February 13, 2014

தமிழுக்கு அழிவில்லை

தமிழுக்கு அழிவில்லை. இன்று தமிழர்களை நம்பி மட்டும் தமிழ் இல்லை. தமிழை வைத்துத்தான் தமிழர்கள் அடையாளம் பெற்று வருகிறார்கள். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்சொல், திசைச்சொல், திரிசொல், வடசொல் என இலக்கணம் பெற்று, எவ்வெவற்றை எப்படி தன்வயப்படுத்தவேண்டும் என்று வகைமுறை வகுக்கப்பெற்றது தமிழ். பேரிலக்கியங்கள் கண்டு திளைத்த மொழி. 

பதினாலாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை தன்னைத் தம் தாய்மொழியாகக் கொள்ளாத பெரும் ஆட்சியாளர்கள் காலத்திலும் - திசை மொழிகள் பேரிலக்கியங்கள் கண்ட அக்காலத்திலும் -அக்காலத்திற்கேற்ப சிற்றிலக்கியங்கள் வழி தன்னைத் தொடர்ந்து இலக்கிய மொழியாகவும் தகவமைத்துக் கொண்டே வந்திருக்கிறது தமிழ்.

இன்றைய காலத்திற்கேற்ப இணையத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. எவ்வெக்காலத்திலும் அவ்வக்காலத்திற்கேற்ப பிறமொழிச் சொற்களையும் வெறுப்பற்று உள்வாங்கி, தன்வயப்படுத்தி தொடர்ந்து பேச்சு மொழியாகவும் இருந்து வந்திருக்கிறது; இருக்கிறது.

ஒரு பக்கம் தன்பேரைச் சொல்லித் தன்மைய அரசியல் செய்யவும், மறுபக்கம் தன்பேரை எதிர்த்துத் தன்மறப்பு அரசியல் செய்யவும், இன்னொரு பக்கம் திட்டமிட்டோ/திட்டமிடாமலோ தன்பேரைச் சொல்லியோ/சொல்லாமலோ ஒரு அரசியல் செய்யவும், வேறொரு பக்கம் தான் வெறும் தொடர்பு சாதனம்தான் என்று சொல்லி வேறொரு அரசியல் செய்யவும் தொடர்ந்து இடம்தந்து இன்றும் வாழ்கிறது.

தமிழர்களுக்குத் தமிழைத் தெரியாவிடினும், தமிழுக்குத் தமிழர்களைத் தெரியாதா என்ன? தமிழ் தமிழ்தான்.


- யுவபாரதி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

எந்தக் காலத்திலும் அழியாது...