March 27, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-5)

முடியரசுக் காலகட்டத்தில் அரசியல் அதிகாரத்துக்கும் மத நிறுவனங்களுக்கும் உள்ள ஒட்டுறவு பிரிக்க முடியாதது. ஐரோப்பிய அரசுகளின் மீதான வாட்டிகன் போப்பாண்டவரின் செல்வாக்கும், இஸ்லாமிய அரசுகளின் மீதான கலீஃபா/உலமாக்களின் செல்வாக்கும் உலக வரலாறு அறிந்ததே. இதையொப்பத் தென்னிந்திய அரசர்களின் மீது ஸ்மார்த்த அத்வைத (சங்கர) மடங்களின் செல்வாக்கு கால்கொண்டது.

விஜயநகரப் பேரரசும் சங்கர மடமும்

பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடஇந்தியப்பகுதிகள் மட்டுமின்றி, ஹொய்சள ராச்சியத்தைத் தவிர பெரும்பாலான தென்னிந்திப் பகுதிகளும் டெல்லி சுல்தான்களின் கீழ் வந்தன.  ஹொய்சள மன்னன் மூன்றாம் வல்லாளனின் உறவினராகவும், அவரது நாட்டின் வடபகுதிகளை ஆண்டுவந்தவராகவும் இருந்த ஹரிஹரனும், அவர் சகோதரன் புக்கனும் வடபுலப் படையெடுப்புகளைத் தடுக்கும் நோக்கோடு துங்கபத்திரை நதிக்கரையில் வித்தியாரண்யரைச் சந்தித்தனர். அவர் ஆலோசனையின் பேரில் ஒத்துழைப்போடு கி.பி.1336-இல் விஜயநகரத்தை நிர்மாணித்தனர். கி.பி.1343-ல் மதுரை சுல்தான் கியாசுதீன் தம்கானியுடன் நடந்த போரில், மூன்றாம் வல்லாளன் வஞ்சகமாகவும் கொடூரமாகவும் கொல்லப்பட்டதையடுத்து,ஹொய்சள ராச்சியம் ஹரிஹரனின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது.

வித்யாரண்யருடன் ஹரிஹரர், புக்கர்
இந்த வித்தியாரண்யர் கி.பி.1331-இல் தமது 36-வது வயதில் (தற்போது கருநாடகத்தின் உடுப்பி அருகிலுள்ள) சிருங்கேரி சங்கரமடத்தின் 12-ஆவது பீடாதிபதியாக அமர்ந்தவர். இயற்பெயர் மாதவன். கன்னடப் பிராமண வகுப்பினர். விஜயநகர ராயர்களின் ராஜகுருவாய் இருந்தார். இவரது சமஸ்கிருத நூலான சர்வமத சங்கிரகத்தில் அக்காலத்தில் தென்னாட்டிலிருந்த சாருவாகம், பெளத்தம், ஜைனம், சைவம், பாசுபதம் முதலான சமயநெறிகளை விளக்கி, அவற்றினும் சிறந்ததென சங்கரரின் அத்வைதத்தை நிலைநாட்டுவார். 

இவரது சகோதரர் சாயணன் வேதார்த்தப் பிரகாசிகை என்ற பெயரில் வேதங்களுக்கு விரிவுரை எழுதினார். பல அத்வைத, சமஸ்கிருத இலக்கண நூலாசிரியர் சாயணர். முதல் மூன்று விஜயநகர ராயர்களுக்கு அமைச்சராகவும் இருந்தார்.

தலைக்கோட்டைப் போரை அடுத்து விஜயநகர அரசு ஆந்திரத்திலுள்ள பெனுகொண்டாவிற்கு நகர்ந்ததை அடுத்து, அருகிலுள்ள புஷ்பகிரியில் (தற்பொழுது கடப்பா மாவட்டம்)அத்வைத சங்கர மடக்கிளை நிறுவப்பட்டது.

கிருஷ்ண தேவராயரின் தம்பியும் துளுவ மரபின் நான்காவது பேரரசருமான அச்சுதராயரது மனைவியின் தங்கையை மணந்த தஞ்சை அல்லூரி சேவப்ப நாயக்கரது விருப்பத்திற்கிணங்க கும்பகோணத்திலும் சங்கரமடக் கிளை வந்தது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர அரசின் இறுதிக்கால அரசர்கள் வடாற்காட்டு (இராய)வேலூரிலிருந்த ஆண்ட காலத்தில் கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரத்தில் கிளைவிட்டது சங்கரமடம்.

ஆதிசங்கரர் கேரளத்தில் பிறந்தவர் எனினும் அவரது குருநாதர் ஆந்திரரான கோவிந்த பாதர். சங்கரர் நிறுவிய அத்வைத மடங்கள் நான்கு - வடக்கே பத்ரிநாதம்; மேற்கே துவாரகை; கிழக்கே பூரிஜகந்நாதம்; தெற்கே சிருங்கேரி. அவரது காலமான கி.பி.8-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வைதீக நெறி சைவ - வைணவ நெறிகளின் தொடர்புடனே இருந்தது. பாசுபத சைவம் மட்டுமின்றி காஷ்மீர சைவமும் சோழர் காலத்தில் செல்வாக்குப் பெற்றது. இவை பெரிதும் ஆகம வயப்பட்டவை. பிற்காலச் சோழர் ஆட்சியிலும், பாண்டியர் ஆட்சியிலும் பல பார்ப்பனர்களைப் படைத்தலைவர்களாகப் - அநிருத்தப் பிரம்மராயர், கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர், அருண்​மொழியான மும்முடிச் ​​சோழப் பிரம்மாதிராயர் என்றோ, வேள்வி இயற்றும் வைதீகர்களையோ காண்கிறோம். ஆனால் அத்வைத வைதீகர்களைக் காண்பதில்லை. மெய்கண்டதேவர் சித்தாந்த சைவம் வகுத்ததும், இராமானுஜர் விசிஷ்டாத்வைத வைணவம் வகுத்ததும் பிற்கால குலோத்துங்கர்கள் ஆட்சிக்காலத்தவை. நெறிகள் தத்துவ அடிப்படை கொண்ட சமயங்களாக இறுகிய காலம் அது.

தமிழ்ப் பிராமணக் குலங்களில் பலவும் (ஐயர் பிரிவில் பல) சங்கர அத்வைதத்தை ஏற்றுக் கொண்டது விஜயநகர ஆட்சிக் காலத்திலேயே நேர்ந்திருக்கலாம். ஆட்சியதிகார நெருக்கத்தோடு தமிழகம் வந்த தெலுங்கு மற்றும் கன்னடப் பிராமணர்களைக் கண்டும், பின்பற்றியும் ஸ்மார்த்த அத்வைதத்தை உள்வாங்கிய வீதத்தின் அளவிலேயே அவற்றுக்கிடையிலான உயர்வு தாழ்வும் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். 

விஜயநகர ராயர் ஆட்சியிலும், நாயக்கர் அரசுகளிலும் தெலுங்குப் பிராமணர்கள் அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் ஆதிக்கம் பெற்றிருந்தனர். 

மருத்துவர்களான அம்பட்டர்கள் எனும் மாத்தியர்கள்

அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக இருந்த திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகரைத் தெரியாத தமிழர் இலர். இவர் மாத்திய குல அந்தணர் எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு.

'வைத்தியர் ஆயுள்வேதியர் மருத்துவர்
ஆரியர் கடகர் ஆமாத்தியரே'

என்று வைத்தியரைக் குறிப்பிடும் சொற்களை வரிசைப் படுத்தும் அபிதான மணிமாலை என்ற நிகண்டு (செய்யுள் -235).

'ஆயவளம் பதியதனின் ஆமாத்தியரில் அருமறையின்
தூய சிவாகம நெறியின் துறை விளங்க... '

வந்தவர் மணிவாசகர் என்று கூறும் திருவிளையாடற் புராணம் (வாதவூரருக்கு உபதேசித்த படலம்-செய்யுள்4).

'மன்னுமிந் நகரிதன்னுள் மானமங்கலத்தார் ஆகுந்
தொன்னெறி முனிவராம் ஆமாத்தியர் தொழுகுலத்து
நன்னெறி விடையிற் போந்தார் நண்கணத் தலைவர் நாமம்
மின்னெறி வாதவூரர் என்றுவந் துதயஞ் செய்தார்'

என்று கூறும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (ஞானோபதேசம்-செ.6.)

இதே குலத்தைச் சேர்ந்தவரெனக் குறிப்பிடப்படும் புகழ்பெற்ற மற்றொருவர் பெரியபுராணம் சுட்டும் சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்​சோதியார். பல்லவப் பேரரசன் முதலாம் நரசிம்மவர்மனுக்காகப் படைநடத்தி வாதாபி வென்றவர். இவர் காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டு. இவர் கொணர்ந்த வாதாபி கணபதி இவரது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடி (குடந்தை-நாகை மார்க்கத்தில் திருமருகல் அருகே) சிவன் கோயிலில் உள்ளது.

'ஆயுர்வேதக் கலையும் அலகில் வடநூற் கலையும்
தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயிற்று... '
விளங்கியவர் பரஞ்சோதியார் என்று கூறும் பெரிய புராணம் (சிறுத்தொண்டர்-செய்யுள்3).

'மாமாத்திரரே  பிடகர் மருத்துவர் ஆயுள்வேதியர்க் கபிதானம்மே' என்று ஆயுள்வேதியரை குறிப்படும் சொற்களைக் கூறும் பிங்கல நிகண்டு (செய்யுள் 784).

கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் சடையவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் காலத்தில் அமாத்தியராக (அமாத்தியர்-அமைச்சர்) இருந்தவர் மாறன் காரி. மதுரகவியார் எனப்படுபவர் இவர். பராந்தகன் ஆணைக்கிணங்க வேள்விக்குடிச் செப்பேடுகளை வெட்டுவித்தவர் இவர் (வைத்ய சிகாமணி மாறன் காரி) என்று அச்செப்பேடும் கூறும் . ஆமாத்திய குல அந்தணரான இவர் மூவேந்த மங்கலப் பேரரையன் எனும் பட்டம் பெற்றவர். மதுரையை அடுத்த ஆனைமலைப் பெருமாள் கோவில் இவர் கட்டுவித்தது. அதில் நரசிங்கப் பெருமாள் திருமேனியை நிறுவியவரும் இவரே.

இதே பாண்டியன் காலத்துச் சீவரமங்கலம் செப்பேட்டில் ஆணத்தியாகக் (தலைமைச் செயலாளர்) குறிப்பிடப்படுபவன் வாத்ய கேய சங்கீதங்களால் மலிவெய்திய வைத்திய குலத்தவனான தீரதரன் மூர்த்தி எயினன் என்கிற வீர மங்கலப் பேரரையன் ஆவான். இவ்விருவரையன்றி சங்கரன் ஸ்ரீதரன், சாத்தன் கணபதி முதலான பலரும் இக்காலத்தில் மங்கலப் பேரரரையன் பட்டம் பெற்ற அரசியல் தலைவர்களாக இருந்திருக்கின்றனர்.

வாத்ய கேய சங்கீதமென்பது வாத்திய மற்றும் வாய்ப்பாட்டு இசை. மங்கலப் பேரரையன் என்பது அரசியல் தலைவர்களாக இருந்த ஆமாத்திய குல அந்தணர்களில் சிலருக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்டமாகும்.

'சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து அம்பட்டன் உத்தமசோழனான இராஜசோழ பிரயோகத்தரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் இவ்வூர்ச் சல்லியக் கிரியை' என்று கி.பி.1016-ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவிசலூர்க் கல்வெட்டு (தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 23 ஏ.ஆர்.350 ப.241) வைத்திய குலத்தாருக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் குறிப்பிடுகிறது. பிரயோகத்தரையன் என்றால் அறுவைச் சிகிச்சை நிபுணன் என்று பொருள். மங்கலம் என்ற பெயரில் வைத்திய குலத்தாரும் நிலம் பெற்றிருப்பதை இது காட்டுகிறது. மேலும் மங்கலியன் (பிங்கலநிகண்டு-804), மங்கலி (அபிதான மணிமாலை-336) என்ற பெயர்கள் இவர்களுக்குரியன என நிகண்டுகள் குறிக்கின்றன. மங்கலச் சமூகம் என்ற பெயர் இன்றும் இவர்களைக் குறித்து நிற்கிறது. 

இவற்றைக் காண, பல்லவர் காலம் முதல் பிற்காலப் பாண்டியர் காலம் வரை ஆயுர்வேதக் கலையும், வடநூற் கலையும், இசைக் கலையும் கற்றுப் படைக்கலத் தொழிலும், அமைச்சர் பணியும் புரிந்து அந்தணர்களாக வைத்திய குலத்தார் இருந்தது தெரிகிறது. இன்றும் இக் குலத்தார் ( பண்டிதர், மருத்துவர், நாவிதர், மங்கலர் ) இசையிலும் மருத்துவத்திலும் திறன் மிக்கவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பிற்காலப் பாண்டியப் பேரரசுக்குப் பின் விஜயநகரப் பேரரசே தமிழகத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல் நிலைபெற்றது என்பது கருதத்தக்கது. அதன் பின்னர் இச்சமூகம் குறித்து உயர்வான பதிவுகள் இல்லை. கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை மதிப்புடன் நோக்கப்பட்ட ஒரு சமூகம் அடுத்த ஆட்சிக்காலத்தே தாழ்ந்ததென வீழ்த்தப்பட்டதற்கான சமூக / அரசியல் காரணங்கள் தனியே ஆராயத் தக்கது.

- யுவபாரதி 


4 comments:

Anonymous said...

This series is really wonderful. Thank you for your hard work to bring so much information in this series. Continue the good work.

ஹரிஹரன் said...

தெளிவான விசயங்கள்... காஞ்சி சங்கரமடம் தொடர்பான விசயங்கள் பலருக்கு தெரிவதில்லை, எனக்கு தோன்றிய கேள்விகளை நமது களத்தில் பதிந்து இருக்கிறேன்.. மாணிக்கவாசகர் மருத்துவர் குலத்தை சேர்ந்தவர் என்பது புதிய தகவல் எனக்கு.. தொடருங்கள் இந்த தேர்தல் கலாட்டாவில் உங்கள் பதிவை விட்டுவிட்டேன்..

http://bit.ly/fvUXem

Dr. V. Pandian said...

உங்கள் தொண்டுக்கு எனது நன்றியும், பாராட்டும், வாழ்த்துகளும்.

அம்பட்டன் என்ற பெயருக்கான ஒரு திருத்தம் சொல்கிறேன்.


அம்பட்டன் = அம்+பட்டன்

அம் என்றால் அழகிய என்று பொருள். சான்றாக அங்கயற்கண்னி - அழகிய மீனைப் போன்ற கண்களை உடையவள்.

பட்டன் - பட்டுத் துணியைக் கொண்டு நாடி பார்ப்பவன்.

ஆக, அம்பட்டன் என்பவன் அழகிய பட்டுத் துணியைக் கொண்டிருப்பவன். அதாவது மருத்துவன் என்பது பொருள்.

எனவே, உயர்ந்த அந்தணன் என்று பொருள் படாது. உங்களின் கட்டுரைப்படியும் அவன் மருத்துவனே.

சுமனன் said...

நேர்த்தியான வரலாற்று குறிப்புகள்!

இலங்கை யாழ்ப்பாண சாதிய மரபுப்படி அம்பட்டன் என்பது தலைமுடி திருந்தும் வகுப்பினரை குறிக்கிறரது,இதற்கு என்ன மூலம் என தெரியவில்லை!

அத்துடன் இலங்கை கண்டி நாயக்க வம்ச அரசர்கள் தமிழில கையெழுத்திட்டுள்ள ஆதாரங்களும் உள்ளன, உங்கள் கட்டுரை தொடர்சியில் இலங்கை கண்டி நாயக்க வமிசத்தவரைப்பற்றிய தொகுப்பையும் இணையுங்கள்!