September 07, 2010

‘ரெட் சன்’ - நூல் அறிமுக நிகழ்வு

ஆங்கிலத்தில் இதழியலாளர் சுதீப் சக்கரவர்த்தியால் எழுதப்பட்டு, தமிழில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அ. இந்திராகாந்தியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ‘ரெட் சன் - நக்சல் பகுதிகளில் ஒரு பயணம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வு காஞ்சிபுரம் புல்வெளி செ. காமராசு இல்லத்தில் 05.09.10 ஞாயிறு காலை 10 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்விற்கு காஞ்சி அமுதன் வரவேற்றுப் பேச கவிஞர் அமுதகீதன் தலைமை வகித்தார். மொழிபெயர்ப்பாளர் அ. இந்திராகாந்தி, புல்வெளி செ. காமராசு, எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம், கவிஞர்கள் யுவபாரதி, தி. பரமேசுவரி, ஹவி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

சிறப்புரை வழங்க இசைந்திருந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு உடல் நலக் குறைவு காரணமாக நிகழ்வில் பங்கேற்க இயலாத நிலையிலும், நூல் குறித்த அவரது கட்டுரையை அவ்வியக்கத்தைச் சேர்ந்த தோழர் பாரதி வாசித்தார்.

நூல் குறித்த தமது கருத்துரையில் யுவபாரதி, பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களின் சூறையாடலுக்காக அரசால் கொடூரமாகச் சுரண்டப்படும் தண்டகாரண்ய (தண்டேவாடா) வனப் பழங்குடிகளின் நிலை, அவர்கள் மாவோயிஸ்டுகளை ஆதரிப்பதற்கான காரணங்கள், அரசாலும் ஆதிக்க வர்க்கத்தினராலும் உருவாக்கப்பட்டு அனைத்து அழிவு வேலைகளயும் செய்யும் ‘சல்வா ஜுதும்’ அமைப்பு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் விவசாயிகளுக்கும் பூர்வகுடிகளுக்கும் நேர்ந்துள்ள துயரம், நேரடி கள ஆய்வின் மூலம் நூலாசிரியர் பழங்குடிகள், போராளிகள், அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளுடனான நேர்காணல்களுடன் எழுதியிருப்பது, அ. இந்திராகாந்தியின் நீரோட்டம் போன்ற மொழிபெயர்ப்பு முதலியவற்றைப் பற்றிப் பேசினார்.

நிகழ்வின் இறுதியில் அ. இந்திராகாந்தி ஏற்புரை வழங்கியதோடு, இந்நூலை மொழிபெயர்க்க நேர்ந்த சூழல், அதற்கான எதிர் வெளியீடு நிறுவனத்தாரின் தூண்டுதல் மற்றும் முயற்சிகள் குறித்துப் பேசினார்; நூல் குறித்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். லோகு நன்றி கூறினார்.

நூலின் விலை. ரூ.250/-

எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642 002.

பேசி: 98650 05084

மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

No comments: