February 09, 2014

தமிழ்நாடு அரசு இலச்சினையின் மாதிரி கோபுரம் எது?

தமிழ்நாடு அரசின் இலச்சினை
தமிழ்நாடு அரசின் இலச்சினை (Emblem) கோயில் கோபுரம் என்பது பார்த்ததும் தெரியும். அரசு முதற்கொண்டு அனைவரும் சொல்வது அது திருவில்லிப்புத்தூர் பெருமாள் கோயில் கோபுரம் என்று. 

திருவில்லிப்புத்தூரிலிருப்பது 12 நிலைகள் (Tiers) கொண்ட கோபுரம். அதை மாதிரியாகக் கொண்டது எனப்படும் தமிழ்நாடு அரசின் இலச்சினையில் இருப்பதோ 9 நிலைகள். இவ்விலச்சினையை வடிவமைத்தவரும் மதுரையைச் சேர்ந்தவருமான பேரா.ஆர்.கிருஷ்ணாராவ் குறித்து எழுதப்பட்டுள்ள டாக்டர் சித்ரா மாதவன் என்பவரது The artist who designed the State emblem என்ற ஆங்கிலக் கட்டுரை [(ARCHIVE) VOL. XXI NO. 6], கிருஷ்ணாராவ் மாதிரியாகக் கொண்டது மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மேற்குக் கோபுரமே (ஆடிவீதி) என்று நிறுவுகிறது. இக்கோபுரம் 9 நிலைகள் கொண்டதேயாகும்.

திருவில்லிப்புத்தூர் பெருமாள் கோயில் கோபுரம் 17-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட கரிகபாடி திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மேற்குக் கோபுரம் 14-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட முதலாம் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது.
ஆந்திரத்தின் பெரும்பகுதியும் சேர்ந்திருந்த சென்னை மாகாணமாக இருந்தபோது குறுகியகாலமே ஆட்சிபுரிந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காலத்திலேயே இதற்கான வேலைகள் தொடங்கின. மேற்படி அரசு இலச்சினை வடிவாக்கம் ஏற்கப்பட்டபோது (1949) முதல்வராக இருந்தவர் பூசபாடி சஞ்சீவி குமாரசாமி ராஜா. திருவில்லிப்புத்தூரை உள்ளடக்கிய இராஜபாளையம் பகுதி, கரிகபாடி விசுவநாத நாயக்கரால் பூசபாடி ராஜு மரபினருக்கே பாலகன்பற்றாக (பாளையப்பட்டு) வழங்கப்பட்டதாக நாயக்கர் வரலாறு தொடர்பான நூல்களைப் படிக்கையில் தெரியவருகிறது.

மாதிரி கோபுரமும் கிருஷ்ணாராவும்
இலச்சினை ஏற்கப்பட்ட காலத்தில் ஆந்திரத்தின் பெரும்பகுதியும் சேர்ந்திருந்தது என்பதாலும், திருவில்லிப்புத்தூர் பெருமாள் கோயில் கோபுரமும் தெலுங்கு நாயக்க மரபினரால் கட்டப்பட்டது என்பதாலும், முதல்வராக இருந்தவர் இராஜபாளையத்திற்குப் பாத்தியப்பட்ட பூசபாடி ராஜு மரபினர் என்பதாலும், 9 நிலைகள் கொண்ட இலச்சினையின் மாதிரியானது 12 நிலைகள் கொண்ட திருவில்லிப்புத்தூர் கோபுரமே என்று தவறாகக் கருதி பதிவுசெய்யப்பட்டிருப்பது தெரிகிறது. 

வடிவமைத்தவர் கூற்றை டாக்டர் சித்ரா பதிவு செய்தபின்தான், வடிவமைத்தவரையும்,அவர் இலச்சினையின் மாதிரியாகக் கொள்ளப்பட்டது 9 நிலைகள் கொண்ட மதுரை மேற்குக் கோபுரமே எனத் தெரிகிறது.

-  யுவபாரதி

(டாக்டர் சித்ரா அவர்களின் கட்டுரை :
http://madrasmusings.com/Vol%2021%20No%206/the-artist-who-designed-the-state-emblem.html )

No comments: