October 27, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-7)

தஞ்சை நாயக்கர்கள்

ஹொய்சளர்களிடமிருந்து குமார கம்பணனால் கைப்பற்றப்பட்ட நாள் முதல் (கி.பி.1363) தஞ்சை விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது. 160 ஆண்டுகள் பேரரசால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளான தண்டநாயகர்கள் எனப்படும் மண்டலேசுவரர்களால் ஆளப்பட்டது. தஞ்சையின் கடைசி மண்டலேசுவரர் வீர நரசிங்கராயர் ஆவார். இது பேரரசின் நேரடி ஆட்சியாகும். கி.பி.1532-ஆம் ஆண்டே பேரரசுக்குத் திறை செல்லுத்துவதான தனி நாயக்கர் ஆட்சி தஞ்சையில் நிறுவப்பட்டது. 

தஞ்சையை ஆண்ட நாயக்கர்கள் முறையே சேவப்ப நாயக்கர் (1532-1563), அச்சுதப்ப நாயக்கர் (1560-1614), இரகுநாத நாயக்கர் (1589-1634), விஜயராகவ நாயக்கர் (1633-1673) ஆகியோர். இவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பலிஜ குலத்தின் நாயுடு பிரிவினர். குடும்பப் பெயர் அல்லூரி என்பது. தகப்பனார் ஆட்சியில் இருக்கும் பொழுதே மகனுக்கு இளவரசுப் பட்டம் (யுவராஜா) சூட்டி இணையாட்சி   (Co-rulership) நடத்துவதும் இவர்களது வழக்கமாய் இருந்தது.

மண்டலேசுவரர்கள் ஆட்சியிலும், நாயக்கர் ஆட்சியிலும் (மொத்தம் 300 ஆண்டுகள்) தெலுங்கே ஆட்சிமொழியாக இருந்தது. தெலுங்கும் சமஸ்கிருதமும் பெரிதும் பேணப்பட்டன. இன்றும் தெலுங்கு இலக்கிய வரலாற்றில் போற்றப்படக் கூடிய பல தெலுங்கு இலக்கிய நூல்கள் தஞ்சை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன (அடுத்தடுத்த பதிவுகளில் நூல் பட்டியல்). தமிழ் ஆட்சி அதிகாரத்திலும் இல்லை. தமிழ்ப் புலவர்கள் பேணப்படவும் இல்லை. அரச ஆதரவிற்காக தமிழிசை தெலுங்கு பாட ஆரம்பித்தது. கருநாடக இசையானது. (நாயக்கர், அடுத்து மராட்டியர், பின் ஆங்கிலேயர்...) அப்படியே நீடித்தும் விட்டது. 

தஞ்சை நாயக்கர்கள் காலத்தில் அரசு அதிகாரிகள், படைத் வீரர்களுக்கான ஊதியம் நிலமானியமாகவே வழங்கப்பட்டது. அரசர்கள் தங்களுக்கு நம்பிக்கையானவர்கள் என்ற வகையில் தங்களது தெலுங்கினத்தவர்களையே உயர் பொறுப்புகளுக்கு நியமித்ததால், மானியம் என்ற பெயரில் நிலங்கள் தெலுங்கினத்தவர் வசம் பெரிதும் சென்றன. அரசுப் பணிபுரிய விரும்பும் தமிழர்கள் தெலுங்கு கற்க வேண்டிய அவசியமும் நேர்ந்தது.

தஞ்சை நாயக்கர்கள் இராஜமன்னார் சுவாமி எனும் மன்னார்குடிப் பெருமாளைத் தம் குலதெய்வமாக வணங்கினர். 

அல்லூரி சேவப்ப நாயக்கர்

தஞ்சையின் முதல் நாயக்கராக அமர்த்தப்பட்டவர் சின்னசேவா என்றும் சேவபூபா என்றும் அழைக்கப்பட்ட சேவப்ப நாயக்கர் ஆவார். 

விருத்தாசலம்
விருத்தகிரீசுவரர் கோவில்
 
விஜயநகரப் பேரரசின் ஆர்க்காடு பகுதிக்கான பிரதிநிதியாக இருந்தவரும், (இன்றைய சேத்துப்பட்டு நகரை அடுத்த) நெடுங்குணத்திலிருந்து ஆண்டவருமான் திம்மப்ப நாயுடுவின் மகன் சேவப்பன். துவக்கத்தில் விஜயநகரப் பேரரசர் அச்சுதராயரது நம்பிக்கைக்குரிய அடைப்பக்காரனாக (தாம்பூலம் மடித்துத் தருபவர்) இருந்தவர். அடைப்பக்காரன் என்பவர் பேரரசரது அருகிலேயே எப்போதும் இருப்பவராதலாலும், அரசு மற்றும் அரசர் சார்பான அனைத்து இரகசியங்களையும் அறிந்து கொள்கிற வாய்ப்புள்ளவர் என்பதாலும், அரசருக்கு நெருங்கிய உறவினராக அல்லது உயர்குடி பிறந்தவராகவும் (Royal Family), மிகவும் நம்பிக்கையானவராகவும் இருப்பவரையே இராயர்கள் தமது அடைப்பக்காரராக நியமித்துக் கொள்வர் என்பது கருதத்தக்கது.
தன் மனைவி திருமலாம்பாவின் தங்கை மூர்த்திமாம்பாவைச் சேவப்பனுக்குத் திருமணம் செய்து வைத்தார் அச்சுதராயர். மூர்த்திமாம்பாவின் பொருட்டுச் செவ்வப்ப நாயக்கருக்கு ஸ்த்ரீதனமாக (சீதனம்) இராயரால் வழங்கப்பட்டதே தஞ்சை நாயக்கத் தானம். தஞ்சாவூரி ஆந்த்ர ராஜுலு சரித்ரமு, தஞ்சாவூரி வாரி சரித்ரமு முதலான தெலுங்கு நூல்கள் இதை உறுதி செய்கின்றன.

திருவண்ணாமலை 
கோவில் இராஜகோபுரம்  
தஞ்சை பகுதி முழுமையும் ஆர்க்காட்டின் ஒரு பகுதியையும் ஆட்சி செலுத்தியவர் சேவப்ப நாயக்கர். செஞ்சி, மதுரை நாயக்கர்கள் போலன்றி தஞ்சை நாயக்கர்கள் அனைவருமே பேரரசிற்கு விசுவாசமான திறை அரசர்களாக இருந்தவர்கள் ஆவர்.சேவப்ப நாயக்கரும் அப்படியே. பேரரசர் அச்சுதராயர் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் மகனுக்கு அச்சுதப்பன் என்றே பெயரிட்டவர் சேவப்ப நாயக்கர். கி.பி.1532-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற செவ்வப்பர், 1560-இல் அச்சுதப்பனுக்கு இளவரசுப் பட்டம் (யுவராஜா) கட்டினார். 1563 வரை அரசாண்டார். பின் ஓய்வெடுத்து 1580 வரை வாழ்ந்தார். சேவப்ப நாயக்கர் ஆட்சிக்காலம் பெரும் போர்கள் ஏதுமின்றி அமைதியாகக் கழிந்தது எனலாம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இராஜகோபுரம் மற்றும் சிவகங்கைக் குளம், விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோவில் மதிற்சுவர் மற்றும் கொடிக்கம்பம், ஸ்ரீசைலம் மற்றும் திருப்பதி கோவில் விமானங்களுக்குப் பொன்கூரை ஆகியவை சேவப்ப நாயக்கரின் திருப்பணிகள் எனப்படுகின்றன.  

- யுவபாரதி

(அடுத்தது)

No comments: