May 08, 2017

கலை இலக்கியாவின் ‘பெண்மைத் தினவு’ : சொன்னாலும் தீராத சொல்

கலை இலக்கியாவின் பெண்மைத் தினவு’ : சொன்னாலும் தீராத சொல்

வீடோ நகரவிட மறுப்பது. வெளியோ சட்டகத்திற்கு உட்பட்டது. பொறுக்க முடியாமல் புலம்பும் அங்கலாய்ப்பும், பிறகு வேறு வழியின்றி கொண்டுவிடும் ஆசுவாசமுமாய் நகர்கிறது வாழ்வு.  இவ்வுலகையும் வாழ்வையும் பெண் தன்னிலை எவ்வாறு உணர்கிறது, என்ன எதிர்பார்க்கிறது, எப்படி ஆற்றாமையும் கோபமும் குற்றவுணர்வும் கொள்கிறது, அவற்றில் எதை எதை மொழிவழி வெளிப்படுத்த விழைகிறது என்பதற்கான  ஒரு சான்றாக இருக்கிறது பெண்மைத் தினவு எனும் கலை இலக்கியாவின் கவிதைத் தொகுப்பு.

1

ஆண்களின் பகல்வாழ்வு என்பது கடிகாரத்தின் மணிமுள்ளோடு மட்டும் சம்பந்தப்பட்டது என்றால், பெரும்பாலான பெண்களின் பகல்வாழ்வு என்பது  அதே கடிகாரத்தின் நொடிமுள்ளோடு சம்பந்தப்பட்டது. ஒரு நொடி கூட எங்கும் நிற்கவும் விடாமல் எதையும் நினைக்கவும் விடாமல், கையோடும் காலோடும் கட்டப்பட்ட வீட்டுக் கடமைகளோடு சம்பந்தப்பட்டது.

இரவுப் புனிதம் என்றொரு கவிதை.
நள்ளிரவின் உள்ளிருந்து
கடிகாரச் சப்தம் என்னை
விழுங்க வருகிறது

அதற்குள்
பால்வேண்டும் குழந்தை
பசியடங்கி உறங்கட்டும்

ஊளையிடும் நாய்கள்
பேசி முடிக்கட்டும்
அனாதை நிலவு ஆதரவு கொள்ளட்டும்

என்ன வேண்டுமானாலும்
இரவோடு பேசி முடியுங்கள்
சலசலக்கும் மரங்களே

விடிந்து விடுமானால்
எனது கடிகாரச் சப்தமும்
எனது கவிதை மனமும்
காலாவதியாகிவிடும்.

வீட்டை ஒட்டிய மரங்களின்  காற்றோசையை மட்டுமல்ல, தன்னை ஓயாமல் சுழலச் செய்யும் கடிகாரத்தின் சப்தத்தைக் கேட்பதும் கூட, பிள்ளையின் உறக்கத்திற்காகக் காத்திருந்து, தெருநாய்களின் ஊளையும் அடங்கிய பிறகும் எஞ்சிநிற்கும் விடியாத இரவில்தான் வாய்க்கிறது என்பதைச் சொல்கிறது இக்கவிதை.

2

ஊர்பார்த்தும் உலகம்பார்த்தும் நெளிவு சுழிவோடு நடக்க நிர்ப்பந்திக்கப்படும் இறுக்கம் ஏதும் பிள்ளைப் பருவத்தில் இருப்பதில்லை.  சமகால வாழ்வின் அழுத்தங்கள் அதிகரிக்கும் போது தம் இருப்பைச் சமன்படுத்திக் கொள்ள விழையும் மனத்தின் எதிர்வினையாகவே விளையாட என்றே விளையாடி வாழ்ந்த பிள்ளைப் பருவ நினைவுகள் மேலெழுகின்றன. அப்படி எழுந்து உலவுவது பிள்ளைப் பருவ நினைவுகளா கனவுகளா என ஐயுறும் பொழுதிலேயே, தாயாக இருக்கும் நடப்புக் கணத்தின் ஓர்மை ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது பருவ மயக்கம் எனும் கலை இலக்கியாவின் கவிதை.

ஒட்டுப்புல்லில் தும்பைப்பூச்சூடி
தலைமுடி அலங்கரிக்கிறேன்

யானையின் லத்திகளைத்
தேடித்தேடி மிதித்திருந்தும்
கால் முள்ளெடுக்க
எருக்கம்பால் தொட்டுநிற்கிறேன்

மேற்கு மலைத்தொடரைப்
பட்டப்பேர் சொல்லிக்
கதைபேசி கண் தழுவுகிறேன்

புழுதியில் கமகமக்கும்
டயர்வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது
என் வாழ்வீதியெங்கும்.

பிள்ளை வந்துவிட்டான்
“சாப்பிட்டு வீட்டுப்பாடம் எழுதுப்பா
குழந்தை எழுதத் துவங்குகிறான்

என் மேற்கு மலைத்தொடர்
கம்பளிப் புழுவெனச் சுருள்கிறது

உணரவும் முடியாமல்
உதறவும் முடியாமல்
உள்ளங்கையில் துடிதுடிக்கும்
குழந்தை இருதயங்கள்.

3

கருவுற்ற காலத்திலும் கவிதையின் மீது காதலே தன்னடையாளம் எனும் உயிர்மூச்சைத் தக்கவைத்திருக்கிறது என்றுணரும் பெண்ணுக்குத் தன் குழந்தையைப் பார்க்கும் போது எழும் குற்றவுணர்வைக் காட்டுகிறது சாபம் படிந்த கவிதைகள்  எனும் ஒரு கவிதை.

கட்டிலுக்கு அடியிலான
விடிவிளக்கின் வெளிச்சத்தில்
கர்ப்ப வயிறு அழுந்த அழுந்த
நான் எழுதிய கவிதைகள்
என் உயிர்மூச்சைத் திருடி
பாதுகாத்து வைத்தன

அதன் மேல்
ஒட்டிய உடலோடிருக்கும்
எனது பிள்ளையின்
சாபங்கள் படிந்து கிடக்கின்றன.

4

மக்களின் பேச்சு மொழியிலேயே அமைந்து பெண்களின் உணர்வுகளைப் பேசும் பல கவிதைகள் கலை இலக்கியாவின் இத்தொகுப்பில் உள்ளன. சமஞ்சா அடங்காதாபக்தி, உரையாடல், மூக்குத்தி ஆகிய கவிதைகள் இவற்றில் குறிப்பிடத் தக்கவை எனலாம்.
கணவனாலும் பிழைப்பாலும் தினசரி வாழ்வே போராட்டமும் புலம்பலுமாக நகரும் ஒரு தாய், உயிர் மாய்த்துக் கொள்ள மாட்டாமல் தொடர்ந்து வாழத் தான் கொண்டுள்ள ஒரே நம்பிக்கையான தன் மகளைச் சுட்டி, கணவனையும் சாதிசனத்தையும் பற்றி அங்கலாய்க்கும் கவிதை சமஞ்சா அடங்காதா?
இந்தக் காட்டுமாட்டுப் பயகிட்ட
கருமாயப்படுறதுக்கு – நாந்
தீயப் பொருத்திக்கிட்டா செத்த சொகமாயிருக்கும்

என்னப் பெத்த சனம் பீதின்னிப்பய சனம்
இந்தத் துரியோதனங் கையில விட்டுத்
தலமுழுகுன கெட்ட சனம்

ஒரு மொழக் கயித்துக்கும் வழியில்ல
உசிரு வாழவும் ஒணச்சியில்ல

கங்கணம் கட்டிக்கிட்டு – எங்
கொலையக் கொதிக்கவிட்டு
மூதேவி முண்ட என்ன
உசிரோட அடிக்கையில

நாம் பெத்த ராசாத்தி
இந்த ஒத்தப் பொட்ட சமஞ்சா
என் நெத்தம் கடவாயில ஒழுக

பயமுறுத்தும் இந்த சனம்
பதமா மாறாதா – மனுசத்
திமிறுதேன் அடங்காதா?

5

இரு வேறு கொடுமைகளை ஒரு சேரச் சொல்கிற கவிதை உரையாடல். நேற்று முன்தினம் குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரி என்றாலும் இன்று வழக்கமான பிழைப்பான களையெடுக்க வந்து விடுகிறார் விவசாயக் கூலியான ஒரு பெண். பெற்ற குழந்தையும் பெண் குழந்தை. அதுக்குள்ளே பிழைப்புக்கு வந்துட்டியேஎன்பவர்கள் பற்றி அப்பெண் இயல்பாகச் சொல்வது போல் பேசுகிற கவிதை இது.
பொழப்பே எழவெடுத்த பய
பொழப்பாப் போச்சு
பொறந்த வீட்டுலதேஞ் சீரழிவுன்னா
போன எடத்துலயும் வாதனதேன்

பெத்தவனும் கட்டுனவனும்
பந்தாட்டம் ஆடுனா
பொட்டச்சிப் பொழப்பு காத்துப்புழுதிதேன

என்னத்தச் சொல்ல?
என்னிக்குத்தெ எம்பாடு தீருமோ
இல்ல – மண்டையோடதேம் போகுமோ?

“ஏக்கா மயிலக்கா
இத்தினின்டு ஊறுகா குடு
ஏண்டி முந்தாநாளு பெத்தியே
இன்னிக்கு எங்கடிங்குறாளுக
இவளுக யோக்கியம் மாதிரி

பொட்டயக் கொண்டுபுட்டுதே
களையெடுக்க வந்தேன்”

“ம்... போதும் போதும்
ஊறுகால்லாம்
தொட்டுச் சாப்புடக் கூடாது
பாத்துக்கிட்டே தின்னுறனும்
அம்புட்டு வசதியிலயா நாம இருக்கோம்.”

6

ஆற்றாமையும் ஆதங்கமும் துயரமும் சீற்றமும் பெருகிய வாழ்விலேதான் நெகிழ்வான கணங்களும் இருக்கின்றன. கவிதையின் மீது கொண்ட நம்பிக்கையாலேயே அக்கணங்களை மொழிப்படுத்தவும் சாத்தியமாகிறது. அதில் ஒரு கணமாக நதிவேர் எனும் கலை இலக்கியாவின் கவிதை காட்டும் காட்சி அபாரமானது.
ஒரு மழைத்துளியைக்
கையில் ஏந்தியபடி ஒரு
மல்லிகைப் பூவின் பின்னே
நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்

பனித்துளிக்கு உள்ளெ ஒதுங்கிய
சூரியச் சுடராய்ச் சுடர்கிறது மல்லிகை
தூரத்து மலையருவியில்
வெயில் உருகி வழிகிறது

ஆற்றுமீனை அடித்துக் கோர்த்து
சுட்டுத்தின்ற வடுவுடைய கம்பியால்
ஆற்றைப் பிளக்கிறேன் ஒரு
நதியை நட்டுவைக்க

ஒரு மல்லிகைப் பூவின் உள்ளே
நதி வேர் விட்டு விழுது பரப்புகிறது
அந்தரத்தில் பாயும் நதியாக.

இன்னும் பல நல்ல கவிதைகளைக் கலை இலக்கியா தருவார் என்று நம்பிக்கை தருகிறது பெண்மைத் தினவு’.


(07/05/2017 அன்று தேனியில் முற்போக்கு கலை இலக்கிய மேடை ஏற்பாடு  செய்திருந்த கூட்டத்தில் கலை இலக்கியாவின் பெண்மைத் தினவு எனும் கவிதைத் தொகுப்பைப் பற்றிப் பேசியது.)

2 comments:

ராஜி said...

தலைப்பே அடி தூள். கவிதைகளும் சூப்பர்

rk said...

வார்த்தை இல்லை