January 05, 2010

மாடறுத்த சூரியும் மார்படித்து அழும் பறவையும்

ரகசியன்
யுவபாரதி

(கவிஞர் ரகசியனின் ‘என் மாமிசத்தைப் பிடுங்கிப் பசியாறும் சைவம்’ தொகுப்பு குறித்த ஆர்.மணிகண்டனின் இந்த மதிப்புரை ‘புதிய பூங்குயில்’ பிப்ரவரி 2009 இதழில் வெளிவந்தது.)

மானுட அறம் புலர்த்துகிற வெளிச்சத்தில் தன்னுணர்வின் உந்துதலால் சமுதாயத்தை அவதானிக்கும் கவிமனம் சகமனங்களையும் சீர்மை நோக்கி முன்னகர்த்துகிறது. காலப் பெயர்வில் மனிதப் புலன்கள் எளிதில் தவற விடுவதையும் கண்டெடுத்து உயிரூட்டி நிற்பது கவிதை. விட்டேற்றியாய்ச் சுவரூறும் சிறு வண்டென நுழைந்தாலும் இழுத்துச் சுற்றி விழுங்கிவிடும் கவிதை வெளி ரகசியனுடையது.

மனித மனத்தின் இன்பம் விழையும் போக்கே கூட, ஒரு வேளை இழந்துவிட்ட குழந்தைமை நினைவுகளை மீள்துய்ப்பு நிகழ்த்த முயல்கிற எத்தனம்தானோ எனத் தோன்றச் செய்கிறார் ரகசியன்.

என்னிலிருந்து குழந்தை
செத்துப்போன
மறுநொடியே
மரணித்து விட்டனர்
மரமும் மரத்தடிக் கிழவியும்
இப்போதிருப்பதோ
மேடும்
பள்ளமும்தான்
நிலவில்

என்கிறபோதும் சரி;

நான் குழந்தையாய் இருக்கும்போது
மூன்று உலகமிருந்த்து
பூமியில் வானில் பூமிக்கடியில்…
கண்ணைக் குத்தும் கடவுளும்
உயிரைக் குத்தும் பூதமும்
இப்போதில்லை என்பதுபோல்
அப்போதில்லை
பூமி இரண்டாய்ப் பிளந்து
நரகமாகவும் சொர்க்கமாகவும்

என்கிறபோதும் சரி;

கண்ணாமூச்சு விளையாட்டெனப் பூவனத்தில் கண்மூடி விழிக்கையில் திடும்மென வனாந்தரத்தில் தவிக்க நேர்கிற மாதிரி திசை தேடுகிறது மனம். அத்தையாய், சித்தியாய், அக்காவாய் இருந்தவர்கள் வளர்ந்ததும் எதிர்வீட்டுக்காரராய், பக்கத்து வீட்டுக்காரராய் மாறித்தொலைவதால் வளர்ச்சியும் வருத்தத்துக்கு உரியது என்கிறார் கவி.


மரம் ஒரு உயிர்த் தொகுதி. காலத்திற்கும் உலகிற்கும் மனிதனுக்குமான போராட்டங்களுக்கு ஒரு மவுனசாட்சி. தன்னைத் தகவமைக்கவும், தனக்கேற்ப உலகைத் தகவமைக்கவும் தனக்கு முன்னும் பின்னுமான அனைத்தையும் சாய்த்து எக்காளமிடும் மனிதனைக் காண்கையில் ஆற்றாமையே எஞ்சுகிறது.

மரத்தின் வீழ்ச்சியை இரு வேறு இடங்களில் ரகசியன் காட்சிப்படுத்துகிறார். காற்றின் சீற்றத்தினால் ஒரு மரம் முறிந்து விழுகிறது.

நிழல் தந்த மரம்
மலர் தந்த மரம்
பழம் தந்த மரம்
ஊஞ்சல் கட்டிய மரம்
விறகு ஒடிக்க ஓடினான்
மனிதன்
தன் சிறகுக் கைகளால்
மார்படித்து அழுகிறது
பறவை.

என்கிறார்.

பவுர்ணமி இரவில் தன்பின்னால் வைத்துக் கொண்டு நிலவின் அழகைக் காட்டுகிறது, அணில்களும் கிளிகளும் வைத்திருக்கிறது, நிழல் பூங்கொத்தை நீட்டுகிறது ஓலைக் கரங்களுள்ள தென்னை மரம்.

ஒற்றை மரம் வீட்டருகில் கூடாதென
ஜோசியம் சொல்ல
கொலையுண்டு செத்தது
ஒரு அழகிய நிலவோடு
சில அணில்களும் கிளிகளும்.


கடந்த நூற்றாண்டின் சமுதாய அரசியல் வரலாற்றைக் கண்ணுறுகையில் தேசிய / திராவிட இயக்க எழுச்சிகளின் போது ஒடுக்கப்பட்ட மக்களின் நடப்பியல் உண்மைகள் உணரப்படவில்லை. உரிமைகள் அடையாளப்படுத்தப் படவில்லை. அவை முறையே பார்ப்பன மற்றும் உயர்சாதிய இந்திய தேசியம் / பார்ப்பனரல்லாத உயர் மற்றும் இடைநிலை ஆதிக்கசாதிய திராவிட தேசியம் என்கிற கருத்தாக்கங்களுக்குள் கரைக்கப்பட்டதையே காணமுடிகிறது. நூற்றாண்டின் இறுதியில், குறிப்பாக டாக்டர் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தலித் எழுச்சியின் தொடர்ச்சியாகவே (இந்திய அளவில் நோக்கின் இச்சொல்லாடல் உட்பட) உதிரமும் நிணமும் தோயத் தமக்கான தமதேயான கலை இலக்கிய வெளி மற்றும் சுயம் மறந்து இதர இயக்கங்களில் முழுத்திரட்சியும் கரைதல் தவிர்த்துத் தனியடையாள மீட்டுருவாக்கம் என்கிறவற்றுக்கான எத்தனமும் ஈடேற்றமும் முழுவீச்சில் கைக்கொள்ளப்பட்டன.

இதை அடையாளப்படுத்தும் விதமாகவே இத்தருணம்,

பூத்துக் குலுங்கும்
பூமியில் ஆழக்கிளறினேன்
சிக்கிய காய்ந்த வேர்களில்
பிசுபிசுத்திருக்கிறது
எம் இரத்தம்

என்கிற தகிப்பு தரிக்கும் பரிதவிப்பும்,

நீங்கள் கொடுக்கும்
மூவர்ணக் கொடி
என் கிழிசல் மூடுகிறது
மகிழ்ச்சியாய்க் குத்திக் கொள்கிறேன்

என்கிற ரணம் நனைக்கும் ஏளனமும் கொண்ட ரகசியனின் குரல், இதுதான் உன் சாமி பண்பாடு விழா என,

எனக்குப் புரியாத இவைகளை
எனதாக்குகிறார்கள்
ஆகுமெனில்
அவர்கள் கனவையும்
காணச் சொல்வார்கள்

என்ற அடையாளத் திணிப்பை எதிர்க்கும் முழுச் சீற்றமாய் வெடிக்கிறது.


படிநிலைச் சாதிய அடுக்கமைவில் பணிவுறச் செய்தலும் தீட்டென விலக்கலுமே ஒடுக்குமுறையின் வன்கூறுகளென உணர்ந்த தலித்தியம் பணிய மறுத்தலும் புனிதம் தகர்த்தலுமே அடையாள மீட்டெடுப்பிற்கான ஆகச் சிறந்த எதிர்ப் பண்பாட்டுச் செயலாக்கங்களெனக் கண்டுகொண்டது. இச்செயலாக்கங்களைக் கவிஞர் பதிவு செய்யும் பாங்கு சாதியம் வார்த்தெடுக்கிற, வினவலுக்கு ஆட்படாத சமூக மனத்தை அதிரச் செய்வது.

நில வன்பறிப்பு முதல் தாய்மண்ணில் நிர்க்கதியாய் விரட்டப்படுவது வரை பதிவு செய்யும் ரகசியன்,

சாணிப்பால் தொடங்கி
மனித மலம் வரை கழித்தாயிற்று
நம் வாயில்…
இதுநாள் வரை சும்மாதான் இருக்கிறது
மாடு அறுத்த நம் தாத்தாக்களின் சூரி

என்று வல்லாதிக்கத்தைச் சுடுவிழியால் நோக்குகிறபோதும்,

பரந்து விரிந்த
என் தேசத்திற்குக் கூட இல்லை
புள்ளியாய் இருக்கும் ஒரு ஊருக்கு
நான் தலைவனானால்
சூத்தெரிகிறது
உன் சாமிக்கும்

என்று தெறிக்கிற போதும், நெடுவீச்சாய்ப் பிளந்துவிட்டு உயிர்க்கோளத்தின் வாதையைப் புனுகு பூசி வசப்படுத்த முயல்கிற பெருஞ்சமூகத்தின் அரிதாரம் தரித்த சாதித் திமிர் அம்மணமாய் நிற்கிறது. அழுக்கானவர்கள் என்கிற கவிதையிலும் தூய்மையின் நிதர்சனத்தைப் பூச்சகற்றிக் காட்டுகிறார்.


குழந்தைமை தொலைந்த ஆற்றாமையும், சகவாழ்வின் இழப்பிற்குக் கலங்கும் கவிமனமும், ஒடுக்குமுறைக்கு எதிரான பெருஞ்சீற்றமும் உள்ளோடிய ரகசியனின் ‘என் மாமிசத்தைப் பிடுங்கிப் பசியாறும் சைவம்’ சொல்லலங்காரத் தேவையற்ற தனது ஆகச் செறிவான கவிதைகளால் கவனம் பெறுகிறது.

***

1 comment:

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

அற்புதமான கவிதைகளாக இருக்கின்றன. இவ்வளவு நாள் எப்படி படிக்காமல் இருந்தேன் என தெரியவில்லை. பார்வைக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி யுவபாரதி.