October 15, 2016

எஸ்.அர்ஷியாவின் ‘பொய்கைக்கரைப்பட்டி’ : களன் – மாந்தர் – உத்தி

எழுத்தாகவும் பேச்சாகவும் எங்கெங்கோ சுற்றினாலும் மொழி மையம் கொண்டிருப்பதென்னவோ நிலத்தில்தான். அதுவும் இடத்துக்கு இடம் அத்துக்கல் நடப்பட்ட நிலத்தில். அதனாலேயே வாழ்வு சார்ந்த திணைகளை வகுத்தபோது நிலத்தை முதற்பொருள்களில் முதலாக வைத்திருக்கிறோம். மொழியில் நிலம் விரியும்போது அந்த மொழியின் வழியே நுழையும் மனமும் விரிந்துகொள்கிறது. அதன்படி வாசகன் அறிந்திராத மண்ணிலும் அவனால் திரியமுடிகிறது. வாசகனுக்குத் தெரிந்திராத மனிதர்களோடும் அவனால் உறவாடமுடிகிறது.

எல்லார் எழுத்திலும் மண் இருக்கிறது. எல்லார் எழுத்திலும் மனிதர்கள் வருகிறார்கள். ஆனால் மண்ணும் மனிதரும் உயிர்த்துடிப்போடு உறவு கொள்வது சிலர் எழுத்தில்தான். அவர்களில் ஒருவர் அர்ஷியா. இளம்வயது முதல் தாம் பார்த்துவரும் மதுரை நகரம், அதன் உள்ளும் புறமுமிருந்த மண்ணையும் மனிதரையும் விழுங்கி தன்னை மாநகரமாகப் பெருக்கிக் கொண்டுவிடுகிறது. மனிதர்களின் ஆசையை முதலீடாக வைத்துப் பயன்படுத்திக் கொள்வது என்பது சிலருக்குக் கைவந்துவிடுகிறது. அவர்கள் மனிதர்களின் ஆசையை மேலும்  மேலும் தூண்டுகிறார்கள். பணத்தோடு கூடவே அதிகாரத்தையும் அச்சுறுத்தலையும் கைக்கொள்கிறார்கள். மண்ணோடு கலந்த எளியவர்களின் வாழ்வை அந்த மண்ணோடு சேர்த்து விழுங்குகிறார்கள்.

எல்லாமும் எல்லாருக்கும் தெரிகிறதுதான். அதற்குப் பெரும்பாலோர் பழகிவிடுகிறார்கள். சிலர் வேறுவழியின்றிப் பணிந்து விடுகிறார்கள். வாய்க்கால்கள் துண்டாடப்பட்டு வைகை பொய்க்கிறது. வேடர்களும் விவசாயிகளும் காட்டையும் வயலையும் இழந்து, அதே இடங்களில் யாருக்காகவோ முளைக்கும் கட்டடங்களுக்காக மண் சுமக்கிறார்கள். ‘பொய்கைக்கரைப்பட்டி’யில் மதுரையையும் அதை ஒட்டிய சில கிராமங்களையும் அவற்றின் மனிதர்களையும் காட்டி இந்த அவலத்தைக் கனக்கச் சொல்கிறார் அர்ஷியா.

நாவலின் நாயகனே எதிர்நாயகனுமாகிறான். அவன் பெயர் கஜேந்திரகுமார். தகப்பன் சேர்த்து வைத்ததை உட்கார்ந்து தின்றபடி, தேனீர்க்கடையில் அமர்ந்து நாலு பேருக்கு நாட்டாண்மையாய் இருப்பதையே, தன் கடமையாகக் கருதுகிறவன் சமுத்திரக்கனி. தொடக்க அத்தியாயத்தில் ஓட்டை ஸ்கூட்டரில் அந்தக் கிராமத்திற்கு வருகிறான் கஜேந்திரகுமார். முகஸ்துதியாலேயே சமுத்திரக்கனிளை வீழ்த்தி நிலத்தரகு வேலையில் இறக்குகிறான்.

புரொமோட்டர் கஜேந்திரகுமாருக்கு மிகச்சிறந்த மீடியேட்டராகி விடுகிறான் சமுத்திரக்கனி. சொந்தக்காரர்களும் ஊர்க்காரர்களுமான விவசாயிகளிடம் பேசி அவரவர் நிலங்களை கஜேந்திரகுமாருக்கே விற்கவைக்கிறான். விரைவில் நிலத்தரகுப் போட்டியில் மற்றொரு தரப்பினால் வெட்டி சாய்க்கப்படுகிறான் சமுத்திரக்கனி. அவனது சாவையும் விளம்பரமாக்கிக் கொள்கிறான் கஜேந்திரகுமார். சமுத்திரக்கனியின் இடத்திற்கு அவனது நண்பன் மலைக்கள்ளன் வருகிறான். விவசாய நிலங்கள் சுருங்குகின்றன. கஜேந்திரகுமாரோ வீங்குகிறான். அவனது ஓட்டை ஸ்கூட்டர் ஸ்கார்ப்பியோ காராகி விடுகிறது.

கஜேந்திரகுமாரின் கதாபாத்திரம் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டிருக்கிறது. அவன் உருவாக்கும் லெவின்ஸ்கி கார்டன் எனும் அத்தனை வசதிகளும் நிறைந்த பண்ணை வீடுகள் திட்டமும் அது செயலாக்கப்படும் விதமுமே நாவலை நகர்த்துகிறது. ஒரு நிலவர்த்தகனின் மனம் செயல்படும் பாங்கு வெகு நேர்த்தியாகச் சித்தரிக்கப்படுகிறது. அவனது சிந்தனையும் செயலும் எத்தனை துல்லியமாக மனிதர்களை அணுகுவது, தன் திட்டத்திற்கு அவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்வது என்பதாகவே அமைகின்றன.

நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், சார்பதிவாளர்கள், பொறியாளர்கள் முதலான அதிகார வர்க்கத்தினரிடம் சாதுரியமான அடக்கத்துடனான நட்பை வளர்க்கிறான். சகபங்குதாரர், மீடியேட்டர்கள், பணியாளர்கள் முதலானவர்களிடம் தன் நெருக்கத்தைக் காட்டிக் கொள்ளும் அதே சமயம், இவனிவனை இன்னின்ன இடத்தில் வைக்கவேண்டும் என்பதில் அவன் இறுக்கமும் காட்டுகிறான். கஜேந்திரகுமாரின் லெவின்ஸ்கி கார்டன் திட்டம் முழுமையடையத் தேவையான தனது நிலத்தை வைத்திருப்பவன் மலைநாட்டான் எனும் விவசாயி. அதை விற்க மனமின்றித் தன்னால் முடிந்தவரை போராடுகிறான். அன்பாக மிரட்டியும் மலைநாட்டானை மடக்கமுடியாத நிலையில், அவனது நிலத்திற்கான நீராதார வழிகள் அத்தனையையும் அடைத்து நெருக்கடி கொடுக்கிறான் கஜேந்திரகுமார். நிலவர்த்தகன் என்பவன் தனது வெற்றிக்காகவும் இலாபத்திற்காகவும் எத்தகைய முறைகளையும் கையாளக் கூடியவன் என்பதை கஜேந்திரகுமார் என்ற கதாபாத்திரத்தின் மூலம் காட்டுகிறார் அர்ஷியா.

மதுரையில் ரிப்போர்ட்டராக அறிமுகமாகி அடிப்பொடிகளால் ‘ஆற்றலரசர்’ என அழைக்கப்படுகிறவன் அண்ணன் சண்முகசுந்தரம். இருந்த இடத்திலிருந்தே எங்கெங்கே என்னென்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்பவன். நிலவிற்பனைகளுக்கிடையே புகுந்து விற்பவன் வாங்குபவன் எனும் இரு தரப்பிலும் காசு பார்க்கும் கட்சிக்காரன். கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லையென்றாலும் கட்சியின் வேர் முதல் உச்சி வரை செல்வாக்கு பெற்றவன். ஆளுங்கட்சியாயிருந்தால் அதிகாரத்தாலும் எதிர்க்கட்சியாயிருந்தால் பணத்தாலும் அத்தனையையும் சாதிப்பவன். பணிய மறுப்பவர்களுக்கு ‘காலைலே வாக்கிங் வருவேயில்லே, அப்போ இருக்கு  உனக்கு ஆப்பு’ என்று ஆளனுப்பி மிரட்டுகிறவன். ‘வருகிற எம்பி எலக்ஷனில் நானே நின்று மந்திரியாகிவிடலாம்னு எல்லாரும் நினைக்கிறாங்க’ என்று நாவலில் சொல்கிறான் சண்முகசுந்தரம்.

மதுரை ரிங்ரோடு சிந்தாமணியில் தொழில்நுட்பப் பூங்கா வருவதை அறிந்து பல ஏக்கர் நிலத்தை தன் வழக்கமான வழிகளால் வாங்கிவிடுகிறான் கஜேந்திரகுமார். ஆனால் அதை பெருநிறுவனங்களுக்கு விற்கையில் கிடைத்த பணத்தில் கணிசமான தொகையைச் சண்முகசுந்தரத்துக்கு அழவேண்டியிருக்கிறது. அதிலிருந்து கஜேந்திரகுமாரை யாராலும் காப்பாற்றமுடியவில்லை. கஜேந்திரகுமாரின் சாதுரியங்களும் அதிகார வர்க்கத்தினருடனான நெருக்கமும் தோற்றுப்போகும் இடம் இருக்கிறதானால் அது சண்முகசுந்தரம்தான். நாவலில் காட்டப்படுகிற சண்முகசுந்தரத்தின் செல்வாக்கை அவதானிக்கையில், நாவல் முடிந்தும் நகர்கிற காலத்தில், அவன் சொன்னது போலவே நாடாளுமன்ற உறுப்பினனாகி மந்திரியாகவும் ஆகியிருப்பான் என்று தோன்றுகிறது.

நாவலின் தொடக்க அத்தியாயத்தில் ‘ஒண்ணும் ஓடியடையலைண்ணே, அப்படியே திருப்பூர் பக்கம் போனாக்க பொழைச்சுக்கலாமேன்னு பொறப்பட்டுட்டேன்’ என்று விவசாயக் கூலியாக இருந்த தவசி புறப்படுகிறான். அதற்கு முந்தைய நாட்களில் அதே போல திருப்பூர் புறப்பட்டுப் போன இன்னும் சிலர் குறித்தும் சமுத்திரக்கனியின் கூற்றாக வருகிறது. பின் அத்தியாயத்தில் நிலமிருந்தும் விற்றுவிட்டு நன்கு வாழ்ந்துவிடும் கனவோடு திருப்பூர் புறப்படுகிறான் ஆண்டிச்சாமி. வாழ்ந்து கெட்டும் வாழாமல் கெட்டும் திருப்பூர் வந்து, குருவிக்கூடு போன்ற ஒற்றையறை கொண்ட காம்பவுண்டு வீடுகளில், உண்டு உறங்கிப் பெருகி, பனியன் மடிக்கிற பெட்டி அடுக்குகிற பிசிறு வெட்டுகிற ஆயிரமாயிரம் கதைகளுண்டு. நாங்கள் வாழ நேர்ந்த திருப்பூரின் புதூர் பிரிவும் கடுகுக்காரத் தோட்டமும் தாராபுரத்தார் காம்பவுண்டும் நினைவில் மோதுகிறது.

எது சொல்லப்படுகிறது என்பது பொருளானால், எப்படி சொல்லப்படுகிறது என்பதே உத்தியாகிறது. எழுத்தாளன் தான் எடுத்துக்கொண்ட பொருளை வாசகனுக்கு உணர்த்த தனித்தன்மையோடு வெளிப்படுத்தும் உத்தியைப் பொருத்தே படைப்பு கலையாகிறது.

ஒரு நீண்ட காலமாற்றத்திற்குள் நேர்கிற படிப்படியான சூழல் மாற்றத்தை காட்சிப்படுத்துவது என்ற வகையில் நிதானமான நகர்வு இன்றியமையாதது. அத்தகைய நகர்வில் அடுத்து என்ன என்பதான ஆர்வத்தை வாசகனுக்குத் தருவது என்கிற சவாலை ‘பொய்கைக்கரைப்பட்டி’ எளிதாக எதிர்கொள்கிறது. மேலும் வாசகனுக்கு வாசிப்பு குறித்த அணுக்கத்தைத் தருவதாகவும் இருக்கிறது.

நிலவர்த்தகம் என்ற பெயரில் மதுரையின் சுற்றுவட்டாரக் கிராம வயல்களும் மூச்சுக்காற்றுக்கு வழிதந்த மூத்தமலைகளும் அடித்துச் சுரண்டப்படுவதையும், அதற்கு அந்தந்த பகுதி மக்களே ஆசைப்பட்டோ அல்லது வேறு வழியின்றியோ இணங்கிப் போவதையும் ஆற்றாமையோடு பார்க்கும் பார்வையே இந்நாவலில் ஆசிரியரது பார்வையாக இருக்கிறது. ஆனால் அந்த பார்வை அழகர்மலைக்கு வேட்டைக்குப் போகும் சகாக்களிடம் கொஞ்சமும், உணர்வொடு கலந்த தன் நிலத்தை விற்க கடைசி வரை மனம்வராத வழிவிட்டானிடம் அதிகமும் இருக்கிறது. பிற பாத்திரங்களுக்கு அவரவர் பார்வையிலேயே வந்து போகும் சுதந்திரம் இருக்கிறது. ‘ஆடு அலறுதேன்னு கறி திங்காம இருக்கோமா?’ என்ற கஜேந்திரகுமார் போல அவரவருக்கான நியாயமும் அவரவருக்கான மொழியிலேயே சொல்லப்படுகிறது.
மொழிநடையைப் பொருத்தவரை, ஆசிரியர் கூற்றாக வருபவை வாசிப்புத் தமிழிலும் பாத்திரக் கூற்றாக வருபவை மதுரை வட்டார வழக்கிலும் இருக்கின்றன. கதைமாந்தரின் மனப்போக்கு, நடைமுறை, இயங்குசூழல் ஆகியவை சார்ந்து நிகழும் உரையாடல்கள் இயல்பாக வந்திருக்கின்றன. அதே போல, ஆசிரியரிடம் மட்டுமல்லாமல், கஜேந்திரகுமார், வழிவிட்டான், ஆண்டிச்சாமி போன்ற பாத்திரங்களிடமும் பின்னோக்கு உத்தி தொழிற்படுகிறது. கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்வது என்பது, ஒரு கால எல்லைக்குள் நிகழும் நாவலின் களனை ஆழமாக அறிந்துகொள்ளவும், கதை மாந்தரை இன்னும் நன்கு புரிந்துகொள்ளவும் அவசியமாகியிருக்கிறது.

இந்நாவலில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொன்று வருணனை. கஜேந்திரகுமார், சமுத்திரக்கனி, சண்முகசுந்தரம், பொறியாளர் அன்புமுகம், விவசாயி ஆண்டிச்சாமி, மீடியேட்டர் மலைக்கள்ளன், தோட்டக்காரன் கரந்தமலை, தங்கராஜ் வாத்தியார் மகன் காளை முதலான பாத்திரங்கள் செறிவாக வருணிக்கப்பட்டுள்ளன. அதே போல நாயக்கன்பட்டி இந்நாவலில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொன்று வருணனை. கஜேந்திரகுமார், சமுத்திரக்கனி, சண்முகசுந்தரம், பொறியாளர் அன்புமுகம், விவசாயி ஆண்டிச்சாமி, மீடியேட்டர் மலைக்கள்ளன், தோட்டக்காரன் கரந்தமலை, தங்கராஜ் வாத்தியார் மகன் காளை முதலான பாத்திரங்கள் செறிவாக வருணிக்கப்பட்டுள்ளன. அதே போல நாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா குறித்த காட்சிகளும் அழகாக வருணிக்கப்பட்டுள்ளன. ரங்கசாமி வேளார் மகன் காயாம்பூ நாயக்கன்பட்டிக்கு வந்து மண்ணெடுத்துச் சென்று அம்மன் சிலை செய்வது முதற்கொண்டு, தலைக்கட்டு வரிவசூல், அதில் வரும் இழுபறிகள், வாணவேடிக்கை, ஊர்வலம், முக்கியஸ்தர்களுக்கு மரியாதை செய்வது, விழா முடிந்து முளைப்பாரியோடு அம்மன் சிலையைக் கரைப்பது, அப்போது அம்மனின் மூக்கை மட்டும் காயாம்பூ பிட்டு எடுத்துச் செல்வது முடிய வருணிக்கிறார் ஆசிரியர். அர்ஷியா காட்சிப்படுத்தும் அழகர்மலை குறித்து தனியாகவே எழுதலாம்.

‘பொய்கைக்கரைப்பட்டி’யில் விரியும் நிலம் நாவலின் களனாக மட்டுமல்லாமல், செயலற்று வேடிக்கை பார்க்க நேர்ந்துவிடுகிற ஒரு பாத்திரமாகவே இருக்கிறது. வைகையும் அதன் கால்வாய்களுமான நரம்பு நாளங்கள் துண்டாடப்பட்டு, மலைகள் எனும் மூட்டுகள் உடைக்கப்பட்டு, வயல்கள் எனும் தசைகள் கருக்கப்பட்டு, கட்டடச் சுமைகள் மூச்சடைக்க, நாலாபுறமும் கைகால் விரித்து மல்லாந்து படுத்து அழும் பேருருவாகத் துடிக்கிறது மதுரை.  

- யுவபாரதி மணிகண்டன்

(15/10/2016 அன்று தேனியில் 'எஸ்.அர்ஷியாவின் படைப்புலகம்' குறித்து தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘பொய்கைக்கரைப்பட்டி’ நாவல் பற்றிப் பேசியது.)

No comments: