January 28, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-1)

(கி.பி.1540-இல் விஜயநகரப் பேரரசு)
(தமிழகத்தில் இராயவேலூர் முதல் இராஜபளையம் வரை, கோயம்புத்தூர் முதல் கோடியக்கரை வரை நிலவுடைமையும் வணிகமும் சமய அதிகாரமும் கணிசமான அளவில் சில தெலுங்கு பேசும் மக்கள் வசமுள்ளது. இன்றும் தமிழகத்தின் ஆட்சி-அதிகாரத்தில் பெரும் பங்கினைத் தெலுங்கு பேசுவோர் பெற்றிருக்கின்றனர்.தமிழிசை தெலுங்கிசையாகத் திரிந்து, தமிழிசை வளர்த்த காவிரிக்கரை தெலுங்கிசைக்குத் தொட்டிலாகியிருக்கிறது. தமிழில் பெருநூல்கள் எழுந்த காலம் மறைந்து சிற்றிலக்கியங்களே எழுந்த காலத்தில், இதே தமிழகத்தில் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் பெருநூல்கள் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல், முழுமையாக ஆங்கிலேயர் ஆட்சிக்கு உள்ளான 19-ஆம் நூற்றாண்டு வரை அரசர்களாகவும் பாளையக்காரர்களாகவும் இருந்து தமிழகத்தை ஆண்ட தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாயக்கர்களின் வரலாற்றை  அறியவேண்டியிருக்கிறது. அதற்கான ஒரு முயற்சியாகவே இத்தொடர்.)


"விஜயநகரப் பேரரசு ஆட்சியைத் தொடங்கிய காலம் முதல், ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கும் காலம் வரையிலன காலம், தமிழரல்லாத இந்தியர்கள் - தமிழரல்லாத அந்நியர்கள் ஆண்ட காலம், தமிழர்கள் ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள் வெறுப்பு ஊஞ்சலை ஆட்டிவிட்டுப் பிறரை ஊஞ்சலில் வைத்து ஆட்டி, ஓகோவென்று புகழ்ந்து அந்நியர் ஆட்சிக்கு ஆலவட்டம் சுற்றிப் பல்லக்குத் தூக்கிய காலம்" என்பர் பேரா. ந.க.மங்களம் முருகேசன் மற்றும் இராஜம் ஆகியோர். இன்று வரையிலும் கூட அதுவே தொடர்கிறது என்பதே உண்மை.

விஜய நகரப் பேரரசு

கி.பி.1336-இல் முதலாம் ஹரிஹரனும் முதலாம் புக்கனும் குரு வித்யாரண்யரின் துணையோடு விஜய நகரப் பேரரசை நிறுவினார்கள் என்பதைப் பள்ளிப் பாடநூல்களில் படித்திருப்போம். இன்று கருநாடக மாநிலத்தில் பெல்லாரியிலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், ஹாஸ்பெட் இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் சிதைந்த நிலையில் இருக்கிறது விஜயநகரம். விஜயநகரத்தைச் சங்கமர், சாளுவர், துளுவர், ஆரவீட்டார் ஆகிய நான்கு மரபினர் ஆட்சி புரிந்தனர். சங்கம,  சாளுவ, துளுவ மரபினர் கன்னடத்தையும், ஆரவீடு மரபினர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பர். எனவே கன்னடமும்,  தெலுங்கும் பேரரசின் ஆட்சி மொழிகளாக இருந்தன.

இராஜ நாராயணச் சம்புவராயர்

இக்காலத்தே தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் சம்புவராயர் மரபைச் சேர்ந்த இராஜ நாராயணன் (கி.பி.1339-1363) என்பவர். சம்புவராயர்களின் அரசிற்குப் படைவீடு ராச்சியம் என்று பெயர். இராஜ நாராயணனின் தலைநகரம் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கியது படைவீடு ராச்சியம். சம்புவராயர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா நாட்டிலிருந்து வந்தவர்கள். சங்க இலக்கிய நூலும், பத்துப்பாட்டில் ஒன்றுமான சிறுபாணாற்றுப்படை ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது என்பதைப் படித்திருக்கலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட படையாட்சிகள் எனப்படும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள்.

குமார கம்பண உடையார்

சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் புக்கனின் மகனான குமார கம்பண உடையாரே தமிழகத்தைக் கைப்பற்றி விஜய நகரப் பேரரசிற்கு உட்படுத்தியவர்.  இவரது மனைவியான கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம் (வீர கம்பராய சரித்திரம்) என்ற சமஸ்கிருதக் காப்பியம் குமார கம்பணனின் தமிழகப் படையெடுப்பை விளக்குகிறது. கி.பி.1362 நவம்பர் மாதத்தில் இராஜ நாராயணச் சம்புவராயருடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றி அவரை விஜயநகரப் பேரரசிற்கு அடங்கி ஆட்சி புரியுமாறு செய்தார் குமார கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையைச் சிற்றரசர்களிடமிருந்தும்,மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினார். மாநில ஆளுநர் பதவியான மகாமண்டலேசுவரராகவும் ஆனார்.

மகா மண்டலேசுவரரும் நாயக்கரும்

விஜயநகர  அரசின் இலச்சி​னை
மகாமண்டலேசுவரர் தண்டநாயகர் எனப்படுவார். குறைந்த மதிப்புள்ள காசுகளை இவர் வெளியிடமுடியும். சட்டம்-ஒழுங்கு நிருவாகப் பொறுப்பும் வரிவிதிப்பு-வரித்தள்ளுபடி செய்வதற்கான உரிமையும் இவருக்கு உண்டு. இவர் அரசின் நேரடிப் பிரதிநிதி. பேரரசருக்குத் திறை செலுத்தத் தேவையில்லை. மகா மண்டலேசுவரர்கள் பேரரசரால் இடமாற்றம் செய்யப்படுவர்.

விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள். இது தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வந்த தனிநபருக்கு உரிமையுள்ளதும் தத்தம் இரத்த உறவுகளுக்குள் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ளத் தக்கதுமான காணியாட்சி முறைமைக்கு முற்றிலும் மாறுபட்டது.விஜயநகர அரசர்கள் தமக்கு நம்பிக்கையான படைத்தலைவர்களுக்கு நிலங்களை வழங்கினர். இவ்விதம் பெற்றவர்களே அமர நாயக்கர்கள். அமர நாயக்கர் என்பதற்கு ஆயிரம் காலாட்படைத் தலைவர் என்பது பொருள். இவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையினை ஆண்டுதோறும் அரசருக்கு வழங்க வேண்டும் இதுவே திறை. மட்டுமின்றி போர்க்காலங்களில் நாயக்கர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள காலாட்படை, குதிரைப்படை, யானைகள் முதலானவற்றை அரசருக்கு அளிக்கவேண்டும். நாயக்கர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில்லை.

முற்றிலும் நிலமானிய முறையிலும் இராணுவ முறையிலும் அமைந்திருந்த இவ்வரசுமுறை கிராமக் குடியாட்சிக்கு எவ்வகையிலும் ஏற்றதல்ல என்பர்.

பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்திலேயே மகாமண்டலேசுவரருக்குப் பதிலாக நாயக்கர் முறை தோன்றியது.

- யுவபாரதி 

(அடுத்தது)

உசாத்துணை:

1. மதுரை நாயக்கர் வரலாறு / அ.கி.பரந்தாமனார் / பாரி நிலையம்.
2. தமிழக ஆட்சிமுறை - விஜயநகரப் பேரரசு முதல் நவாபுகள் வரை / ந.க.மங்கள முருகேசன் & இராஜம் / பாரி நிலையம்.
3. தென்னாட்டுப் போர்க்களங்கள் / கா.அப்பாதுரையார்/பூம்புகார் பிரசுரம்
4.தமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு / தஞ்சை நா.எத்திராஜ் / ராமையா பதிப்பகம்
5. http://en.wikipedia.org/wiki/Balija_dynasties
8. Social Changes among Balijas / Vijaya Kumari & Sepuri Baskar
9. தமிழக வரலாறும் பண்பாடும்/ ​​வே.தி.​செல்வம்/மணிவாசகர் பதிப்பகம்.
10. ​தென்னிந்திய வரலாறு - ​தொகுதி 2 / ​கே.​கே.பிள்​ளை / பழனியப்பா பிரதர்ஸ்.
11. பாண்டியர் வரலாறு / தி.சு.சதாசிவப் பண்டாரத்தார் / மணிவாசகர் பதிப்பகம்.
12. மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாறு / தங்கம் விசுவநாதன்/ நந்தினி பதிப்பகம்.
13. http://www.sishri.org/  
14.  பிங்கல நிகண்டு / பதிப்பாசிரியர்: சு.இலம்போதரன் / கமலகுகன் பதிப்பகம்.
15. அபிதான மணிமாலை / பதிப்பாசிரியர்: சு.பாலசாரநாதன் / உ. வே.சா. நூல் நிலையம். 
16. Nayaks of Tanjore / V.Vriddhagirisan

4 comments:

Anonymous said...

We are eagerly waiting for your essay on this topic. A marvelous job. Kindly go -on.
Thanking you,
An Enslaved Tamil.

ஹரிஹரன் said...

அருமையான கட்டுரைகள்..

உங்கள் இந்த கட்டுரைகளை தமிழ்நாடுடாக்.காமில் எடுத்து பதிந்துள்ளேன். விவாதங்களில் கலந்து கொண்ட்டால் நன்றாக இருக்கும்..

http://bit.ly/eSroqQ

இரா.மணிகண்டன் said...

அன்புள்ள ஹரிஹரன், தமிழ்நாடுடாக்.காமில் விவாதங்கள் பார்த்​தேன்.

"நாயக்கர் ​​வேறு, நாயுடு ​வேறு" என்று ஒருவர் (​தென்னவன்?) குறிப்பிட்டிருந்தார். "நாயக்க" என்ற ​வடசொல் தமிழில் த​லைவன் என்ற ​பொருளு​டையது. நாயக்க > நாயக்கடு > நாயுடு என்று ஆனது. ஆக நாயுடு என்பதுவும் ஒரு பட்ட​மே. கம்மா,பலிஜா,​தொட்டியர், கம்பளம், கவ​ரை என்ப​​வை சாதிகள். தமிழர்களாகிய வன்னியரும் வடமாவட்டங்களில் நாயக்கர் பட்டம் தரிப்பர்.

"பலிஜா நாயுடுகளுக்குத் ​தெலுங்கு மட்டு​மே தாய்​மொழி; கன்னடமல்ல" என்றும் அவர் கூறியுருந்தார். ​பலிஜர்களில் ​தெலுங்​கைத் தாய்​மொழியாகக் ​கொண்டவர்களும் உண்டு; கன்னடத்​தைத் தாயங​மொழியாகக் ​கொண்டவர்களும் உண்டு. யாவரும் அறிந்த ​பெரியார் ஈ.​வே.ரா. கன்னடத்​தைத் தாய்​மொழியாகக் ​கொண்ட பலிஜர். பலிஜர் குறித்த ​​மேலதிக விவரங்களுக்கு en.wikipedia.org-இல் ​Balija (Caste) என்று ​​தேடவும். நன்றி.

Thanjavooraan said...

அன்புள்ள திரு மணிகண்டன்,
தங்கள் வலைத்தளத்தில் நாயக்கர் ஆட்சி பற்றிய கட்டுரைகளைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதி, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள தஞ்சை நாயக்கர் ஆட்சி பற்றிய ஆய்வு நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன். மேலும் என்னுடைய பாரதிபயிலகம் வலைப்பூவில் தஞ்சை மராட்டியர் வரலாறு 22 பகுதிகளாக வெளியிட்டிருக்கிறேன். முடிந்தால் பார்த்துவிட்டுக் கருத்து கூறவும். நன்றி. உங்களுடைய வலைத்தளம் பற்றிய இணைப்பை என்னுடைய மேற்கண்ட தளத்திலும் வெளியிட்டிருக்கிறேன்.
தங்கள் அன்புள்ள,
வெ.கோபாலன்