May 04, 2020

கொல்வான், அக்கள்வன் மகன்

பிள்ளைப் பருவத்திலிருந்தே அவளுக்குத் தெரிந்தவன் அவன். தோழியோடு சேர்ந்து கட்டிய மணல் வீட்டைத்  தன் காலால் சிதைத்து ஓடியவன். தலையில் சூடிய பூச்சரத்தைப் பிய்த்தெறிந்து அழவிட்டவன். தோழியோடு, பந்து விளையாடினால் அதையும் பறித்துக்கொண்டு ஓடிக் கதறவிட்டவன். ஒருத்தருக்கும் அடங்காதவன்.

ஒரு நாள், வீட்டில் அவளும் அவளது அன்னையும் இருக்கின்றனர். வாசலில் வந்து நின்று, குடிக்க நீர் கேட்கிறான் அவன். பொற்கலயத்தில் நீர் மொண்டுபோய்க் கொடுக்குமாறு சொல்கிறாள் அன்னை. வந்திருப்பவன் அவன் என்று தெரியாமல் அப்படியே செய்கிறாள் அவள். நீர் கொடுக்கச் சென்றவளின் கையைப் பிடித்து இழுக்கிறான் அவன். 'இவன் செய்கிற காரியத்தை வந்து பாரம்மா' என்று அலறுகிறாள் அவள். பதறி ஓடி வருகிறாள் அன்னை. 

உடனே, 'நீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் வந்துவிட்டதம்மா' என்று சமாளிக்கிறாள் அவள். உண்மை தெரியாத அன்னையோ, 'மெதுவாய்க் குடித்தால் என்ன?' என்றபடி அவன் முதுகை நீவிக் கொடுக்கிறாள். அவளைக் கொல்வது போல் பார்த்துக் கண்ணால் சிரிக்கிறான் அவன்.

நடந்தது நடந்தவாறு தன் தோழியிடம் நேர்ப்பேச்சில் அவள் கண்விரியச் சொல்வது போல் அமைகிறது குறிஞ்சிக்கலியில் வரும் இப்பாடல்:

"சுடர்த் தொடீஇ! கேளாய் - தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலில் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லீரே!
உண்ணுநீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை
'அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா' என்றாள்; என யானும்
தன்னை அறியாது சென்றேன்' மற்று என்னை

வளைமுன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்! என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத், தன்னை யான்,
'உண்ணுநீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ; மற்று என்னைக்

கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!"

இப்பாடலில் தொனிக்கும் சீண்டலும் சிலிர்ப்பும் சொல்முறையும் ஒருமுறையேனும் இதைத் திரும்பவும் படிக்கத் தூண்டும்.

#கலித்தொகை

No comments: