October 07, 2011

தாமஸ் டிரான்ஸ்டிரோமர் : நோபல் பரிசு வென்ற ஸ்வீடன் கவி


தாமஸ் டிரான்ஸ்டிரோமர்

நோபல் பரிசின் பிறந்தகமான ஸ்வீடன் இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அப்பரிசைப் பெற்றிருக்கிறது. இதற்கு முன் 1974ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த எய்விண்ட் ஜான்சனும் ஹேரி மார்ட்டின்சனும் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

2011ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தாமஸ் கோஸ்ட்டா டிரான்ஸ்டிரோமர் (Tomas Gosta Transtromer) ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளி ஆசிரியையான தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தவர். ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்துப் பட்டம் பெற்றவர். உளவியலாளராகப் பணியாற்றியவர். சிறந்த பியானோ இசைக் கலைஞர். 1984ல் போபால் விஷவாயுத் தாக்குதலை அறிந்ததும் உடன் இந்தியா வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றவர்  டிரான்ஸ்டிரோமர். 

ஸ்வீடிஷ் மொழியில் பதினைந்து கவிதைத் தொகுதிகளை எழுதியுள்ளார் டிரான்ஸ்டிரோமர். இவரது முதல் கவிதைத் தொகுதி "17 கவிதைகள்" (17 Poems) இவரது இருபத்து மூன்றாம் வயதில் வெளிவந்தது. இவரது "சாளரங்களும் கற்களும்" (Windows and Stones - 1966), "பெரும்புதிர்" (The Great Enigma - 2004), "அரைகுறை சொர்க்கம்" (The Half-finished Heaven - 2011) ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கவை. இவரது பெரும்பாலான கவிதைத் தொகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எனினும் இவர் அமெரிக்காவில் அதிகம் அறியப்பட்டவரில்லை. ஆங்கிலம் தவிர உலகின் அறுபது மொழிகளில் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது கவிதைத் தொகுதிகளில் இவரது நெருங்கிய நண்பரும் கவிஞருமான ராபர்ட் ப்ளை (Robert Bly) யின் மொழிபெயர்ப்பே சிறந்தது என்பர்.

"சற்றே இருண்மையும் வசீகரமும் கொண்ட டிரான்ஸ்டிரோமரின் கவிதைகள் தனிமைப்பாட்டையும் தன்னடையாளத்தையும் மனஎழுச்சியோடு வெளிப்படுத்துபவை என்பதுடன், செறிவான படிமங்களால் புதுத்தடம் அமைத்துத் தந்தவை, நவீனத்துவத்துக்கு மட்டுமின்றி ஆழ்மனப் பதிவியலுக்கும் (Surrealism) வலுச்சேர்த்தவை" என்பர். 

மொழிபெயர்ப்பிலும் வீரியம் குறையாத இவரது கவிதைகள் ஸ்வீடனின் மிக நீண்ட குளிர்காலத்தை அழகுற வர்ணிப்பவை என்றும், தொட்டுணரத்தக்க வகையில் இயற்கையின் அழகைக் காட்டுபவை என்றும் விமரிசகர்கள் புகழ்கின்றனர். 

"அமெரிக்காவிற்கு ராபர்ட் ஃப்ராஸ்ட் போல ஸ்வீடனுக்கு தாமஸ் டிரான்ஸ்டிரோமர்; ஸ்வீடனின் தேசிய ஆளுமை இவர்; ஸ்வீடனின் நிலப்பரப்பு இவரது கவிதைகளில் விரவிப் பிரதிபலிக்கிறது" என்கிறார் கிராண்டா (Granta) இலக்கிய இதழின் ஆசிரியர் ஜான் ஃப்ரீமேன். 

"சில கவிஞர்களே உண்மையில் உலகக் கவிதைகளை எழுதுகிறார்கள்; அத்தன்மை இயல்பாகவே இவரது கவிதைகளில் ஊடாடிச் செல்கின்றன; தீவிரத் தன்மையும் திறந்த மனமும் கொண்ட தேர்ந்த கவிஞர் டிரான்ஸ்டிரோமர்" என்கிறார் இவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பெரிதும் பதிப்பித்த டேனியல் ஹால்பெர்ன். 

1990ஆம் ஆண்டு தாக்கிய பக்கவாத நோயால் கைகால்களின் பாதிப்போடு, பேசும் திறனையும் இழந்தார் டிரான்ஸ்டிரோமர். எனினும் கவிதைகளில் இவரது தீவிரம் முன்னிலும் அதிகம் தொடர்ந்தது.

டிரான்ஸ்டிரோமருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பொழுது ஓலா லார்ஸ்மே என்ற நாவலாசிரியர் சொன்னார் : " அந்த இரயில் இந்த நிறுத்தத்தை ஏற்கனவே கடந்து சென்றுவிட்டது - முதியவரான இவரால் அதைப் பிடிக்கவும் முடியாது - என்று சிலர் நினைத்தனர்; ஆனால் சர்வதேச அளவில் கவிதைகளுக்கான இவரது பங்கு இப்போது உணரப்பட்டுள்ளது. "

- யுவபாரதி

3 comments:

இரா.விஜயகுமார் said...

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.தினமும் இதே போன்ற நல்ல தகவல்களை அனுப்ப வேண்டுகிறேன்.

நன்றி!.

இவண்
இராம.விஜயகுமார்
தமிழ்ப்பானை.

இரா.தெ.முத்து said...

விரைவான பதிவு;வாழ்த்துகள் யுவபாரதி

penamanoharan said...

பயனுள்ள பதிவு.பக்கவாத நோய்,பேசும் திறன் இழப்பு,60 மொழிகளில் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்ற செய்திகள் வலியையும்,மகிழ்வையும் ஒரு சேரத்தருகின்றன்.நன்றி தோழர்.