February 06, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-2)

விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகம் வரும் முன்னும் தமிழகத்தின் பெரும்பகுதிகள்வேறு இரு அந்நிய ஆட்சிகளின் கீழ் இருந்தன. அவ்வரசுகள் வடபகுதியை ஆண்ட கன்னட ஹொய்சளர்கள் (கி.பி.1225-1343) மற்றும் தென்பகுதியை ஆண்ட மாபார் சுல்தான்கள் (கி.பி.1335-1378). அவ்வாட்சிக் காலம் தனியே ஆராயத் தக்கது. தமிழகத்தின் நாயக்கர் ஆட்சியை அறிய விஜயநகரப் பேரரசின் முக்கியநிகழ்வுகளை அறிய வேண்டியுள்ளது.

விஜயநகரப் பேரரசை நிறுவிய  சங்கம மரபினர் ஹொய்சள அரச வம்சத்தோடு மணவுறவு கொண்டிருந்த யாதவ வம்சத்தார் என்று பெரும்பாலான வரலாற்றறிஞர்கள் ஏற்கின்றனர். சங்கம மரபினர் மட்டுமின்றி ,சாளுவ, துளுவ மரபினரும் தங்கள் மரபினரோடு மட்டுமின்றி ஆந்திர அரச மரபினரான ராஜு குலத்தாரோடும், வேளாண் மரபிலிருந்து அரசியல் தொடர்புகளினால் நிலவுடைமையிலும் வணிகத்திலும் எழுச்சி பெற்றுவந்த பலிஜ குலத்தாரோடும் மணவுறவு கொண்டனர். குமார கம்பணனின் மனைவி கங்காதேவியை பலிஜ குலத்தவர் என்றும் நூல்கள் தெரிவிக்கின்றன.பலிஜ குலத்தார் விஜயநகர அரசர்களின் மெய்க்காவல் துவங்கி படைத்தலைமை, நாயக்கஸ்தானம் வரை பெற்று அரசியலில் பலிஜ குலத்தார் தங்களை வலுப்படுத்திக் கொண்டனர். இறுதியில் அரசாண்ட ஆரவீட்டு மரபிற்கு பலிஜ குலத்தாரே உரிமை கோருகின்றனர். விஜயநகரப் அரசின் இலச்சினை சாளுக்கிய மரபிற்குரிய 'வராகமே' என்பதால், விஜயநகர அரசமரபைச் சாளுக்கிய மரபோடு இணைத்து ஊகிக்கவும் இயலும்.

கங்காதேவியின்
மதுரா விஜயத்தில் பின்வரும் புனைவு ஒன்று உண்டு: "சம்புவராயனை வென்றதும் குமார கம்பணன் காஞ்சியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரது கனவில் தேவ வடிவில் மதுரை மாதேவி (மீனாட்சி?) மதுரையின் அலங்கோல நிலையை வருணித்து, மனித உலகம் கண்டிராத ஒரு ஒளி மிக்க வாளைக் கம்பணன் கையில் தந்து மறைந்தாள்". தமிழர்களைத் ​தெலுங்கர் ஆள அங்கயற்கண்ணியே ஆசி தந்திருக்கிறாள் போல. 

முதலாம் புக்கனுக்குப் பின் ஆட்சிக்கட்டிலேறிய
​​இரண்டாம் ஹரிஹரராயர் (கி.பி.1377-1404) காலத்திலேயே மதுரைப் பகுதிகளிலிருந்து சுல்தான்கள் ஆட்சிமுற்றிலும் துடைக்கப்பட்டது. தமிழகப் பகுதிகளை வேலூர், செஞ்சி, தஞ்சை, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒருமண்டலேசுவரரை நியமித்தார் ஹரிஹரராயர். இவர்களும் ராயரது அரச மரபினரே.

இரண்டாம் ஹரிஹரருக்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களுள்குறிப்பிடத்தக்கவர்
​​​ இரண்டாம் தேவராயர் (கி.பி.1426-1446). கேரளத்தையும் இலங்கையையும் விஜயநகரப் பேரரசின் கீழ் கொண்டு வந்தவர் இவர். இப்போர்களில் இவருக்கு உறுதுணையாயிருந்தவர்கள் பேரரசுக்குப் பணிந்து அப்போது கொற்கையிலிருந்தும் தென்காசியிலிருந்தும் சிற்றரசர்களாக நேர்ந்த பாண்டிய அரச மரபினரே ஆவர். இவர் காலத்துத் தமிழக மண்டலங்களுக்கானமகாமண்டலேசுவரர் (தண்டநாயகர்) இலக்கண்ணராயர்.

இந்த இரண்டாம் அரிகரர் காலத்திலேயே தமிழகம் படைவீடு ராஜ்யம் (வேலூர்), சந்திரகிரி ராஜ்யம் (சந்திரகிரி), சோழ ராஜ்யம் (தஞ்சை), மதுரை ராஜ்யம், திருவதிகை ராஜ்யம் (செஞ்சி) என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு, ராய அரசமரபைச் சாராதவர்களும் மண்டலாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவருக்குப் பின் வந்த இச்
​​​ சங்கமப் பரம்பரையினர் திறமையற்றவர்கள்.

கி.பி. 1485 இல் சந்திரகிரி ராஜ்ய மண்டலாதிபதியாக இருந்த சாளுவ நரசிம்மன் பேரரசரானார். இவருக்குப்பின் இவர் மகன் இம்மடி நரசிம்மன். இவர்களைச்
சாளுவப் பரம்பரையினர் என்பர். இவர்களுக்குப் பின் பேரரசைக் கைப்பற்றியவர் இவர்களிடம் படைத்தலைவராயிருந்த நரச நாயக்கர். இவரே துளுவப் பரம் பரையின் முதல்வர். துளுவப் பரம்பரையினரும் சாளுவரை ஒத்த மரபினரே.



மன்னர் கிருஷ்ண தேவராயர்
அப்போது தஞ்சையில் தன்னாட்சி பெற முயன்ற கோனேரி ராஜனையும் தென்காசிப் பாண்டியர்களையும் அடக்கினார் நரசநாயக்கர். அவரது மகனே கிருஷ்ண​ தேவராயர் (கி.பி.1509-1529).

மகாமண்டலேசுவரருக்குக் கீழ்ப்பட்டிருந்த இராஜ்யங்கள் எனப்பட்ட பிரிவுகளுக்குப் பதிலாக நாயக்கர் முறை இவரது காலம் முதலாகவே தோன்றியது.மகாமண்டலேசுவரர் பதவி மரபுவழிப்பட்டதாக விளங்கவில்லை. ஆனால் நாயக்கர் பதவிமரபு வழிப்பட்டதே. பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் தலைமையில் செஞ்சியிலும் (கி.பி.1509), கரிகபாடி விசுவநாத நாயக்கர் தலைமையில் மதுரையிலும் (கிபி1529) நாயக்கராட்சிகள்நிறுவப்பட்டன. கிருஷ்ண தேவராயரின் மறைவுக்குப் (கி.பி.1530) பின் கி.பி.1532-லேயே அல்லூரி சேவப்ப நாயக்கர் தலைமையில் தஞ்சையில் நாயக்கராட்சிநிறுவப்பட்டது.

தன்னாட்சி அமைப்புகளின் அழிவும் ஆயக்கர் முறையும்

தமிழகத்தில் ஊர், நாடு, சபை போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பிற்காலச் சோழர்களின் காலத்தில்
தன்னாட்சி (Self-rule) கொண்டிருந்தன. வரி வாங்கவும், பஞ்ச காலங்களில் வரித் தள்ளுபடி செய்யவும் அதிகாரம் பெற்றிருந்தன. கோயில்களை மேற்பார்வை செய்தன. அறநிலையப் பொறுப்பேற்றுக் கண்காணித்தன. பொது மக்களிடம் பணம் வாங்கி, வைப்பு நிதியாக்கி, தேவையான காலங்களில் மக்களுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் வழங்கும் வங்கிகளாகவும் இருந்தன. நிலங்களை விற்கும் உரிமையும், தானியர் முதலான கோவில் அலுவலர்களை நியமிக்கும் அதிகாரமும் இவ்வமைப்புகளுக்கு இருந்தன.

விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக் காலமான கி.பி.15-ஆம் நூற்றாண்டிலேயே - அப் பேரரசின் பகராளிகள் (பிரதிநிதிகள்) மதுரை, தஞ்சை, செஞ்சி முதலான பகுதிகளிலிருந்து அதிகாரம் செலுத்தி வந்த காலத்திலேயே - இச்சிற்றூராட்சி முறை ஒழிக்கப்பட்டு, பன்னிருவர் அடங்கிய
ஆயக்கர் முறை (Ayakar System) தோற்றுவிக்கப்பட்டது. எல்லா நிலமும் அரசருடையதே என்றானதால், நிலவுரிமை பெற்றிருந்த தமிழ்க்குலங்கள் பலவும் குத்தகை விவசாயக் குடிகளாயின. ( விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள் என்பதை நினைவில் கொள்க.) படைப்பற்றுகள் என்ற பெயரில் படைவீரர்களுக்கு மானியமாகவும் வழங்கப்பட்டன.

ஆயக்கர் முறையிலுள்ள பன்னிருவரில்
மணியம், கர்ணம், தலையாரி ஆகிய மூவரும்அரசால் நியமிக்கப்படுபவர்கள். கிராமத்தின் வரி வருவாய், நிலப் பரப்பு, எல்லைகள், நீர்நிலைகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்பவர் கர்ணம். கர்ணத்தின் உதவியுடன் வரி வசூலிப்பவர் மணியம் (மணியக்காரர்). ஊர்க்காவல்பணி செய்பவர் தலையாரி. ஆயக்கர் முறையிலுள்ள மற்ற ஒன்பதின்மர் சிற்றூர் மக்களின் பணிகளுக்குத் தேவையான தட்டார், கருமார், தச்சர், குயவர், புரோகிதர், செருப்புத் தைப்போர், வண்ணார், மயிர் வினைஞர், நீர்வழங்குநர் ஆகியோர். இவர்கள் அரசால் நியமிக்கப்படுவதில்லை. இவர்களுக்கு மானியமாக நிலம் வழங்கப்பட்டது. அதற்கு ஜோடி (Quit-Rent) என்ற வரி செலுத்தவேண்டியிருந்தது. இந்த ஆயக்கர் முறையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையில் தமிழகத்தில் இருந்தது.

தெலுங்கர் மற்றும் கன்னடர் குடியேற்றம்

விஜயநகரப் பேரரசு தமிழ்ப் பகுதிகளில் வேர்விட்டு நிலைபெற்ற இவ்விரு நூற்றாண்டுகளிலேயே பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் தமிழகத்தில்குடியேறினர். கன்னடர்களும் குடியேறினர்.

"தமிழகம் தெலுங்கர்களான விஜயநகர வேந்தர்களின் ஆட்சியில் இருந்தபோது, தெலுங்கர்கள் இந்நாட்டில் வந்து குடியேறாமலா இருப்பார்கள்? தெலுங்கர் ஆட்சியில் தெலுங்கர் குடியேறுவது இயற்கை. ஆதலால், தெலுங்கர்களான கம்மவார்களும் நாயக்கர்களும் ரெட்டியார்களும் வேறு கன்னடர்களும் அலுவலர்களாகவும் போர்வீரகளாகவும் வணிகர்களாகவும் தமிழ்நாட்டில் குடியேறினார்கள் " என்பார் அ.கி. பரந்தாமனார்.

பலிஜவார், கம்மவார், கம்பளத்தார் உள்ளிட்ட நாயுடு வகையினர், ரெட்டியார், ராஜூ, ஆரியவைசியர், பேரிவைசியர், தேவாங்கர், தெலுங்குப் பிராமணர், கன்னடப் பிராமணர், தொட்டியர், அருந்ததியர், ஒட்டர், சாலியர், தொம்பர், ஒக்கலிகர் எனப் பல்வேறு தெலுங்கு மற்றும் கன்னடச் சாதியினர் தமிழகத்தில் குடியேறினர்.

விஜயநகரப் பேரரசுக்கு முந்திய கன்னடர்களான ஹொய்சளர்களின் தமிழகத்தின் மீதான ஒரு நூறாண்டு கால ஆட்சிக்காலத்திலேயே கன்னடப் பிராமணர்கள், ஒக்கலிகர்கள் தமிழகத்தில் குடியேறியிருந்தனர். ஆட்சியின் துவக்கத்திலேயே 
ஹொய்சளரை வீழ்த்தி கருநாடகம் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டதாலும் பேரரசின் ஆட்சியில் தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளைத்தாய்மொழியாகக் கொண்ட பரம்பரைகளும் இருந்ததாலும் இக்காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான தெலுங்கர்கள் மட்டுமின்றி கன்னடர்களும் தமிழகத்தில் குடியேறினர்.

இதனால்தான் விஜயநகரப் பேரரசுக் காலம் என்பது தெலுங்கு இலக்கியத்திற்குமட்டுமின்றி கன்னட இலக்கியத்திற்கும், சமஸ்கிருத இலக்கியத்திற்கும்பொற்காலமாகவே இருந்தது. 


- யுவபாரதி 

(அடுத்தது)

12 comments:

Anonymous said...

அருமையான வரலாற்று தகவல்கள் ஸ்வாரஸ்யமாக தொகுக்கப்பட்டுள்ளது நன்றி

Indian said...

//இரண்டாம் அரிகரருக்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களுள்குறிப்பிடத்தக்கவர் ​​​ இரண்டாம் தேவராயர் (கி.பி.426-46).//

1426-46?

Indian said...

//தட்டார், கருமார், தச்சர், குயவர், புரோகிதர், செருப்புத் தைப்போர், வண்ணார், மயிர் வினைஞர், நீர்வழங்குநர் ஆகியோர்.//

பெரும்பாலான பணிகளுக்கு ஆந்திரத்திலிருந்து ஆட்கள் தருவிக்கப்பட்டு தமிழகத்தில் குடியமர்த்தப்பட்டனர் என்பதை அறியமுடிகிறது. அதற்கு முன்னால் அப்பணிகளை யார் செய்து கொண்டிருந்தார்கள்?

Yuvabharathy Manikandan said...

அன்புள்ள இந்தியன்,

இரண்டாம் தேவராயர் காலம் கி.பி.1426-1446 தான். தட்டச்சு செய்த போது 426-46 என்று தவறியிருக்கிறது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தம் செய்திருக்கிறேன்.

//தட்டார், கருமார், தச்சர், குயவர், புரோகிதர், செருப்புத் தைப்போர், வண்ணார், மயிர் வினைஞர், நீர்வழங்குநர் ஆகியோர்...// ஆயக்கர் முறையில் பணியமர்த்தப்பட்ட இவ்வொன்பாண் தொழிலாளர்களில் பூர்வகுடித் தமிழ்ச் சாதியினரும், நாயக்கர்களால் குடியேற்றப்பட்ட தெலுங்குச் சாதியினரும் இருந்தார்கள்.

ஒரே தொழில் செய்த இருவேறு இனத்தவரிலும் ஆட்சியாளர்களின் (தெலுங்கர்) இனத்தவர்களே சமூக அளவில் சற்று உயர்ந்து மதிக்கப்பட்டனர். நேரடி நாயக்கர் ஆட்சி மற்றும் பாளையப்பட்டு முறை நடைமுறையாக்கத்தின் போது தெலுங்கு ஆட்சியாளர்களோடு சேர்ந்து அதன் மூலம் அதிகாரம் பெற்ற தமிழ்ச் சாதிகள் மற்றும் நாயக்கர்களை எதிர்த்து அதனால் வீழ்த்தப்பட்ட தமிழ்ச் சாதிகளை அடுத்தடுத்த பதிவுகளில் குறிப்பிட இருக்கிறேன்.

saarvaakan said...

அருமை யான பதிவுகள் தோழர்,
காலம் காலமாய் விடை தெரியா கேள்விகளுக்கு விடை காணும் முயற்சிக்கும்,தமிழர் வரலாற்ரை ஆவண்மாக்குதலுக்கும் பாராட்டுக்ள்
சங்கர்

saravanan said...

மிக்க நன்றி தமிழர்களின் இழிவு நிலைக்கு பின்னால் மறைக்க்பட்டிருக்கும் வரலாற்றை திருப்பி எடுத்து சொல்வது மிக கடினமான விஷயம் அதை தகுந்த சான்றுகள் மூலம் தகுந்த முறையில் பதிவு செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி...

phantom363 said...

very interesting. very well written. the pace and thelanguage. looking forward to reading you serial in yaavarum.com. best wishes..raja rajamani

கார்த்திக்ராஜா said...

சாலியர்கள் சோழர் காலம் முதலே தமிழகத்தில் தான் வாழ்கின்றனர். தெலுங்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் அழைத்து வரப்பட்டது பத்ம சாலியர்கள் தான்.

Anonymous said...

சாலுக்கியர்கள் தோம்பர்களே

Anonymous said...

நாயுடு ஒட்டர்கள் , ரெட்டி தோம்பர்கள்,

Anonymous said...

சாலுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்கள் தோம்பர்கள் மறறும் டோம்பர்கள்

Anonymous said...

சாலுக்கிய அரசர் மற்றும் ராஷ்டிர கூடர்கள் தோம்பர் இனத்தை சேர்ந்தவர்களே