December 14, 2011

நிதானமாய் எப்படி யோசிப்பது?

'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
          ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை...'

என்ற பழம் பாடல் ஒன்றின் வரி அடிக்கடி நினைவுக்கு வரும். எப்படி இருந்த மண் என்று வியப்பையும், இன்று எம் மக்களைத் திருப்பூருக்கு விரட்டியடிக்கிறதே என்று கரிப்பையும் ஒருங்கே தரும். திருப்பூரும் இப்போது பொய்த்துக் கொண்டே வருகிறது என்பது வேறு விஷயம்.

மதுரை நகர் கடந்து ஊருக்குப் போகும்போதெல்லாம் பாலத்துக்குக் கீழ் வறண்டேகிடக்கும் வைகை கண்ணில்படும்.வையை என்னும் பொய்யாக் குலக்கொடி? ) வெள்ளங் கெட்டு வாய்க்காலானாலும் சரி என்று பழக்க தோஷத்தில் அழகர் மட்டும் சித்திரைக்குச் சித்திரை தவறாமல் இறங்கிவருகிறார். இப்போது மழை பெய்திருக்கிறது. கொஞ்ச நாள் ஓடும், நீரும் வாழ்வும்.

எங்கள் உசிலம்பட்டிக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது வைகை அணை. என் பாட்டன், பாட்டியின் சாம்பல் கரைத்ததெல்லாம் அங்குதான். வைகையை மட்டும் வைகை அணை நம்பி இருந்தால் எங்கள் மக்களின் சிறு உழவும் அவ்வளவுதான்.

எம் குடும்பத்திற்கு காற்காணி நிலமும் இல்லைதான். என் பாட்டனார் ஒருஉணவகத்தில் சமையலராக வேலை பார்த்தவர். ஆனால், உழவை நம்பித்தானே எல்லாம் இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை 
நான் பிறந்தது சின்னமனூரில். கம்பம், சின்னமனூர், (உத்தம)பாளையம் பகுதிகளில் முல்லைப் பெரியாற்றுப் பாசனம் இல்லையெனில் ஒன்றுமேயில்லை. வேறு பெரும் தொழில் வாய்ப்புகளும் இல்லை. தேனி மாவட்டத்திற்குக் குடிநீரும் பெரியாற்று நீர்தான்.

அதனால்தான் அரசியல் நடிப்புச் சுதேசிகளை நம்பாமல், குமுளி லோயர் கேம்பையும் கடந்து, ஒவ்வொரு நாளும், எல்லை நோக்கி எம் மக்களே சாரை சாரையாகக் கிளம்புகிறார்கள்.

எல்லை கடந்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுவீழ்த்தக் கேரளப் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆவேசம் வருகிறது.எனினும் அசம்பாவிதம் ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்ற கவலையும் பற்றிக் கொள்கிறது.

ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் தேனி நண்பர்கள் சொல்லும்பொழுது பதற்றமாக இருக்கிறது. வழக்கம் போல் 'பரபரப்பு... பரபரப்பு...' என்று காட்டும் தொலைக்காட்சியைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.

நிதானமாய் எப்படி யோசிப்பது?

- யுவபாரதி

1 comment:

Siraju said...

எப்போதும் மக்களே முன்னெடுக்கும் போராட்டங்கள்தான் வெற்றி பெரும்.