February 02, 2014

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை–11)

அல்லூரி அச்சுத விஜயராகவ நாயக்கர் (கி.பி.1633-1673)
இரகுநாத நாயக்கருக்கும் இராணி கலாவதிக்கும் பிறந்தவர் அச்சுத விஜயராகவ நாயக்கர். இரகுநாதன் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி.1633) யுவராஜா பட்டமேற்று இணையாட்சி செய்யத் தொடங்கிய விஜயராகவன், கி.பி.1634 முதல் முழுப்பொறுப்பும் ஏற்றார். கி.பி.1646-ல் இரகுநாதன் மறைந்தார். தந்தையைப் போன்றே தெலுங்கில் வல்லமை பெற்றிருந்தாலும், அரசியலில் அத்தகைய வல்லமை பெற்றிருக்கவில்லை எனப்படுகிறது.
விஜயராகவனின் இறைப்பணிகள்

குமார தத்தாச்சாரியாரைக் குருவாக ஏற்றிருந்த விஜயராகவன் வைணவத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். திருச்சி நகரம் மதுரை நாயக்கர்கள் கட்டுப்பாட்டில் இருந்தும், அவர்களுடன் பெரும்பகை ஏற்படாதவரை ஒவ்வொரு நாளும் தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்று அரங்கநாதனைத் தரிசித்துவந்தான் விஜயராகவன். மதுரையுடன் பகை பெருத்ததும், தன் தஞ்சை அரண்மனையிலேயே மிக உயர்ந்த கோபுரம் ஒன்றைக்கட்டி அதிலிருந்து திருவரங்கக் கோயில் கோபுரத்தைத் தரிசித்திருக்கிறார். இதேபோல இவரது பாட்டனார் அச்சுதப்பன் குறித்தும் சொல்லப்படுவது நினைவுகூரத் தக்கது. மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோயிலுக்கு பிரகாரம், கோபுரம், மண்டபம், குளம் முதலான திருப்பணிகளையும் செய்திருக்கிறார். பலமணிகள் பதித்த கவசமும் அளித்திருக்கிறார். தஞ்சையிலுள்ள இராஜகோபால சுவாமி கோயில் விஜயராகவனால் கட்டுவிக்கப்பட்டதே.

விஜயராகவனின் இலக்கியப் பணிகள்

தெலுங்கில் பெரும்புலமை பெற்றிருந்த விஜயராகவன், இரகுநாதாப்யுதயமு, கோபிகாப்ரமரகீதமுலு, பால்குணோத்ஸவரகதா, கோபாலதண்டகமு, வீரசிருங்கார ஸங்காத்யமு, ஸம்பங்கி மன்னாரு ஸங்காத்யமு உள்ளிட்ட காவியங்களையும், பாதுகா ஸஹஸ்ரமு, மோஹினீ விலாஸமு, மஞ்ஜீர த்விபதா முதலான துவிபதங்களையும் (ஈரடிச் செய்யுட்களாலான காவியங்கள்), பல யக்‌ஷகானங்களை எழுதியுள்ளார். 

விஜயராகவ சந்த்ரிகா எழுதிய காமராஜு வேங்கடபதி ஸோமயாஜு, விஜயராகவ கல்யாணம் எழுதிய கோனேட்டி தீட்சிதர், இராஜகோபால விலாஸமு எழுதிய காலகவி, அன்னதான நாடகமு எழுதிய புருஷோத்தம தீட்சிதர், இராமாயண மற்றும் பாகவத ஸாரமு எழுதிய பசுபுலேட்டி ரங்கஜம்மா முதலிய தெலுங்குக்கவிகள் இவரது அவையில் இருந்தனர். பசுபுலேட்டி ரங்கஜம்மா, சம்பகவல்லி, கஸ்தூரி சசிரேகா, மோகனசுந்தரி ஆகியோர் தெலுங்குக் கவிதாயினிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுள் பசுபுலேட்டி ரங்கஜம்மா என்பவர் விஜயராகவனது இராணிகளில் ஒருவர். மட்டுமின்றி, விஜயராகவனால் கனகாபிஷேகம் (பொன்முழுக்கு) செய்யப்பட்டவர்.

தெலுங்கு இலக்கிய வரலாற்றில் தஞ்சை இரகுநாத மற்றும் விஜயராகவ நாயக்கர்களும் அவர்களது ஆட்சிக்காலமும் புகழப்படுவதில் பொருளிருக்கிறது.

விஜயராகவனின் ஆட்சித் திறம்

இவரது ஆட்சிக்காலத்தைப் பொருத்தவரை இவரது முதல் பதினைந்து ஆட்சியாண்டுகள் மட்டுமே அமைதியாகக் கழிந்தன. கி.பி.1647-லேயே தந்தை இரகுநாதன் மறைந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது. விஜயராகவன் ஆட்சியில் இருந்த அடுத்த கால் நூற்றாண்டு காலம் உவப்பாக இருக்கவில்லை. இவரது காலகட்டத்தில்தான் விஜயநகர சாம்ராச்சியமே தக்காண சுல்தான்களால் வீழ்த்தப்பெற்று, கி.பி.1646-உடன் அதன் அதிகாரம் முடிவுபெற்றது. விஜயநகரத்தை அடுத்து செஞ்சியும் வீழ்த்தப்பெற்றது. தென்னிந்தியப் பகுதிகளின் அதிகாரம் படிப்படியாக தக்காண சுல்தான்களின் வசம் சென்றது. தஞ்சை அரசின் பற்பல பகுதிகளிலும் சுல்தான்களின் படைகள் தொல்லை கொடுத்து வந்தன. 

அப்போது தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்டுவந்த தஞ்சை மற்றும் மதுரை நாயக்க அரசுகளை முழுமையாக கைப்பற்றத் தலைப்பட்ட பீஜப்பூர் சுல்தான் ஆதில்ஷா, இருவேறு தளபதிகளின்கீழ் பெரும்படைகளைத்  திரட்டி அனுப்பினார். அவற்றை எதிர்கொள்ளும் பொருட்டு மதுரை சொக்கநாத நாயக்கர் வேண்டியும், சுல்தானுக்கு அஞ்சி உதவிசெய்ய மறுத்தார் விஜயராகவன். அதே சமயம் மதுரை நாயக்கரும் பெரும்படை திரட்டி சுல்தானின் படைகளை எதிர்கொள்ள நின்றதால், சுல்தான் படைகள் தஞ்சையின் மீது தாக்குதல் நடத்தின. கி.பி.1659. தஞ்சை அதிகாரத்தை மருமகனிடத்தில் விட்டுவிட்டு,வல்லம் கோட்டையில் மறைந்துகொண்டார் விஜயராகவன். பீஜப்பூர் படைகளுக்குப் பீரங்கிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் கூட எழவில்லை. விற்போரிலேயே தன் மீது ஒரு அம்புபட்டதும் போரிடுவதை நிறுத்திக்கொண்டார் மருமகன். தஞ்சை வீழ்த்தப்பட்டது. பெரும்பொருள் கொடுத்து அதை மீட்டார் விஜயராகவன்.

நான்கு ஆண்டுகள் கழித்து, கி.பி.1663-ல் மதுரை நாயக்கரையும் அடிபணிய வைக்கவேண்டி, வனாமியா கான் என்பவர் தலைமையில் மீண்டும் பீஜப்பூர் படைகளை அனுப்பினார் ஆதில் ஷா. விஜயராகவன் சுல்தான் படைகளுக்கு உதவி செய்ய மதுரை சொக்கநாத நாயக்கர் படைகள் வீழந்தன. இதனால் திருச்சியில் சமாதான உடன்படிக்கைக்கு சம்மதித்து, மதுரை நாயக்கர் பீஜப்பூர் சுல்தானுக்கு வருடாந்திரத் திறை செலுத்த ஒப்புக்கொள்ளும்படி நேர்ந்தது.இந்நிகழ்வைச் சொக்கநாதன் மறக்கவில்லை. 

யுவபாரதி

No comments: