March 06, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-4)

விஜயநகர (ஹம்பி) விரூபாட்சர் ​கோயில்
விஜயநகரப் பேரரசர்களும் நாயக்க மன்னர்களும் இந்தியத் துணைக் கண்டத்தின் தென் பகுதிகளிலுள்ள திருக்கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் குறித்துப் பற்பல நூல்கள் உள்ளன.

கி.பி.1300-க்குப் பிறகு வடநாடுகளைப் போலன்றி, முற்றிலும் இசுலாமிய ஆட்சியாளர்களுக்கு ஆட்படாது தென்னகத்தைக் காத்த இந்துப் பேரரசு என்ற வகையில் மட்டுமே வரலாற்றாசிரியர்கள் பலரும் விஜயநகரப் பேரரசை மதிப்பிடுகின்றனர்; ஆனால்  இப்பேரரசு தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் - குறிப்பாகத் தமிழகத்தில் ஏற்படுத்திய - அடையாள மாற்றங்களை / எதிர்விளைவுகளை மதிப்பிடுவதில்லை.
 
தமிழகத்தின் மீதான விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக் காலம் என்பது குமார கம்பணனால் சம்புவராயர் வெற்றி கொள்ளப்பட்ட கி.பி.1362-லிருந்து நாயக்க அரசுகள் தோற்றம் கொண்ட கி.பி.1529 வரையிலானது. இந்நேரடி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மதுரை, தஞ்சை, சந்திரகிரி, திருவதிகை, படைவீடு முதலான ராச்சியங்கள் மண்டலேசுவரர் / தண்டநாயகர் என்கிற ஆளுநர்களின் (Governor) கண்காணிப்பில் இருந்தது. மைசூருக்குத் தெற்கே விஜயநகரப் ​பேரரசிற்குட்பட்ட இக்கேரி நாயக்க ராச்சியம் இருந்தது. கொங்குப் பகுதி வெகுகாலம் இக்கன்னட ராச்சியத்தில் இருந்தது. நாயக்க அரசு என்பது பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசு. (பேரரசு வலுக்குன்றியதும் இவ்வரசுகள் தன்னரசுகளாயின என்பது வேறு.)

மதுரையில் நாயக்கர் அரசு (கி.பி.1529) ஏற்பட்ட பின்னர், இரண்டாம் தேவராயர் காலத்தில் மதுரை விசுவநாத நாயக்கரது மகன் குமார கிருஷ்ணப்பனால் இலங்கையின் புத்தளம் போரில் கண்டியரசு வெல்லப்பட்டு (கி.பி.1564-65), குமார கிருஷ்ணப்பனின் மைத்துனர் விஜய பூபால நாயக்கர் கண்டி ராச்சியத்தின் ஆளுநராக்கப்பட்டார். பின்னர் இவர் பெளத்தத்தைத் தழுவி சிங்களப் பெயர் பூண்டு விஜயபால நாயகே ஆனார். தெலுங்கு நாயக்க மரபினர் சிங்களத்தில் நாயகே ஆயினர்.

குமார கம்பண உடையார், விரூபாட்சி நாயக்கர், எம்பண நாயக்கர் (கம்பணன் மகன்), பிரகாச நாயக்கர் (எம்பணன் மைத்துனன்), சவண நாயக்கர், லக்கண நாயக்கர், மதன நாயக்கர், சோமண நாயக்கர், துளுவ நரச நாயக்கர், தென்ன நாயக்கர், குரு குரு திம்மப்ப நாயக்கர், கட்டிய காமய்ய நாயக்கர், சின்னப்ப நாயக்கர், வையப்ப நாயக்கர், நாகம நாயக்கர், கேசவப்ப நாயக்கர் முதலானோர் மேற்கண்ட ஒன்றரை நூற்றாண்டுக் காலம் தமிழக ராச்சியங்களுக்கு ஆளுநர்களாக இருந்தவர்கள்.

கருநாடகம் எனும் வழக்கு

விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்த சங்கம மரபும், அடுத்தடுத்து ஆட்சிசெய்த சாளுவ, துளுவ மரபுகளும் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவை என்பதை ஏற்கனவே கண்டோம். விஜயநகரப் பேரரசு  ஆட்சிக் காலத்தவை எனக் கண்டறியப்பட்ட 7000 கல்வெட்டுகள் மற்றும் 300 தாமிரப் பட்டயங்களில் பாதிக்கும் மேலானவை கன்னட மொழியிலானவை என்பது சிந்திக்கத்தக்கது.

விஜயநகரப் பேரரசு தம்மை விஜயநகர சாம்ராஜ்யம் என்றும், கருநாடக சாம்ராஜ்யம் என்றும் குறிப்பிட்டுக் கொண்டது. விஜயநகரப் பேரரசர்கள் விரூபாட்சன் எனும் விஜயநகர சிவனையும், வேங்கடாசலபதி எனும் திருப்பதித் திருமாலையும் முதன்மைத் தெய்வங்களாக வணங்கினர். கிருஷ்ண தேவராயர் தனது ஜாம்பவதி கல்யாணம் எனும் சமஸ்கிருத நூலில் விரூபாட்சனைக் "கர்நாடக ராஜ்ய ரக்ஷாமணி " (கருநாடக அரசைக் காக்கும் மாணிக்கம்) எனப் புகழ்கிறார்.

இதனாலேயே,

ஃ    விஜயநகர ஆட்சிக்காலம் முதற்கொண்டு, வடநாட்டு இசுலாமிய அரசுகளும் வெளிநாட்டுப் பயணிகளும் விஜயநகர அரசை மட்டுமின்றி, விஜயநகரப் ​பேரரசர்களாலும் அவர்தம் மரபினராலும் ஆளப்படும் அனைத்துப் பகுதிகளையும் கருநாடகம் என்று அழைக்கும் வழக்கம் தோன்றியது.

ஃ    பின்னாளில் ஆற்காட்டிலிருந்து ஆண்ட நவாபும் கருநாடக நவாப் என்றே அழைக்கப்பட்டார்.

ஃ    அறுநூறாண்டுக் காலம் விஜயநகர ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த நாயக்கர் ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த பாளையக்காரர் ஆட்சிக்கும் உட்பட்டிருந்த (இப்போதும் இருக்கிற) தமிழகத்திற்கும் கருநாடகம் என்ற பெயர் ஏற்பட்டது.

ஃ    தமிழகத்தின் கிழக்குச் சோழமண்டலக் கடற்கரை கருநாடகக் கடற்கரை ஆனது. தமிழிசை தெலுங்கு மயமான (குறிப்பாக, தஞ்சையில் இரகுநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில்) பின்பும், அது தெலுங்கிசை என்றோ, ஆந்திர இசை என்றோ அழைக்கப்படாமல் கருநாடக இசை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஃ    விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் பழமைவாதத்தை - சாதியமைப்பைக் கடுமையாகப் பின்பற்றியதாலேயே பழமைவாதத்தை வெகுமக்கள் கருநாடகம் என்று குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது, இன்றும் பழமைவாதியை  "அவர் சுத்தக் கருநாடகம்!"  என்று கூறும் வழக்கம் இருக்கிறது.

சீமை எனும் சொல்

சோழர், பாண்டியர் காலத்தில் ஆட்சிப் பிரிவுகள் மண்டலம், வளநாடு / கோட்டம், கூற்றம் / நாடு, ஊர் என்று பிரிக்கப்பட்டிருந்தன. இவை முறையே இன்றைய மண்டலம் (Zone), மாவட்டம், வட்டம், ஊர் என்பதற்கு ஒப்பானவை. விஜயநகர ஆட்சிக் காலத்தில் இப்பிரிவுகள் முறையே ராஜ்யம், விஷயம்/கோஷ்டம், சீமை, ஸ்தலம் எனப் பெயரிடப்பட்டன. இவற்றில் சீமை எனும் சொல் தென் தமிழகத்தில் இன்றும் பெருவழக்கிலுள்ளது. இன்று உள்ளூர்/உள்நாட்டு மக்களையும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களையும், நாட்டுக்காரர்கள், நாட்டுத் துணி, நாட்டுச் சரக்கு என்று வழங்குகின்றனர். வெளியூர் /வெளிநாட்டு மக்களையும் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களையும் சீமைக்காரர்கள், சீமைத் துணி, சீமைச் சரக்கு என்று வழங்குகின்றனர். இன்று, சீமை என்றாலே வெளிநாடு என்று பொருள் கொள்ளப்படுகிறது. தமிழரசர்கள் நாடு என்றிட்ட பிரி​வைத் தெலுங்கரசர்கள் சீமை என்று வழங்கியது தமிழர்களிடம் அப்படியே பதிவாகியிருக்கிறது.

ஆனால் விஜயநகர ராயர்களால் பெரிதும் ஆளப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தென் மாவட்டங்கள், இதர கடலோர ஆந்திரம் மற்றும் தெலுங்கானா பகுதிகளைச் சேர்ந்த தெலுங்கர்களால் இன்றும் ராயுலுசீமா என்றே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

-  யுவபாரதி 

(அடுத்தது)

No comments: