October 07, 2011

பரமக்குடி படுகொலைகள் : உண்மை அறியும் குழுவின் அறிக்கை(பரமக்குடி படுகொலைகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்ட ஓவியர் சந்துருபேராசிரியர்கள் டி.தருமராஜன், சி.லட்சுமணன், அன்புச்செல்வம், ஸ்டாலின் ராஜாங்கம்எழுத்தாளர்கள் யாழன் ஆதி, ஆதவன் தீட்சண்யா, யுவபாரதி, கவின்மலர், சந்திரா, முத்துக்கிருஷ்ணன், ஜெகன்னாதன்வழக்குரைஞர்கள் பால்ராஜ், பகத்சிங், ராமகிருஷ்ணன்பத்திரிகையாளர்கள் பிரேமா ரேவதி, வையவன் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவினரின் அறிதல்களின் (Findings) அடிப்படையில்...)2011 செப்டம்பர் 11ம் நாள் பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய கலவரத்தினை முழுமையாக ஆராய்வதற்காக கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் பரமக்குடியில் பாதிக்கப்பட்ட கிராமங்கள், பாதிக்கப்பட்ட மக்கள், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துத் திரட்டிய செய்திகளின் அடிப்படையில் கீழ்கண்ட தரவுகளும், பரிந்துரைகளும் முன் வைக்கப்படுகின்றன.  21.09.11 காலை 11 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பிற்காக வெளியிடப்படும் சுருக்கமான அறிக்கை இது.  

• பரமக்குடியில் காவல்துறை நடத்திய வன்முறை குறித்து ஊடகங்களும், அரசாங்கமும் வெளியிட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை அல்லது மேலோட்டமானவை என்பதை எங்களின் ஆய்வின் மூலம் கண்டோம்.  

• திரு. ஜான்பாண்டியன் அவர்களைக் கைது செய்ததால் அவரது ஆதரவாளர்கள் 1000 பேர் சேர்ந்து மறியல் செய்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கலவரங்களில் ஈடுபட்டனர் என்று கூறுவது முழுக்க கட்டுக்கதை கற்பனை என்பதை நேரடியான சாட்சியங்கள் (மக்கள், உள்ளூர் தலித் அமைப்புகள், வீடியோ மற்றும் புகைப்பட சாட்சியங்கள்) மூலம் அறிந்தோம். ஜான் பாண்டியனை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சுமார் 20லிருந்து 30 பேர் மட்டுமே. ஆர்ப்பாட்டம் நடக்கும் போது அஞ்சலி செலுத்தும் பல்வேறு அமைப்பினர் வாகனங்களில் சென்றும் வந்தும் கொண்டிருந்தனர். அதே போல் இம்மானுவேல் குரு பூஜைக்காக போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டு குறிப்பிட்ட அச்சாலை குருபூஜைக்கான பயன்பாட்டில்தான் இருந்து வந்தது. எனவே அன்றைக்கு  ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பெரும் திராளனவர்கள் என்று சொல்வதோ, போக்குவரத்திற்கு இடையூறு செய்தவர்கள் என்று கூறுவதோ காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்த வலிந்து சொல்லப்படும் பொய் என்றே அறிகிறோம்.  

• மறியல் செய்தவர்களைக் கலைப்பதற்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் எதையும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதை களத்தரவுகள் நிரூபிக்கின்றன. முதல் சூடு நெற்றியை நோக்கியே செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான உடல்களில் குண்டு காயம் இடுப்புக்கு மேலே தான் உள்ளது. காலை சுமார் 11.30 மணியளவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதும் கூட்டம்சிதறியது. ஆனால் மாலை 5 மணி வரை காவல்துறை துப்பாக்கி சூட்டை மீண்டும் தனித்த முறையில் நடத்தியிருக்கிறது. அதில் மறியலோடு தொடர்பில்லாமல் கையில்கிடைப்போரையெல்லாம் சுட்டதோடு, அவர்களை பிடித்து வந்து கடுமையாகத் தாக்கவும் செய்துள்ளனர் (வீடியோ ஆதாரம்) இவ்வாறு மாலை 4 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த தீர்ப்புக்கனி என்ற டிப்ளமோ படித்த 21 வயது இளைஞரைப் பிடித்து அடித்தே கொன்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.  

• ஊடகங்களில் வெளியானது போல் காவல் துறையினரது வஜ்ரா வாகனம் பிற வாகனங்களும் மக்களால் தான் கொளுத்தப்பட்டன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. தங்களது துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த விரும்பிய காவல் துறையினரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதைப் பலரின் சாட்சியங்கள் மூலம் சந்தேகமாக கருதுகிறது. ஏனெனில் வஜ்ரா வாகனம் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் மக்கள் சிதறி ஓடிவிட்டதால் முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதை தக்கசான்றுகள் மூலம் அறிகிறோம்.  

• சட்டபேரவையில் முதலமைச்சரும், ஊடகங்களும் தெரிவித்ததைப் போல இது இனக்கலவரம் அல்ல. மாறாக எளிமையாக கையாண்டிருக்கக் கூடிய விசயத்தை சிக்கலாக மாற்றிய காவல்துறையின் வன்முறை என்றே சொல்ல முடிகிறது. ஒடுக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களின் அரசியல் எழுச்சியை மட்டுப்படுத்துவது அதன் மூலம் இம்மானுவேல் குருபூஜைக்காக திரளும் அந்த வகுப்பார் மீது சாதிக் காழ்ப்பு கொண்டு செயற்படும் ஆதிக்க வகுப்பினரைத் திருப்திபடுத்துவது என்பதே அரசாங்கம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் நோக்கம் என்பதை அறிக்கையின் மூலம் தெரிகிறது.  

• துப்பாக்கிச் சூட்டிலும், காவல்துறையின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. உரிய 3சிகிச்சையும் உடனடியாக அளிக்கவில்லை. தாக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய தகவல்களை அளிக்கவில்லை  என்று அலைக்கழிக்கப்பட்டுள்ளனர், ஒருவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறியாமலேயே பிணவறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  

• துப்பாக்கிச்சூடு, தாக்குதல் போன்றவற்றோடு நில்லாத காவல்துறை பல்வேறு கிராமங்களிலுள்ள தலித்துகள் மீது பொய் வழக்குகள் புனைந்து அவர்களை கைது செய்யத் தேடிக் கொண்டிருப்பதால் எந்த கிராமத்திலும் இப்போது ஆண்கள் இல்லை. பெண்களும், குழந்தைகளும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதை எங்கள் குழுவினர் அறிந்தோம். தலித் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் பொருட்டு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எச்.பரளை என்ற கிராமத்தில் 18.09.2011ம் நாளில் பயிற்சி என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட போலீசார் தெருவுக்குள் இறங்கி, கற்களை வீசுதல், டயர்களை எரித்தல், இரு தரப்பு மோதல் என்றெல்லாம் இரண்டு மணி நேரமாக முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்த நிலையில் அச்சமூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

• வன்முறையாளர்கள் சுட்டதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் சுடப்பட்ட பேரில் ஒருவர் கூட ஜான்பாண்யன் ஆதரவாளர்களாக இல்லை என்பது  குறிப்பிடத்தக்கது.  

• இத்துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோர் மற்றும் காயமுற்றோர் குறித்த முழுமையான தகவல்களைச் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கோ பத்திரிகைகளுக்கோ இதுவரை காவல்துறை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கவில்லை. மாறாக அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது.  

• கலவரத்திற்கு காரணமாக தமிழக அரசு கூறும் பள்ளப்பச்சோரி சம்பவம் முழுக்க இட்டுக்கட்டப்பட்டது. அச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே எம்குழுவின் ஆய்வு. பள்ளப்பச்சேரியில் தேவரை இழிவுப்படுத்தி எழுதியதாக கூறப்படுவதற்கும், பழனிக்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை அவரை இழிப்படுத்தி எழுதியதையோ, எழுதியவரையோ கண்ணுற்றவர் எவருமில்லை. மேலும் எழுதியதாகக் கூறப்படும் இடம் முழுக்க முழுக்க தேவர் வகுப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள இடம். எனவே இச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் தொடர்பில்லை. ஜான்பாண்டியனை தக்க பாதுகாப்போடு குருபூஜைக்கு காவல்துறையினர் அழைத்து வந்திருக்க முடியும். 

பரிந்துரைகள் 

• காவல்துறையின் தாக்குதலால் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் வழக்குகளுக்கு பயந்து மருத்துவமனையில் சேர்ந்து உரிய சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். எனவே தலித்துகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.  

• தாக்குதலில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்தால் அதைSC/STவன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு மாற்றி பாதிக்கப்பட்டோருக்கு அதனடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.  

• இறந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் நிவாரணமும், தகுதியானோருக்கு தகுதியான அரசுப் பணிகளையும் வழங்க வேண்டும்.  

• இத்தாக்குதல் குறித்து விசாரிக்க அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ விசாரணை வேண்டும்.  

• விரிவான பொது விசாரணை வேண்டும். 


-  யுவபாரதி

No comments: