November 17, 2016

கொளிஞ்சிவாடியும் குடா யுத்தமும்


கொளிஞ்சிவாடிதான் பாப்பா அத்தை வாழ்க்கைப்பட்டு வந்த ஊர். தாராபுரத்திற்குக் கிழக்கே அமராவதி நதிக்கரையில் இருக்கிறது கொளிஞ்சிவாடி.  நான் வளர்ந்த திருவண்ணாமலை பக்கத்துப் பென்னாத்தூரில் குளியலென்றால் கிணறும் பம்புசெட்டும்தான். பின்னாளில் வேலைக்கு வந்து சாத்தனூர் அணையிலேயே வேலை பார்த்தபோதுதான் அணைவாயிலிருந்து வழிந்தோடும் பெண்ணையாற்றில் குளிக்க வாய்த்தது. அதனால் ஓடும் நீரைக் கண்டாலே குதித்தாடத் தொடங்கிவிடுவேன்.

வீரவநல்லூர் பாட்டி வீடு என்றால் மணிமுத்தாறு வாய்க்கால். மேலகரம் சின்னபாட்டி வீடு என்றால் குற்றாலம். உசிலம்பட்டி தாத்தா வீடு என்றால் குப்பணம்பட்டி வைகை வாய்க்கால். கிருஷ்ணராயபுரம் அத்தை வீடு என்றால் காவேரி. அப்படித்தான் கொளிஞ்சிவாடி அத்தை வீடு என்றால் அமராவதி. அப்போதெல்லாம் இந்த நதி-வாய்க்கால்களிலும் தண்ணீர் ஓடியது.

ஆண்டுக்கு ஓரிருமுறை விடுமுறைக்கோ அல்லது ஏதேனும் நல்லது கெட்டதுக்கோதான் அங்கங்கு வருவேன் என்றாலும் ஒவ்வொரு ஊரிலும் வயதொத்த நண்பர்கள் அங்கங்கே வாய்த்து விடுவார்கள். வீரவநல்லூரில் மோகன் என்றால், கொளிஞ்சிவாடியில் கண்ணன். விடிந்ததும் அடிபம்பு வலித்து வீட்டின் வாளி குடமெல்லாம் நீர் நிரப்பி, காப்பி குடித்துவிட்டுக் கிளம்புவோம். அத்தை வீட்டுப் பின்வாசல் இறங்கி பழனி போகும் சாலையைக் கடந்தால் அமராவதி ஆற்றுக்கு இறங்கும் சரிவு வந்துவிடும். ஏழுமணிவாக்கில் கிளம்பினால் பதினோரு மணி சாப்பாட்டுக்குதான் திரும்பவும் வீடு. தம்பி வரமாட்டான். ஓடும் நீரென்றால் அவன் நின்று வேடிக்கை பார்த்ததாகக் கூட நினைவிலில்லை.

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தவன் விடுமுறைக்காக அத்தை வீட்டிற்கு வந்திருந்தேன். வளைகுடா யுத்த காலம். நாள் தவறாமல் தினசரிகளை வாசிக்கும் பழக்கம் அப்போதுமிருந்ததால் ஒரு துணுக்கு விடாமல் யுத்த நிகழ்வுகள் ஒன்றொன்றையும் வாசித்துவிடுவேன். கண்மூடி தலை தூக்கினால் போதும். ஸ்கட்டும் பேட்ரியாட்டும் என் தலைமேல் மோதி விழும். அப்போது என் ஆதவைப் பெற்றிருந்தவர் சதாம் உசேன்தான். புஷ் என்ற பெயரே பிடிக்காது. அப்போதொட்டி பிள்ளைகள் இருவரது நச்சரிப்பு தாளாமல் எங்கள் வீட்டுக்கு செகண்ட் ஹாண்டாக டிவி ஒன்றை அப்பா வாங்கியதும், அதன் பேர் புஷ் என்று இருந்ததைப் பார்த்து கூட அப்பாவிடம் சண்டை பிடித்தது நினைவிருக்கிறது.

“அக்கம்பக்கத்துக்காரங்க ரெண்டு பேருக்குள்ளே பிரச்சினைன்னா அவ்வளவு தூரத்திலிருந்து இந்த அண்ணாவி ஏன் ராக்கெட்டைத் தூக்கிட்டு வர்றான்?” என்ற  நியாயம்தான் அப்போது தெரிந்தது. சதாம் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்றே அம்மா அப்பா நண்பர்கள் என எல்லாரிடமும் சொல்லிவந்தேன். யுத்தத்தின் தொடக்கத்தில் ஓங்கியிருந்த ஈராக்கின் கை கொஞ்சம் கொஞ்சமாக விழத் தொடங்க சோர்ந்து போயிருந்தேன். ஈராக்கின் ஸ்கட்டுகள் அனைத்தையும் அமெரிக்காவின் பேட்ரியாட்டுகள் வீழ்த்தின என்ற செய்திகளையே நாள்தோறும் பார்க்கப் பார்க்க, கோபம் கோபமாக வந்தது.

இடையில் ஒருநாள் ஈராக்கின் ஸ்கட்டுகள் அமெரிக்க பேட்ரியாட்டுகளைக் கடந்து தாக்கி, அமெரிக்கத் தரப்பில் பலத்த சேதத்தை விளைவித்தன என்று படித்ததும் எனக்கு எப்படி இருந்திருக்கும். அப்போது வெளித் திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். இந்தச் செய்தியை அம்மா அப்பாவிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு வாசல், நடை தாண்ட குதித்தோடினேன். அம்மாவும் அத்தையும் ரேழியில் இருந்தார்கள். ஓடிய வேகத்தில் நடையின் நிலைச்சட்டத்தில் தலை இடித்து ரேழிக்குள் குப்புற விழுந்தேன். சத்தம் கேட்டுத் திரும்பிய அம்மாவும் அத்தையும் கிட்டே வருவதற்குள் “ஒண்ணுமில்லைம்மா” என்று எழுந்து நின்று, கை கால்களைத் துடைத்துக் கொண்டு கையிலிருந்த தினசரிச் செய்தியை அம்மாவிடம் காட்டினேன்.

“டேய்! காதுகிட்டே இரத்தம் வழியுதுடா. எங்கே தலையைக் காட்டு” என்று அம்மா சொன்னபோதுதான் மண்டையின் வலது பக்கம் உடைந்த வலியே தெரிந்தது. “மூணுகழுதை வயசாகியும் இப்படிப் பண்றியேடா” என்று புலம்பிக்கொண்டே என்னை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு என்னை இழுத்துக் கொண்டு ஓடினாள். மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்டு தையல் போட்டுக் கொள்ளப் போனேன். தையல் போட்டவர் காரணம் கேட்க அம்மா சொல்வதற்கு முன்பே நான் யுத்த விவரணை சொல்லத் தொடங்கிவிட்டேன். கேட்டுக்கொண்டே நெற்றி விளிம்புக்கு நாலு விரற்கடை மேலே ஆறு தையலும் போட்டுவிட்டார். சிரித்துக் கொண்டே என்னைத் தட்டிக் கொடுத்து நாலு நாள் கழித்து வரச் சொன்னார்.

நேரே காடு ஆஞ்சநேயர் கோயிலுக்கு அழைத்துப் போனாள் அம்மா. காயம் சீக்கிரம் ஆறவேண்டுமென்று வேண்டிக்கொண்டு வந்தோம். வீட்டுக்குள் நுழையும்போது “நல்லாதான் படிக்கிறான், ஆனாலும் கூறு இல்லையே மன்னி!” என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டே வந்தாள் அத்தை. காயம் ஓரிரு வாரத்தில் ஆறிவிட்டது. கண்டு முண்டென்று தழும்பு மட்டும் இருக்கிறது.

ஒன்பது கழுதை வயதாகிவிட்ட இப்போதேனும் கூறு இருக்கிறதா என்ன.

(அக்டோபர் 2016)

1 comment:

Unknown said...

அருமை சார்