேரில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறுவார் ஹீராஸ் பாதிரியார். 

இரண்டாம் கிருஷ்ணப்பன் காலத்தில் செஞ்சிக்கு வருகை புரிந்த பிமெண்டா பாதிரியார், செஞ்சியைக் கிழக்கு டிராய் என்றும், இந்திய நகரங்களில் மிகப் பெரியதான செஞ்சி, லிசுபன் தவிர பிற போர்ச்சுகல் நகரங்கள் அனைத்தையும் விடப் பெரியது என்றும் வருணித்தார்.

இரண்டாம் கிருஷ்ணப்பருக்குப் பின் முறையே துப்பகுல வரதப்ப நாயக்கர், துப்பகுல வேங்கடப் பெருமாள் நாயுடு, துப்பகுல பெத்த ராமபத்திர நாயுடு, துப்பகுல ராமகிருஷ்ணப்ப நாயுடு ஆகியோர் செஞ்சி நாயக்கர்களாய் இருந்தனர். 

நாயக்கர் ஆட்சிக்குப் பின் செஞ்சி

கி.பி.1649-இல் சுல்தான் ஆதில்ஷாவால் அனுப்பபட்ட மீர்ஜும்லாவின் தலைமையிலான பீஜப்பூர்ப் படை செஞ்சியை முற்றுகையிட்டது. துப்பகுல ராமகிருஷ்ணப்ப நாயுடுவிடமிருந்து வெகு எளிதில் செஞ்சியைக் கைப்பற்றியது. செஞ்சியில் நாயக்கர் ஆட்சி மறைந்தது. 

பின்னர், கி.பி.1678 சத்திரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்ட செஞ்சி 1998 வரை மராட்டியர் ஆட்சியில் இருந்தது. 1698-இல் முகலாயர் கைக்கு மாறியது. "நசுரத்கட்டா" என்று பெயர்மாற்றமும் பெற்றது. 1700-இல் முகலாயர்களின் பிரதிநிதியாக ஸ்வரூப் சிங் என்ற இராஜபுத்திரத் தளபதி செஞ்சியின் நிர்வாகத்தை ஏற்றார். நாட்டார் வழக்கில் சர்ப்ப சிங்கு எனப்பட்ட இவரது மகனே தேசிங்கு ராஜா எனப்படும் தேஜ் சிங் ஆவார். தேசிங்குக்குப் பிறகு ஆற்காடு நவாப் வழியாக ஆங்கிலேயர் கைக்கு வந்து சேர்ந்தது செஞ்சி.

- யுவபாரதி 


(அடுத்தது)

5 comments:

Bangara cinna Raju Rayulu said...
This comment has been removed by the author.
Bangara cinna Raju Rayulu said...
This comment has been removed by the author.
Bangara cinna Raju Rayulu said...
This comment has been removed by the author.
Bangara cinna Raju Rayulu said...

செஞ்சி நாயக்க மன்னர்கள் அனைவரும் செட்டிபலிஜா இனத்தை சார்ந்தவர்கள்.செஞ்சி நாயக்க மன்னர்கள் தேச மரபை சார்ந்த தேசாதிபதிகள் ஆவார்கள்.இவர்கள் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் செட்டிபலிஜா(சாதுசெட்டி,தெலுங்குசெட்டி),ஜனப்பபலிஜா(பூவாலுபலிஜா),கோணிக்காபலிஜா,தெகட்ட பலிஜா,பெரிக்காபலிஜா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்(2005 ஆந்திர சாதி பட்டியலை பார்க்க).இந்த செட்டிபலிஜாக்கள் தமிழ் நாட்டில் தமிழ்நாட்டில் தேசாதிபதிதெலுங்கர்,கௌர தெலுங்குசெட்டியார்(1951 திருச்சி தஞ்சை சாதி பட்டியலை பார்க்க) எனவும் சாதுசெட்டி,தெலுங்குசெட்டி எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் செஞ்சிநாயக்க மன்னர்கள் அனைவரும் துப்பகுலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பெத்தண என்ற அடைமொழியை அல்லது குடும்ப பெயரை கொண்டவர்கள். இந்த வகை பெயர்கள் pure உண்மையான பலிஜாக்களில் செட்டிபலிஜா பிரிவில் மட்டுமே வருகிறது.இதிலிருந்து செஞ்சி நாயக்க மன்னர்கள் அனைவரும் செட்டிபலிஜா வகுப்பை சார்ந்தவர்கள் என தெளிவாக அறியலாம். மேலும் செட்டிபலிஜாவில் மட்டுமே செஞ்சிவாறு என்ற ஒரு கோத்திரம் வருகிறது. கிருஷ்ணதேவராயரும் கன்னட தேசபானாஜிகா(கன்னட தேசபலிஜா) வகுப்பை சார்ந்தவரே. கிருஷ்ண தேவராயர் மனைவியும் தெலுங்கு செட்டிபலிஜா வகுப்பை சேர்ந்தவர் தான். கிருஷ்ணதேவராயர் காலத்தில் பாளைய காரர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டமே நாயக்கர் பட்டம். நாயக்கர் என்பது இனப் பெயர் கிடையாது.

Bangara cinna Raju Rayulu said...
This comment has been removed by the author.