May 27, 2013

கம்பன் சிந்தனை - 3 : கும்பகருணன் எனும் நல்லோன்

இராமாயணக் கதாபாத்திரங்களில் எனக்கும் மிகப் பிடித்த பாத்திரங்களில் ஒன்று கும்பகருணன். இராமனுக்கு இலக்குவன் போல், இராவணனுக்கு கும்பகருணன். நல்ல தம்பிகள். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கப் போருக்குப் போனவன்.

கம்பராமாயணத்தின் அற்புதமான படலங்களில் ஒன்று கும்பகருணன் வதைப் படலம். மிகவும் சிரமப்பட்டு கும்பகருணனை எழுப்புவர். எழுந்துவந்து இராவணனைச் சந்திப்பான் கும்பகருணன். நடந்தவை அறிந்ததும், "இது நல்லது இல்லை அண்ணா! சீதையை வெளிவிட்டு விடுவதே நல்லது" என்று சொல்வான். "எனக்கு அறிவுரை சொல்ல நீ ஒன்றும் அமைச்சன் இல்லை, நீ பயந்து விட்டாய், போ! போய் மீண்டும் இரவும் பகலும் தூங்கு..." என்று சீறும் இராவணன்,

'மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக் 

கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்; 
யான் அது புரிகிலேன்; எழுக போக!' என்றான்.

அண்ணன் கோபம் கொண்டது தெரிந்ததும் அவனை வணங்கி, சூலமேந்தி, போருக்குப் புறப்படுவான் கும்பகருணன். "வெற்றியோடு திரும்புவேன் என்று சொல்லமுடியாது அண்ணா! விதி என் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது, போருக்குப் புறப்படுகிறேன்" என்று சொல்லி,

'என்னை வென்றுளர்எனில், இலங்கை காவல! 
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால், 
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை- 
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே.

'இற்றைநாள் வரை, முதல், யான் முன் செய்தன 
குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவ! 
அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய! 
பெற்றனென் விடை' என, பெயர்ந்து போயினான்.

("இலங்கை அரசே! என்னை இராம-இலக்குவர்கள் வென்றார்களாயின், உன்னையும் வெல்லப் போவது உண்மை. பின்யோசனை வேண்டாம். சீதையை விட்டுவிடுவது நல்லது. இதுநாள் வரை நான் முன்பு செய்த பிழைகள் ஏதுமிருப்பின் மன்னித்துவிடு. இனி உன் முகத்தில் திரும்பவும் விழித்தல் என்பது இயலாது என்றறிவேன். உயர்ந்தோனே! விடைபெறுகிறேன்" என்று சொல்லிப் போருக்குப் புறப்பட்டான் கும்பகருணன்.)

- யுவபாரதி

No comments: