February 03, 2014

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை–12)

மதுரை நாயக்கரின் பகை
அதே ஆண்டு (கி.பி.1663) தஞ்சையின் மீது படையெடுத்து வல்லம் கோட்டையைக் கைப்பற்றித் திரும்பினார் மதுரை சொக்கநாத நாயக்கர். அடுத்த ஆண்டே வல்லத்தை மீட்டார் விஜயராகவன். அப்போது மிகவும் வலிமை பொருந்தியிருந்த மைசூரின் மீது பெரும்போர் தொடுக்கும் பொருட்டு இராமநாதபுரம் ;சேதுபதி முதலான சிற்றரசர்களின் உதவிபெறுவதில் மதுரை நாயக்கர் கவனம் கொண்டிருந்தார். விஜயராகவனின் வல்லம் மீட்பை எதிர்க்கவில்லை. விஜயராகவன் வெற்றிபெற்ற ஒரே போர் வல்லம் மீட்பே எனப்படுகிறது.
கி.பி.1672 ஈரோட்டுப் போரில் பீஜப்பூர் சுல்தான்களின் உதவியோடு மைசூர் படைகளோடு மோதித் தோல்விகண்ட மதுரை சொக்கநாத நாயக்கரின் கவனம் தஞ்சைக்குத் திரும்பியது. அடுத்த கி.பி.1673-ல் தஞ்சையைக் கைப்பற்ற தளவாய் வேங்கட கிருஷ்ணப்ப நாயுடு தலைமையில் பெரும்படை அனுப்பினார் சொக்கநாதன். வல்லம் கோட்டை உட்பட தஞ்சை நாயக்கர் பகுதிகள் படிப்படியாக வீழ்ந்தன. பீரங்கிகள் தஞ்சையின் கோட்டைச் சுவர்களைத் தகர்க்கத் துவங்கியதும், அரண்மனைப் பெண்களை உவளகத்திலேயே (அந்தப்புரம்) குறித்த நேரத்தில் வெடிக்கும் சுரங்கவெடியின் கீழ் வைத்துவிட்டு, தன் மூத்தமகனோடு கோட்டை வாசலுக்கு வந்து மதுரைப் படைகளோடு போரிட்டார் விஜயராகவன். மதுரைத் தளவாய் வேங்கட கிருஷ்ணப்ப நாயுடுவால் தலைதுண்டிக்கப்பட்டார் விஜயராகவன்.
விஜயராகவனின் மூத்தமகனும் தஞ்சை வீரர்களும் முற்றிலும் வீழ்ந்தனர். கோட்டை மதுரைப்படைகளால் கைப்பற்றப்பட்டது. இதற்கு முன்பே உவளகத்தில் பெண்டிரும் அழிந்தனர். மதுரை சொக்கநாதன், விஜயராகவனிடம் அவரது மகள் மோகன ரங்கம்மாவைத் தனக்கு மணமுடித்துத் தரக்கேட்டதும், அவர் மறுத்ததும்தான் இந்தப் படையெடுப்புக்கு உடனடிக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மதுரை – தஞ்சை நாயக்கர்களுக்கு இடையே துவக்கம் முதலே இணக்கமில்லை. மதுரையின் படையெடுப்பு குறித்த அச்சத்திலேயே பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, கீழாநிலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டுவித்து காவல் செய்ய உத்தரவிட்டிருந்தார் விஜயராகவன் என்பதும் இணைத்து நோக்கத் தக்கது. 
விஜயராகவன் – ரிஜ்கிளாஃப் வான்கூ ஒப்பந்தம்
முந்தைய நூறாண்டு காலம் போர்ச்சுகீசியரின் குத்தகையிலிருந்த நாகப்பட்டினம் துறைமுகத்தை தம்வசப்படுத்த டச்சுக்காரர்கள் (இப்போது நெதர்லாந்து) விஜயராகவனை அணுகினர். "அச்யுத ஶ்ரீ விஜயராகவ நாயனய்யா வோலந்த ரிகுலப்பனகூசு அமரலுக்கு யிச்சின கவுல நம்மிக்க சாசனம்" என்ற பெயரில் கி.பி.1660-ஆம் ஆண்டு விஜயராகவனுக்கும் ஹாலந்து அட்மிரல் ரிஜ்கிளாஃப் வான்கூவிற்கும் இடையிலான ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி கி.பி.1507 முதல் போர்ச்சுகீசியர்களிடமிருந்த நாகப்பட்டினம் துறைமுகம் டச்சுக்காரர்களுக்கு மாற்றப்பட்டது. டச்சு நிர்வாகத்திற்கு ஏற்றுமதி இறக்குமதி சுங்கவரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டது. வருடாந்திரத் திறை மட்டும் தஞ்சை நாயக்கருக்குச் செலுத்தினால் போதும் எனப்பட்டது. 

நாகப்பட்டினத்தோடு புத்தூர், முட்டம், பொருவலச்சேரி, அந்தோனிபேட்டை,கருவேப்பங்காடு, அழிஞ்சில்லாமங்கலம், சங்கமங்கலம், நிருத்தமங்கலம், மஞ்சக்கொல்லை, நரியங்குடி ஆகிய பத்து கிராமங்களும் போர்ச்சுக்கீசியரிடமிருந்து டச்சுக்காரர்களுக்கு க் கைமாற்றப்பட்டன. கி.பி.1660 முதல் கி.பி.1781-ல் ஆங்கிலேயர் போரிட்டுக் கைப்பற்றும் வரை நாகப்பட்டினம் டச்சுக்காரர்களிடமே இருந்தது. இப்போர் ‘நாகப்பட்டினம் முற்றுகை’ என்ற பெயரில் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
தஞ்சை நாயக்க மரபின் இறுதி
போர் தொடங்கியதுமே தமது இளையமகனாகிய செங்கமலதாசை நாகப்பட்டினத்தில் இருந்த ஒரு வணிகனின் பாதுகாப்பிற்கு அனுப்பியிருந்தார் விஜயராகவன். தஞ்சையைக் கைப்பற்றியதும் அதைத் தன் மாற்றாந்தம்பி அளகிரி நாயக்கரின் பொறுப்பில் ஒப்படைத்தார் மதுரை சொக்கநாதன். ஆனால், அளகிரி தன்னைத் தனியரசாக்கிக் கொள்ள முனைந்தான். இதைப் பயன்படுத்திக்கொண்டு இராயசம் (தலைமைச் செயலாளர்) வெங்கண்ணா செங்கமல தாசைக் கண்டறிந்து அவரைத் தஞ்சை நாயக்கராக்க பீஜப்பூர் சுல்தானின் உதவியை நாடினார்.
அப்போது தன்னிடம் படைத்தலைவனாக இருந்த ஏகோஜியிடம் (சத்திரபதி சிவாஜியின் சகோதரன்) இப்பொறுப்பை ஒப்படைத்தார் பீஜப்பூர் சுல்தான். மதுரை நாயக்கரின் நம்பிக்கையை இழந்ததால், அவரது உதவி கிடைக்காமல் எளிதில் தோற்றார் அழகிரி நாயக்கர். செங்கமலதாசின் மூலமாக விஜயராகவனின் பெருஞ்செல்வத்தை எடுத்து, ஏகோஜிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செங்கமலதாசுக்கு முடிசூட்டப் பணித்து இராயசம் வெங்கண்ணாவிடம் தஞ்சையை ஒப்படைத்துச் சென்றார் ஏகோஜி.
செங்கமலதாஸ் தஞ்சை நாயக்கராக முடிசூட்டப்பட்டார். செங்கமலதாஸ் வெங்கண்ணாவை ஓரம்கட்டி தன்னை வளர்த்த நாகை வணிகனை இராயசமாக்கினார். பதவியிழந்த வெங்கண்ணா தஞ்சையைக் கைப்பற்றும்படி மீண்டும் ஏகோஜியை வேண்டினார். சுல்தான் ஆதில்ஷா இறந்துவிட்ட நிலையில், தன்னிச்சையாகவே படையெடுத்து வந்து தஞ்சையைக் கைப்பற்றினார் ஏகோஜி. செங்கமலதாசை மட்டுமின்றி, இரண்டு அரசர்களின் வீழ்ச்சிக்குக் காரணமான வெங்கண்ணாவையும் விரட்டிவிரட்டார் ஏகோஜி. தஞ்சையில் தெலுங்கர் ஆட்சி முடிவுக்கு வந்து மராட்டியர் ஆட்சி தொடங்கியது.
சிறிது காலம் கிழவன் சேதுபதியோடு சேர்ந்து மராட்டியரை எதிர்த்த செங்கமலதாஸ், பின்னர் இலங்கை சென்று கண்டியை ஆண்ட நாயக்க மரபினரோடு மணவுறவு கொண்டு கலந்தார். 
- யுவபாரதி

(தொடரும்)

No comments: