February 13, 2014

முறையீடுகள்


ஆத்மாநாம் தன்னையே
கொன்று தேடினான்
கண்ணாடியில் கிடக்கிறான்.


2

என் வேகத்திற்கு என்றோ
கடலில் குதித்திருப்பேன்
அணைகட்டித் தடுக்கிறாய்.


3

குறுக்கிப் படுக்கிறேனாம்
நீட்டிதான் படுத்தேன்
உடம்பெல்லாம் அடிபடுகிறது.


4

அலையலையாய்த் துயர்
முறையிடுகிறது கடல்
அலைகண்டு மகிழ்கிறாய்.


5

எப்போதும் என்னைவிட
நீண்டிருக்கிறது நிழல்
வெளிச்சம் நேராக இல்லை.
6

தள்ளாடிய உலகத்தைக் காணவில்லை
கவிதையின் தோள்பற்றிச் சென்றதாம்
கடைசியாய்ப் பார்த்தவர் சொன்னார்.

7

இங்குதான் இருக்கிறேன்
எங்கும் போக முடியவில்லை
போகத் தெரியாமலில்லை.

8

எத்தனை முறை முயன்றாலும்
அடுத்தவர் கொல்ல முடியாது
ஆயுதமாயுதமாய்க் கண்டுபிடியுங்கள்.

9

எனக்கு உறைக்கவேயில்லை
ஏதோ தேவையிருக்கிறது
தோலமர்ந்து தேடுகிறது கொசு.

10


எனக்குக் கேட்கவேயில்லை 
ஒலித்தபடியே இருக்கின்றன
பாவம் பாடல்கள்.

- யுவபாரதி


No comments: