October 20, 2016

குற்றாலம் பதிவுகள் 2000 : எஞ்சியிருக்கும் நினைவுகள்

இரண்டாயிரம் டிசம்பரின் கடைசி மூன்று நாட்கள் குற்றாலத்தில் நடக்கும் பதிவுகள் 2000ல் பங்கேற்கவுள்ள கவிஞர்கள் என்று ஒரு பெரிய பட்டியலையே அழைப்பிதழில் அச்சிட்டிருந்தார் கலாப்ரியா. அப்போது பேர் பெற்றிருந்த பலவான்கள் பெயர் முதற்கொண்டு என் போன்ற பாலகன்கள் பெயர் வரை அதில் இடம்பெற்றிருந்தது. அத்தனை பிரகிருதிகளையும் இப்படி ஒரே இடத்தில் திரட்டிப் பார்ப்பதற்கே ஒரு தனித் துணிச்சல் வேண்டும். அந்நிகழ்வைத் தொடர்ந்து நடத்திப் பழகிவிட்டதாலேயே அந்தத் துணிச்சல் கலாப்ரியாவுக்கு கைவந்திருக்கும்.
முன்பே, அதாவது 1998 பதிவுகளுக்கே போயிருக்கவேண்டியது. அந்த குறிப்பிட்ட நாட்களில் திருவண்ணாமலை தமுஎச சார்பில் இலக்கியப் பயிலரங்கை நடத்துவதற்கான களப்பணிகளில் இருந்ததால் அப்போது எனக்குத் தவறிப்போனது. இரு ஆண்டுகள் கழித்து நடந்த 2000 பதிவுகளுக்கே போக வாய்த்தது.
நிகழ்வு தொடங்குவதற்கு முந்தின நாள் காலை மதுரை போய் இறங்கிவிட்டேன். ஹவியையும் இழுத்துக்கொண்டு போக. இலக்கிய யோகத்தின் மகிமை சொல்லி எனக்குத் தீட்சை கொடுத்த காலகுரு அவர். இல்லையெனில் திரிதலும் நொய்மையும் கூட இருந்தே இருக்காதோ என்னவோ. இதனால் அறியக்கடவது யாதெனில் ஒரு பாலகனை ஆற்றுச்சுழல் நடுவில் கொண்டுபோய்த் தள்ளிவிடுவது சிற்றப்பனாகவும் இருக்கக்கூடும் என்பது. மறுநாள் முழுக்க மதுரையில் ஹவியோடும் ஸ்டாலினோடும் பொழுது கழிந்தது.
இருபத்தொன்பதாம் தேதி காலை குற்றாலம் போய்ச் சேர்ந்தோம். பட்டறை நடக்கவிருந்த பங்களாவிற்கான வழி அட்டைகள் உலவக்கூடியது என்று யாரோ சொன்னதால் நேர்ந்த பதற்றம் காதிலிருந்து கால்வரை வந்துவிட்டது. ஆகக் கவனமாக நடந்தும் கூட ஒரு அட்டை பதம் பார்த்திருந்தது அப்புறம்தான் தெரிந்தது. அட்டை கடிக்கும்போது யாருக்குத்தான் தெரியும். என் சரீரம் அறிந்த முதல் அட்டைக்கடி அதுதான். படைபடையாக கடிபட்டது கேரளத்து அதிரப்பள்ளியில் சில ஆண்டுகள் கழித்து.
முதல்நாள் கவிதை அமர்வு. கவிதை வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்புப் பட்டறை. நம்பி அண்ணாச்சி (விக்ரமாதித்யன்), தேவதேவன், எம்.யுவன் (யுவன் சந்திரசேகர்), ஜெயமோகன், அப்பாஸ், ரமேஷ் (-பிரேதன்), யவனிகா ஶ்ரீராம், குட்டிரேவதி, மேகவண்ணன், குமார செல்வா, லக்ஷ்மி மணிவண்ணன் உட்பட பலர் வந்திருந்தார்கள். பங்கேற்ற பலரும் அவர்களது ஒன்றிரண்டு கவிதைகளை வாசிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
என் கவிதைகள் இரண்டு அரங்கேறியதாய் நினைவு. யாத்ரீகனின் மரணம் ஒன்று. மற்றொன்று பைக்காராவோ. அண்ணாச்சிக்கும் அப்பாஸுக்கும் பிடித்திருந்தது. பாராட்டினர். என் கவிதைகளுக்குள் மெட்டா லாங்வேஜ் இன்னும் ஃபார்ம் ஆகவில்லை என்று சொன்னார் ஜெயமோகன். வாசிக்கப்பட்ட கவிதைகளை ஏற்பது மறுப்பது என்றிருந்த ஜெயமோகனின்  அணுகுமுறைக்கு மாற்றாக அண்ணாச்சி அடிக்கடி தன் பொருமலை வெளிப்படுத்தினார். தொடர்ந்த நிகழ்வில் பலரும் வாசித்தனர். இடையே மாலதி மைத்ரி கவிதைகள் குறித்து பாராட்டியவர், குட்டி ரேவதி கவிதைகள் குறித்து எதிர்மறையாகச் சொன்னார். இடைவேளையில் அரங்குக்கு வெளியேயும் இதுவே வாதமானது. ஜெயமோகனிடம் நேரிலேயே காரணம் கேட்டார் ரேவதி. ஒரு சிறு சண்டையே நடந்தது.. அப்போது ரேவதியின்பாலிருந்த நியாயத்தினோடே நின்றேன். குறிப்பறிந்து காலம்கருதி வெறுப்பில வேட்பச் சொல்வது என்றால் என்ன.
பிறகு, சற்றுத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்த அப்பாஸோடு பேசப் போனேன். தெற்கிலிருந்து சில கவிதைகள் எனும் தொகை மற்றும் வயலட் நிற பூமி எனும் (தனியர்) நூல் ஆகியவற்றில் கவிதைவழி உணர்ந்தது போன்றே அவரையும் உணரமுடிந்தது. பதினெண் மேற்கணக்கென ஒன்றாகச் சொல்லப்படுவதில் எட்டைத் தொகை என்றும், பத்தை மட்டும் (தனியர்) பாட்டென்றும் ஏன்  சொல்கிறார்கள் என்பது குறித்து தொண்ணூறுகளின் இறுதி வரை நடப்பியல் சாத்தியத்தின் வழியான புரிதல் பலருக்குச் சாத்தியப்பட்டிருந்தது.
அன்று தெலுங்கிலிருந்து கவிஞர்கள் வரவில்லை. மலையாளத்திலிருந்தும் கன்னடத்திலிருந்தும் வந்திருந்தார்கள். தமிழ்க்கவிதை குறித்த தட்டலும் தகைத்தலும் நடந்தபோது அவர்ளில் சிலரும் இருந்தார்கள். நிகழ்வு முடிந்ததும் ராஜீவனோடும் ரகுநாத்தோடும் முறையே தமிழில் துணிவோடும் அப்போதைய எனது பேச்சு ஆங்கிலத்தில் தயங்கியும் பேசினேன்.
நிகழ்வு நிறைவுற்று புதியதடம் நண்பர்களோடு அருவிக்கரை பக்கம் சென்று திரும்புகையில் இருட்டியிருந்தது. வழியில் இருந்த ஒரு உணவகத்திலிருந்து வெளிப்பட்ட இருவர் கட்டிப்புரண்டு சாலையில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் ஒரே திக்கத்துக்காரர்கள். குற்றாலம் போன்றொரு சுற்றுலாத் தலத்தில் உணவகம் நடத்துபவர்களுக்கும் பரிசாரகர்களுக்கும் இத்தகைய அடிபாடுகள் பழகியிருக்கும்தான். என்றாலும் இவர்களது வழக்கில் வெளிப்பட்ட மொழியாடல் அவர்களுக்குத் திகிலூட்டியிருக்கும் போல ஒரு பரிசாரகனின் பேரனுக்கு பரிசாரகனாகவும் இருந்தவனுக்கு அத்தகைய தொழிற்கணங்களின் பதைபதைப்பு கொஞ்சமுமா தெரியாது.
நிகழ்வுக்கு வந்திருந்த அத்தனை பேரும் தங்குவதற்கு ஒரு பெருவிடுதியை ஏற்பாடு செய்திருந்தார் கலாப்ரியா. மல்லர்கள் இருவருக்கும் ஏற்றாற்போல பேசி, அவர்களை அறைகொண்டு சேர்த்துவிட்டு நண்பர்கள் பிரிந்தோம். பிறகு நான் தேவதேவனைச் சென்று வணங்கிப் பேச முயன்றேன். உரையாடலில் உளம் முனையாதவராக அன்று இருந்தார் அவர். தனிமை விரும்பும் சுபாவியாய் இருக்கும் என்று நானே வரித்துக்கொண்டு நன்றி சொல்லி நகர்ந்தேன்.  
யுவனையும் தொந்தரவு செய்யத்தான் போகிறோமோ என்ற அரை மனதுடனே போனேன். உற்சாகமாகவே பேசினார். பிறகு ரமேஷைப் பார்த்தேன். பேர் சொல்லி அழைத்துப் புன்னகைத்த ரமேஷ் ‘மணல்திசுவின் ஈமொய்க்கும் கருணை – நரம்பில் விரிகிறது இருளின் வாசனை… அப்புறம் அழைத்து… தாளமிடுகிறது வெளி… முழுசாச் சொல்லுங்க…’ என்றுதான் பேச ஆரம்பித்தார். ‘அழைத்து விரட்டித் தாளமிடுகிறது வெளியின் மடி’ என்று என் யாத்ரீரீகனின் மரணத்தைச் சொல்லி முடித்தேன். ‘யாத்ரீகனின் மரணம்… மணல்திசு… மணல்திசு… அழைத்து விரட்டி…வெளியின் மடி தாளமிடுகிறது… தாளமிடுகிறது’ என்ற சொற்களை மட்டும் திரும்பவும் சொல்லிப் பார்த்தார் ரமேஷ். கைகுலுக்கி அமரவைத்து வெகுநேரம் பேசினார். பின்னரே உறங்கப்போனேன்.
கடுத்துக்கிடந்த காடென்ன. உருப்பட்டு வந்த ஊரென்ன. காடு திரிந்தாலும் ஊர்மரம் கட்டியிருந்தாலும் கடித்துவிழுங்கியதை அசைபோட்டுதான் செரிக்கிறது மாடு. 2016 விகடன் தீபாவளி மலர் ‘குற்றாலம் பதிவுகளி’ல், யவனிகாவுக்கு அருகே மண்டியிட்டு அமர்ந்து இடப்பக்கம் பார்க்கும் என்னை, நானே பார்க்கச்செய்து இந்நினைவைச் சாத்தியப்படுத்திய கலாப்ரியாவுக்கு நன்றி.
- யுவபாரதி 

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

Yuvabharathy Manikandan said...

நன்றி நாகேந்திரபாரதி