November 16, 2010

ஆ.ராசா : தன்பதத்தால் தானே கெடும்

நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பின், நவம்பர் 14 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் .ராசாவைப் பதவி விலகச் செய்திருக்கிறது. தற்போது நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாகத் தொலைத் தொடர்புத் துறை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண அலுவலகத்தில் கூட ஒரு பிரிவில் பணியாற்றும் ஒரு அலுவலரின் மீது விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதாகச் சில ஆதாரங்களோடு புகார் எழுப்பப்படுமானால், அவரை இடமாற்றம் செய்வதும், அவர் கையாண்ட கோப்புகளைச் சிறப்புத் தணிக்கைக்கு உட்படுத்துவதும் நடைமுறை. நூறு கோடிக்கும் மேலான மக்களை ஆளும் ஒரு நடுவண் அமைச்சர் முறைகேடுகள் செய்ததாக, ஆதாரங்களோடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறதெனில், அவர் தாமாகவே முன்வந்து பதவி விலகுவது என்பதே தார்மீக நெறிமுறை. அல்லது நடுவண் அமைச்சரவையின் தலைவரான பிரதமரே இதை வலியுறுத்த வேண்டும். நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த​போது அப்​​போதும் நடுவண் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இப்படித்தான் பதவி விலகினார்.

இதுவரை இந்தியத் துணைக் கண்டம் கண்டிராத அளவுக்கு - ரூ. 1,70,000 கோடி அளவுக்கு - அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வண்ணம் ஸ்பெக்ட்ரம் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புகார் எழுந்தது. அந்தப் பணத்தைக் கொண்டே கடந்த காலங்களில் நடந்த மக்களவை மற்றும் இடைத் தேர்தல்களுக்கான கட்சியின் செலவுகளை ஆ.ராசாவே ஏற்றுக் கொண்டார் என்றும் பேசப்பட்டது. நடுவண் கணக்குத் துறை அறிக்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு இவ்விவகாரத்தைக் கையிலெடுத்த பின்பே, வேறு வழியின்றி ஆ.ராசாவைப் பதவி விலகச் செய்தாக வேண்டிய நிலைக்குக் காங்கிரஸ் தலைமையிலான ஐ. மு. கூ. அரசு வந்துள்ளது.

நடுவண் கணக்குத் தணிக்கைத் துறை அறிக்கையின் நம்பகத் தன்மை குறித்து ஆ.ராசா சார்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக் காலத்திய பீகார் மாட்டுத் தீவன ஊழல், ஜெ.ஜெயலலிதா ஆட்சிக் காலத்திய எம்.ஜி.ஆர். ஃபிலிம் இன்ஸ்டிடியூட் முறைகேடு, மு.கருணாநிதியின் முந்தைய ஆட்சிக் காலத்திய வீராணம் திட்ட முறைகேடு முதலானவற்றை அம்பலப்படுத்தியது இத்துறையின் அறிக்கையே. அது மட்டுமின்றி, நேருவின் ஆட்சிக் காலத்தில் நிதி முறைகேடு செய்ததாக அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மகாராஷ்டிரத்தில் நடந்த சிமெண்ட் ஊழல் வெளிப்பட்டு அப்போதைய முதல்வர் அந்துலே ஆகியோர் பதவி இழக்க நேர்ந்ததும் நடுவண் கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையினாலேயே.

சமீபத்தில் வெளிப்பட்ட காமன்வெல்த் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சுரேஷ் கல்மாதி, கார்கில் வீரர்களுக்கான ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு முறைகேடுகளில் குற்றம் சுமத்தப்பட்ட மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் இருவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நடுவண் அரசால் உடன் பதவி விலகச் செய்யச் சாத்தியமானது. ஆனால் ஆ.ராசாவோ கூட்டணிக் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்தவர். மற்றும் அதன் தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்.

ஐ.மு.கூ.வின் கடந்த ஆட்சிக் காலத்தில் நடுவண் தகவல் தொடர்புத் துறையானது தி.மு.க. தலைவரது குடும்பத்தைச் சேர்ந்த தயாநிதி மாறனால் நிர்வகிக்கப்பட்டது. இடையில் அக்குடும்பத்தினருக்குள் நேர்ந்த பிணக்குகளை அடுத்து அத்துறை ஆ.ராசாவின் கைக்கு வந்தது. தி.மு.க. தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்ற நிலையில் இக்கூட்டணியின் நடப்பு ஆட்சிக் காலத்திலும் அதே துறைக்கு அமைச்சரானார். இதற்கான மக்களவைத் தேர்தலின் போதும் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆ.ராசாவிற்கும் தி.மு.க.விற்கும் எதிராகப் பரப்புரை செய்யப்பட்டதும் தி.மு.க.வின் அரை நூற்றாண்டுக் காலப் பயிற்சியின் காரணமாக சொல்வாக்காலும் செல்வாக்காலும் அவ்விவகாரம் மக்கள் மன்றத்தில் கேள்வி எழுப்பப்படாமல் மழுங்கடிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்..

பதவி விலகலுக்கு முந்தைய நாளிலும், ஸ்பெக்ட்ரம் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசு விதிகளுக்கு உட்பட்டு நேர்மையாகவே ஆ.ராசா நடந்து கொண்டதாக, அவரும் தி.மு.க.வும் கூறிவந்தனர். இறுதியில் காங்கிரசின் உச்சகட்ட நெருக்குதலுக்குப் பிறகே ஆ.ராசா பதவி விலகி இருக்கிறார். ஆனால் முழுக்க நனைந்தாலும் முக்காட்டைக் கழற்றாமல், நாடாளுமன்றம் தொடர்ந்து நடக்கவும், ஜனநாயகத்தின் மீதான மரியாதையிலும் பதவி விலகல் மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்திருக்கிறது தி.மு.கழகம். ஈழத் தமிழர் கொடுங் கொலைகளின் போது, காங்கிரசோடு வெகு இணக்கமாகச் செயல்பட்டுத் துணை நின்ற தி.மு.க., நாளையே காங்கிரசால் தமது கட்சிக்கோ ஆட்சிக்கோ ஆபத்து எனில், ஒளித்து வைத்திருக்கும் வடவர் சூழ்ச்சி எனும் எறிகணையை எடுத்து வார்த்தைச் சமராடும்.

பதவி இல்லாமல் இருப்பதே பெரிய தண்டனை என்று இவர்கள் நினைக்கக் கூடும். ஆனால் சாமானியனைப் பொருத்தமட்டும் இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவரும் பக்கத் துணைகளும் பங்கு தாரர்களும் நீதிமன்றம்(?) மூலம் பெறுவதுதான் தண்டனை.

அதற்கு எத்தனை காலம் ஆகும்? மக்களே மறந்து விடுவார்கள்!


- யுவபாரதி


இவ்விடுகைக்கான
முகநூல் எதிர்வினை:

ஆரிசன்
http://www.facebook.com/aarison

இந்த ஊழல் இந்தியத்துணைக்கண்டத்தில் அல்ல.உலகத்துணைக்கண்டத்தில் கூட எங்கும் நடக்கவில்லை.1லட்சத்து76ஆயிரம் கோடி ரூபாய் இந்திய நாட்டின் கடனை அடைத்து உலக நாடுகளுக்குக் கடன் கொடுக்கலாம்.இவ்ளோ பெரிய ஊழலுக்கு பக்கத்துல எவ்ளோ பெரிய ஆளுங்க இருந்தாலு
ம்...ராஜாவுக்கு இந்தியா கூஜாவைத்தான் கையில கொடுக்கப் போகுது.ஜனநாயகத்தில் மிகப் பெரு களங்கம் தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கட்சி உணரவேண்டும்.எவ்வளவு தான் மக்களுக்கு இலவசம் கொடுத்தாலும் அத்தனையும் இந்த ஊழல் பணத்தில் தந்தது தான் என்று மக்கள் நினைத்துவிட்டால் வரும் தேர்தலில் அது தி.மு.க வை சங்கடத்தில் ஆழ்த்தும்.இருந்தாலும் சிறுத்தைப்புலி,யானை,முக்கனித்தமிழர்கள் அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் வீரத்தமிழர் கலைஞர் தான் ஒத்துக்கிறீங்களா?பாராளுமன்ரத்தைப் பார்த்த தமிழனும்,பாராளுமன்ற சுகத்தை அனுபவித்து இப்போது பூஜ்ஜியமான தமிழனும் இலங்கை பக்கமே திரும்பலயே/இது இன்னா அரசியல்.
தெரியலயே!சரி எப்பிடியாவது போவட்டும்! இத்தினி கோடி துட்டும், பணமும் திரும்பி வந்தா நாட்டுக்கும் சரி,நமக்கும் சரி நல்லது நடக்கலாம்.


இரா.தெ .முத்து
http://www.facebook.com/IRA.THE.MUTHU

நல்ல கட்டுரை நண்பா;கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற முடக்கப் போராட்டத்தினாலே ராசா விலகினார்;நீங்கள் சொல்வது போல் காங்கிரசினால் அல்ல.

4 comments:

Kataka said...

உண்மை. ஊழலைக் கூட ஜாதிப் பெயரில் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள் .ஊழலக்கு ஜாதி ஏது மதம் ஏது.எல்லாவற்றுக்கும் ஜாதி சாயம் பூசி தப்பிகிரார்கள் .கருணாநிதி புரியாத ஊழலா.தேசத் தலைவர்களை எவ்வளவு ஆபாசமாக பேசியிருக்கிறார் .இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் நான் அந்த காலத்தில் கருணாநிதி நடத்திய அடாவடி அரசியலை பார்த்திருக்கிறேன் .காரியம் ஆகா வேண்டுமென்றால் காலை பிடிப்பார்.இவரது துரோகத்தால் கோபமடைந்தான் M G R தனி கட்சி ஆரம்பித்தார்.

Thanjavooraan said...

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் முடிந்து போய்விட்டது. காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனம்தான் இந்த நிலைமைக்குக் காரணம். கூட்டுப் பார்லிமெண்டரிக் குழு அமைப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம் என்பதை கட்சித் தலைவர் அல்லது பிரதமர் விளக்க வேண்டுமல்லவா? ஊமை வாயைத் திறந்தது போல காங்கிரஸ் தலைவி கடைசி நாளில் திருவாய்மலர்ந்தருளினார். என்னவென்று? பா.ஜ.க.வுக்கு ஊழல் பற்றி கேட்க யோக்கியதை இல்லையாம். சரி! அதை யார் கேட்டார்கள். மக்கள் கேட்கிறார்கள், அவர்களுக்கல்லவா இந்தத் தலைவி பதில் சொல்ல வேண்டும். ஊழலைக் கண்டு வெறுப்பவர்களாம் இவர்கள். அடடா! புல்லரிக்கிறது. உலக மகா ஊழல் "போபோர்ஸ் குவட்டரோச்சி" நாட்டைவிட்டு ஓடவும், அவரது முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை ஸ்வாகா செய்து கொள்ளவும் அனுமதித்தது யார்? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு இன்ன விலை என்கிறார் இந்த தலைவி. நமக்குத் தெரிய வேண்டிய பதில்:‍ ஏன் ஜேபிசிக்கு இவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை? ஆண்டிமுத்து ராசாவோடு இந்த 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார்? சைப்ரஸ், மொரீஷஸ் இங்கெல்லாம் முடக்கப்பட்டுள்ள பணம் யாருடையது? அன்று வாஜ்பாய் அவர்களையும் இன்று பல எதிர் கட்சித்தலைவர்களையும் துச்சமாகப் பேசும் தைரியம் இந்த அம்மையாருக்கு வர யார் காரணம்? இதற்கெல்லாம் பதில் வேண்டுமானால் இந்தியர்களுக்கு சொரணை இருக்கிறது என்பதை தேர்தலில் காட்ட வேண்டும். மிகப் பின்தங்கிய பிஹார் இந்த நாட்டுக்கு முன்னோடியாக அமைய வேண்டும். அப்போதுதான் இந்தியர்கள் தலை நிமிர்ந்து நிற்க முடியும். அடிமைத்தன அவமானத்தால் குனிந்த இந்தியனின் தலை நிமிர வேண்டும்.

Thanjavooraan said...

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் முடிந்து போய்விட்டது. காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனம்தான் இந்த நிலைமைக்குக் காரணம். கூட்டுப் பார்லிமெண்டரிக் குழு அமைப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம் என்பதை கட்சித் தலைவர் அல்லது பிரதமர் விளக்க வேண்டுமல்லவா? ஊமை வாயைத் திறந்தது போல காங்கிரஸ் தலைவி கடைசி நாளில் திருவாய்மலர்ந்தருளினார். என்னவென்று? பா.ஜ.க.வுக்கு ஊழல் பற்றி கேட்க யோக்கியதை இல்லையாம். சரி! அதை யார் கேட்டார்கள். மக்கள் கேட்கிறார்கள், அவர்களுக்கல்லவா இந்தத் தலைவி பதில் சொல்ல வேண்டும். ஊழலைக் கண்டு வெறுப்பவர்களாம் இவர்கள். அடடா! புல்லரிக்கிறது. உலக மகா ஊழல் "போபோர்ஸ் குவட்டரோச்சி" நாட்டைவிட்டு ஓடவும், அவரது முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை ஸ்வாகா செய்து கொள்ளவும் அனுமதித்தது யார்? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு இன்ன விலை என்கிறார் இந்த தலைவி. நமக்குத் தெரிய வேண்டிய பதில்:‍ ஏன் ஜேபிசிக்கு இவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை? ஆண்டிமுத்து ராசாவோடு இந்த 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார்? சைப்ரஸ், மொரீஷஸ் இங்கெல்லாம் முடக்கப்பட்டுள்ள பணம் யாருடையது? அன்று வாஜ்பாய் அவர்களையும் இன்று பல எதிர் கட்சித்தலைவர்களையும் துச்சமாகப் பேசும் தைரியம் இந்த அம்மையாருக்கு வர யார் காரணம்? இதற்கெல்லாம் பதில் வேண்டுமானால் இந்தியர்களுக்கு சொரணை இருக்கிறது என்பதை தேர்தலில் காட்ட வேண்டும். மிகப் பின்தங்கிய பிஹார் இந்த நாட்டுக்கு முன்னோடியாக அமைய வேண்டும்.

Thanjavooraan said...

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் எந்த நடவடிக்கையும் இல்லாமல் முடிந்து போக காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனம்தான் காரணம். JPC அமைப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம் என்பதை கட்சித் தலைவர் அல்லது பிரதமர் விளக்க வேண்டுமல்லவா? காங்கிரஸ் தலைவி கடைசி நாளில் திருவாய்மலர்ந்தருளினார். பா.ஜ.க.வுக்கு ஊழல் பற்றி கேட்க யோக்கியதை இல்லையாம். அதை யார் கேட்டார்கள். மக்கள் கேட்கிறார்கள், அவர்களுக்கல்லவா இந்தத் தலைவி பதில் சொல்ல வேண்டும். ஊழலைக் கண்டு வெறுப்பவர்களாம் இவர்கள். அடடா! புல்லரிக்கிறது. உலக மகா ஊழல் "போபோர்ஸ் குவட்டரோச்சி" நாட்டைவிட்டு ஓடவும், அவரது முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை ஸ்வாகா செய்து கொள்ளவும் அனுமதித்தது யார்? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு இன்ன விலை என்கிறார். ஏன் ஜேபிசிக்கு இவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை? ஆண்டிமுத்து ராசாவோடு இந்த 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார்? சைப்ரஸ், மொரீஷஸ் இங்கெல்லாம் முடக்கப்பட்டுள்ள பணம் யாருடையது? அன்று வாஜ்பாய் அவர்களையும் இன்று பல எதிர் கட்சித்தலைவர்களையும் துச்சமாகப் பேசும் தைரியம் இந்த அம்மையாருக்கு வர யார் காரணம்? இதற்கெல்லாம் பதில் வேண்டுமானால் இந்தியர்களுக்கு சொரணை இருக்கிறது என்பதை தேர்தலில் காட்ட வேண்டும். மிகப் பின்தங்கிய பிஹார் இந்த நாட்டுக்கு முன்னோடியாக அமைய வேண்டும். அப்போதுதான் இந்தியர்கள் தலை நிமிர்ந்து நிற்க முடியும். அடிமைத்தன அவமானத்தால் குனிந்த இந்தியனின் தலை நிமிர வேண்டும்.