February 13, 2014

சாசனச் செய்யுள் மஞ்சரி

சாசனம் என்றால் செப்புப் பட்டயம் என்றே பெரிதும் இன்று பொருள்கொள்ளப்படுகிறது. 1950களுக்கு முன் எழுதப்பட்ட நூல்களைக் காண்கையில் கல்வெட்டு, செப்புப் பட்டயம் இரண்டிற்குமே சாசனம் என்றே பெயர் வழங்கியிருக்கிறது. பிரித்துணர வேண்டின், சிலா சாசனம் எனில் கல்வெட்டு; தாமிர சாசனம் எனில் செப்புப் பட்டயம்.

கல்வெட்டுகளில் இதை இன்னார் இதன் பொருட்டுச் செய்தார், இவர் பெருமை இத்தகைத்து என வெட்டப்பட்ட செய்திகளாகவும், செய்திகளுக்கு இடையிலும் காணப்பட்ட செய்யுள்களைச் "சாசனச் செய்யுள் மஞ்சரி" என்ற பெயரில் தொகுத்துள்ளார் மயிலை சீனி வேங்கடசாமி. 

கல்வெட்டுச் செய்திகளை வாசிப்பது, அதிலுள்ள இடர்பாடுகள், செய்யுள்களைப் பிரித்தறிந்து இனங்காணல் என்பது குறித்த நல்ல முன்னுரையோடு கூடிய நூல். கல்வெட்டுச் செய்யுளின் காலம், பாடப்படுபவர் எவர், செய்தி என்ன, செய்யுள் விளக்கம், தென்னிந்தியச் சாசனங்கள் தொகுதியில் அதன் இடம் என்பது முதலான பல குறிப்புகளோடு கூடிய அற்புதமான தொகுப்பு இது. வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல் இது. இராயப்பேட்டையிலுள்ள இராமையா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பல வரலாற்று நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதே போல கல்வெட்டுகளில் காணப்படும் செய்யுள்களை "பெருந்தொகை" என்ற பெயரில் மு.இராகவையங்காரும் தொகுத்து வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது. இன்னும் பார்க்கவில்லை.


- யுவபாரதி

No comments: