இயட்சர்களைப் பூமியில்
இசைக்க அழைத்து தனித்த மனங்களை மயக்கச் செய்கிற ஏழிலைப்பாலை மரம் பூக்கும் பருவத்தில்
சொற்கோவையின் வித்தையால் அகத்தின் பாவனைகள் பதறித் திறக்கின்றன. வெறுமையின் தீரா நனவிலிருந்து
விடுபட்டு மலர்க்காடு புகுந்து சிறகடிக்க விழையும் கனவை விரிக்கிறது ‘யட்சனின் முகவரி’.
திசையறியாதவொரு மூலையிலிருந்து
ஒலிக்கத் துவங்குகிற
பாடல் யட்சனுடையதென்று
தேவதைகள் அறிவித்துப்
போன நாளில்
வாசலில் உதிர்ந்து விழத்
துவங்குகின்றன
அவன் முகவரியின் எழுத்துக்கள்
ஒவ்வொன்றும்
…
ஈர்ப்பின் வலிபெருகிய
வாதைப் பொழுதொன்றில்
கொம்புக்கலையும் பற்றுக்கொடியின்
சுருண்டநுனியென நடுங்கும்
விரல்களால்
கோர்க்கத் துவங்குகிறேன்
கலைந்து கிடக்கும் முகவரியை
ஏழிலம்பாலை அரும்பவிழ்க்கும்
பருவத்தில்
மெல்லப் புதிரவிழ்க்கிறது
முகவரி
தன்னை மிக நேர்த்தியாய்
வடிவமைத்துக் கொள்ளத்
துவங்குகிறது
ஒரு களவு
…
ஆழ்மன வனாந்திரத்தில்
அடர்ந்து கிடக்கும் புதர்கள் யாரும் பாராதது. முறையே வாழ்வுக்கும் மரணத்துக்குமான தூண்டுவிசைகளான
இச்சையும் மூர்க்கமும் அவற்றிடையே நெளிந்துலவுகின்றன. மருட்டும் மணமிக்க தாழம்புதரும்
அங்கிருக்கிறது. அது மடல்விரித்து ஒழுக்கும் கள்ளருந்திப் பித்தேறி ஆகப் பெருமூச்சோடு
ஏதேன் தோட்டத்தில் இரகசியமாகப் புகுந்து நஞ்சேற்றுகிறது ஓர் ‘இச்சாதாரி’ நாகம்.
…
நெளியுடலெங்கும் முண்டிக்கிளம்பும்
பிரக்ஞை
பிணைச்சாரைக்கானது
பிணையலின் பேராவல் சுழன்றடிக்கும்
புலனைந்தின் ஊழிமூச்சில்
கொதியுலையின் கொந்தளிப்பு
உடுக்கள் சிதறுண்ட கருவிசும்பில்
பரவும்
வெப்பத் தகிப்பில்
பழுக்கக் காய்கிறது பவுர்ணமி
பற்றியெரிகிறது தாழங்காடு…
கூடுதல் குறித்த விழைவை
உந்தச் செய்கிறது எதிர்பார்ப்பின் தூரிகை. அது வரைந்த ஓவியம் சாத்தியத்தின் அடர்வண்ணங்களை
இறைத்துக் காட்டும் பீடிகையோடு உடனே உதிர்ந்து விடுகிறது. ‘கூடுதலும் கூடுதல் நிமித்தமும்’
எனக் குறிஞ்சியின் உரிப்பொருளைத் தலைப்பிட்டுக் கொண்ட கவிதை அதன் பெரும்பொழுதில் அடுக்கடுக்கான
படிமங்களில் இதைக் காட்டுகிறது.
…
நெடும்பயணத்திலிருந்து
பாய்ந்தோடி வரும்
மதநீர்ப் பெருக்கிய என்
உன்மத்தங்களின் வாடிவாசல்
விரியத் திறந்திருக்கும்
உன் கோட்டைக்
கதவாயிருந்திருக்கக்கூடும்…
விடுபடுதலின் விழைதலற்ற
முன்பனிக்காலத்துப் பின்னிரவில்
ஓய்ந்த மழையின் கடைசிச்
சாரலாய்
ஆங்காங்கே தூறிக்கொண்டிருக்கும்
உன்
சிநேகத்தின சிதறல்களைச்
சேகரித்திருப்பேன்
சிறுபிள்ளையென…
சாத்தியங்கள் இத்தகையனவாயிருந்தும்
அவசர முயக்கத்தின் களைப்பில்
ஆழ்ந்துறங்கும் உன் வெற்று
முதுகை
வெறுமனே வெறித்துக் கொண்டிருக்கத்தான்
வாய்க்கிறது
ஒவ்வொரு இரவிலும்.
…
யட்சனின் முகவரியில்
விரைந்தேறும் சிகரத்திலிருந்து தனித்திறங்குவதன் ஆற்றாமையை பாலைமுகம் ஏற்படுத்தும்
துயரத்தைத் தலைசரியச் சொல்கிறது
உன் வேலிகளை எல்லாம்
இறுக்கி முடைகிறாய்
என் எல்லா வேலி முட்களையும்
களவாடிக் கோர்த்து
சுற்றிவளைத்துப் பற்றிப்
படர்ந்ததும்
உயிர் உறிஞ்ச ஆரம்பிக்கிறது
சிநேகம்
எனத் தொடங்கும் ‘சிநேக
காலம்’ கவிதை.
உளப்பாலியல் வளர்ச்சி
நிலையின் மூன்றாம் கட்டத்தின் மகிழ்வுறு அங்கத்தை உணரும் குழந்தை அதன்வழியான ஏக்கத்தைப்
பெற்றோரிருவரில் தமக்கு மாற்றுப்பாலினத்தவரின் அணுக்கத்தின் மூலம் நிறைவு கொள்ள விழைகிறது.
நிறைவுறச் சாத்தியமற்ற அவ்விழைவு சரிவர உன்னிக்கப்பட்டு அதன் மாற்றால் தீர்க்கப்படவேண்டியது.
தவறுகையில் வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு முழுமையாக நகராது ஓர் அகப்பதற்றமாக நிலைத்துவிடுகிறது.
பெண் குழந்தையின் தரப்பிலிருந்து மேற்படி அகப்பதற்றம் ஏற்படுத்தும் தவிப்பை தயக்கத்தை
அதன்விளை ஏமாற்றத்தை எளிய சொற்களில் தன்மை மொழியில் பதிவு செய்கிறது ‘எலக்ட்ரா என்றொரு
பீர்பாலின் பூனை’
…
கடந்துபோகும் காலடிகளைப்
பின்தொடர்ந்தோடித் தோற்று
மீண்டும் தொடர்ந்தோடித்
தோற்றுக் கொண்டிருக்கும்
ஒற்றை நாய்க்குட்டியின்
வாலாட்டுதலிலும்
தீவிரமாயிருக்கிறது ஒரு
மீசைத் தாய்மைக்கான
எலெக்ட்ராவின் தேடுதலின்
ஆவல்…
மெல்ல மெல்ல
வளர் உருமாறிக்கொண்டிருக்கிறாள்
எலெக்ட்ரா
பாலை வெறுத்தோடும் பீர்பாலின்
பூனையாக
எதற்கும் எச்சரிக்கையாய்
இருக்கவேண்டும்
நீங்களும் எலெக்ட்ராவும்
…
ரேவதி முகிலின் ‘எலக்ட்ரா’,
தாழம்புதர் மண்டிய ரகசிய வனாந்திரம், பழுக்கக் காய்கிறது பவுர்ணமி, பற்றியெரிகிறது
தாழங்காடு, பற்றுக்கொடியின் சுருண்ட நுனியென நடுங்கும் விரல், உன்மத்தங்களின் வாடிவாசல்,
நாட்பட்ட அடர்பசலையின் நிறப்பிரிகை முதலான பல சொற்சேர்க்கைகள் மூலம் செறிந்த மனப்பிரதிமைகளை
வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்துகிறது. ரேவதி முகிலின் முதல்தொகுப்பான ‘எலக்ட்ரா’ பன்முகம்
வெளியீடாக வந்திருக்கிறது.
03/10/2016
No comments:
Post a Comment