November 20, 2016

ஈசான லிங்கனும் எரியாத உடலும்

நன்றி : யாவரும்.காம் 

ஈசான லிங்கன் போல குழிக்குள் தவமிருக்கவில்லை. அவனுக்குத் தெற்கே கால்மடித்து மலைபார்த்து அமர்ந்திருக்கும் பெருநந்தி போல சிவனே என்று கிடக்கவுமில்லை. ஈசானன் தோளொட்டி வடக்கே நீண்டு கிடக்கும் சுடுகாட்டில் எவரோ மூட்டிய பிணம் போல் எரிந்து கொண்டிருக்கின்றன நினைவுகள்.

ஊர் விதிப்பதாகட்டும். விதி ஊர்வதாகட்டும். கண்ணின் நீர்வற்றி முகத்தின் ஈரமெல்லாம் கண்வழி இரத்தமாய்ச் சொட்டுவதை ஒருவரும் அறியாத உலகில் தானே விதித்துக் கொள்வதாகட்டும். அஞ்ஞாதவாசம் என்பதொன்றும் அத்தனை எளிதல்ல.

ஊர் முழுக்க எத்தனை பேர் இருந்தென்ன. அவரவருக்கு இருந்தது அவரவர் பிழைப்பு. தோளில் கையிட்டுச் சிரித்தவர் எல்லாரும் அந்த உருவமே காணாமல் போவது பற்றி வருந்துவதில்லை. மண்ணில் ஏணியிட்டு வானம் பார்ப்பவர் எல்லாரும் படிக்கட்டைகளைத் திரும்பிப் பார்ப்பதுமில்லை. பிழைக்கத் தெரியும் வாய் எல்லாப் பிள்ளைக்குமா இருக்கிறது. 

வானும் மண்ணும் கூட தனதே என்று வாழ்ந்த ஊரில் வானையும் மண்ணையும் தவிர தனக்கு யாருமில்லை என்று வாழ நேர்வதும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தாலும் காலமற்று நீண்டிருப்பதுமில்லை.

சில நாட்கள் திருவண்ணாமலையின் அந்தச் சுடுகாட்டின் வெளிச்சுவர் மேலமர்ந்து உள்முகம் கொண்டிருப்பேன். எரிகிற பிணம் ஒவ்வொன்றும் மனதில் எரிந்து அடங்கும். பிணம் அடங்கியதும் நாளைய பேய்கள் எழுந்து கூத்தாடும். பேய்களும் சோர்ந்து விழுந்ததும் ஈசான லிங்கன் வாசலிலேயே தலைக்குக் கைகொடுத்து உறங்கிப்போவேன். மயானம் விட்டுத் தொலைதூரம் போக மனமே வராது.

பிணம் சுமந்து வருபவர்கள் எல்லாரும் ஈசான லிங்கன் வாசலில் ஒரு நிமிடம் நின்று பின் நகர்வார்கள். எட்டுத் திசையும் ஒரு சுற்று. கிழக்கே இந்திர லிங்கன் போகத்திற்கு என்றால் வடகிழக்கே ஈசான லிங்கன் மோட்சத்திற்கு. அதனால்தான் எல்லாரும் வருகிற பெரிய கோயிலுக்கு அருகே புக்கடைச் சந்துக்கும் நகைக்கடை பஜாருக்கும் நடுவில் இருக்குமிடம் தெரியாமல் இருந்தான் இந்திரலிங்கன். எவரும் அதிகம் எட்டிப்பார்க்காத ஈசான மூலையில் சுடுகாட்டை அடுத்து ஏகாந்தமாய் இருந்தான் ஈசான லிங்கன். அப்போதெல்லாம் அஷ்டலிங்கர்கள் மீது திரையுலகின் கடைக்கண் பட்டிருக்கவில்லை.

ஒரு நாள் சீனிவாச சாமி கண்ணில் பட்டிருக்கிறேன் போல. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்குப் பதிவாளராக வேலை பார்த்தவர். விட்டுவிட்டு திருவண்ணாமலையே கதியென வந்துவிட்டார். வௌ்ளை வேட்டியைக் கீழும் மேலும் அங்கி போல சுற்றியிருப்பார். என்னைவிட ஒரு சில வயது மூத்தவராயிருக்கும். அவ்வளவுதான். எங்கள் குடும்பம் ஓரளவு நன்றாக இருந்த காலத்திலேயே தெரிந்தவர். ஈசான லிங்கனோடு மக்களுக்கு அதிகம் புழக்கம் இல்லாத காலத்தில் பொழுது சாயும் நேரம் வந்து விளக்கேற்றி வழிபட்டு சிவபுராணம் பாடிச் செல்வார். அன்று மாலை கூப்பிட்டுப் பேசினார். வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. இரவு மணி பத்தரை கடந்துவிட்டிருந்தது.

“இப்போது நரிக்குகையில் இருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ வா” என்று கிளம்பினார்.

“நரிக்குகையா?”

”மலைமேலே முலைப்பால் தீர்த்தத்துக்குப் பக்கத்திலே இருக்கு”

”இடைக்காட்டுச் சித்தர் சமாதியண்டையா?”

”இல்லே. வடக்குப் பக்கம். கொஞ்சம் தள்ளி…”

பிரியா ஓட்டல் வரைக்கும் பேசிக்கொண்டும் பேசாமலும் கூடவே நடந்தவன் பேருந்து நிலையத்தின் நடுவழி வந்ததும் விடைபெற்றேன்.

”ஊருக்கு எங்கயாவது போறியா?”

“இல்லே சாமி. தூங்கறதுக்கு.”

நாடும் விடாமல் காடும் போகாமல் என்போல சுமை தூக்கிப் பிழைப்பவர்களும் தூக்கிச் சுமக்காத பிச்சைக்காரர்களும் அங்குதான் படுத்துக்கிடந்தார்கள்.

(அக்டோபர் 2016)

No comments: