December 19, 2011

தமிழ்த் தோழர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்

நண்பர்களே!


கடந்த 1990-களில் கருநாடகத்தில் தமிழர்களின் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. தற்போது கேரளத்தில். இவ்வன்முறைகள் பெருமளவில் நிகழ்த்தப்பட்ட பெங்களூர் தண்டுப்பகுதியும் சரி, கேரளத்தின் தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு வட்டங்கள் மற்றும் செங்கோட்டை வனப்பகுதியும் சரி. மாநில மறுசீரமைப்புக் கமிஷனால் வஞ்சிக்கப்பட்டு தமிழகம் இழந்த பகுதிகள். இவ்வரலாறே நமக்குத் தெரிவதில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க உண்மை.


1960-களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தி.மு.க. காட்டிய முனைப்பு தமிழக எல்லைக் காப்புப் போராட்டங்களில் இல்லை என்பது முக்கியக் காரணம். தமிழரசுக் கழகம், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் போன்ற பிற அமைப்புகள் முன்னெடுத்த வடக்கெல்லை, தென்மேற்கு எல்லைப் போராட்டங்களில் அண்ணாவின் அனுமதியோடு / அவரவர் உணர்வால் அந்தந்த பகுதியின் தி.மு.க.வினர் சிலர் பங்கெடுத்தனர். அவ்வளவுதான். தி.மு.க.வின் தலைவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிற்காலத்தில் என்ன நேர்ந்தது?


பிற்காலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளே ஆட்சிக்கு வந்ததால், பிற அமைப்புகள் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்த வரலாறு நமக்குப் புகட்டப்படவேயில்லை. இப்போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் துறந்தோர் குறித்தும் நாம் அறிந்துகொள்ள முடியவில்லை.


வடக்கெல்லைப் போராட்டத்தில் (திருத்தணி) சிறையிலேயே உயிர் துறந்தவர்கள் இருவர். தெற்கெல்லைப் போராட்டத்தில் (குமரி) துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானோர் 11 பேர். சிறைப் பட்டவர்களும், அடியுதைப் பட்டவர்களும் ஏராளம்.


தமிழ், தமிழகத்தின் உரிமை காக்கப் போராடியவர்கள் எந்த கட்சியினர் ஆயினும் சரி. அவர்கள் யாவரும் நம் முன்னோர். அவர்களது போராட்ட வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியது நம் கடமை. அவ்வரலாற்றை நாம் அறியத் துணை செய்யும் பல நூல்கள் உள்ளன. முக்கியமான இரு நூல்களைப் பரிந்துரைக்கிறேன்.


1) புதிய தமிழகம் படைத்த வரலாறு 

    - ம.பொ.சிவஞானம்
    
    விலை ரூ.150/-

    பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு, மயிலாப்பூர்,
    சென்னை-4. பேச: 24943074


2) தமிழன் இழந்த மண்

    - பழ.நெடுமாறன்

    விலை ரூ.60/-

    தமிழ்க்குலம் பதிப்பாலயம், 48, மேலமாசி வீதி, மதுரை-1.


விருப்பம் இருப்போர் வாசியுங்கள் !


 - யுவபாரதி 

3 comments:

சிவக்குமார் said...

நிச்சயமாக வாங்கி வாசிக்கிறேன். நன்றி தகவலுக்கு.

​செல்​லையா முத்துசாமி said...

எல்​லைப்​ ​போராட்டத்தில் ​பெரியார் அக்க​றை காட்டவில்​லை என்று இப்​போது ஒரு பிரச்சாரம் ​செய்துவருகிறார்கள்.

1953 ல் ஆந்திரா பிரிந்த​போதுதான் இந்தச் சிக்கல் வந்தது. அப்​போது நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஒன்று திருத்தணியில் நடந்த எல்​லைப் ​போராட்டம், மற்​றொன்று ​சென்​னை நக​​ரை ஆந்திராவுக்கு ​கேட்டார்கள் என்பது.

இதில், ​பெரியார் என்ன நி​லைப்பாடு எடுத்தார் என்றால், 1956 ஆம் ஆண்டு, ​வேலூரில் ஒரு கூட்டத்தில் ​பெரியார் ​பேசுகிறார். எல்​லைப் ​போராட்டத்தில் ​பெரியார் கலந்து​​கொள்ளவில்​லை​யே என்ற ​கேள்வி வருகிறது. அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார்.

"முதல் கூட்டத்தில் ம.​பொ.சி உட்பட நாங்கள் எல்​லோரும் கலந்து​கொண்​டோம். எல்​லைப்​ ​போராட்டம் பற்றி ​பேசி​னோம். அப்​போது நான் ஐந்து திட்டங்க​​ளை முன்​வைத்​தேன்.

இந்தப் ​போராட்டத்​தோடு இந்தி எதிர்ப்​பையும் ​சேர்த்துக்​கொள்ள​வேண்டும்.

ப​டை, ​போக்குவரத்து, ​வெளியுறவுத்து​றை தவிர அ​னைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்குள்தான் இருக்க​வேண்டும். ​

சென்​னை ராஜ்யம் என்ப​தை தமிழ்நாடு என ​பெயர் மாற்ற​வேண்டும்.

காங்கிரசு கட்சி, தட்சிண பிர​தேசம் என்ற அ​மைப்​பை உருவாக்க நி​னைக்கிறது. அ​தை எதிர்க்க​வேண்டும்.

என்று இந்த ஐந்து ​​கோரிக்​கைகளில் தமிழ்​தேசியத்திற்கு எதிராக எதுவும் இல்​லை. ஆனால், தமிழ்​தேசியத்தின் தந்​தையாகக் கருதப்படுகிற ம.​பொ.சி,

"நான் இந்தியன் என்பதால் இந்தி ​மொழி​யை ஏற்றுக்​கொள்கி​றேன். நான் இந்து என்பதால் என் சமய சடங்குகளில் சமஸ்கிருதத்​தை ஏற்றுக்​கொள்கி​றேன்." என்றார்,

இ​தை இரண்​டையும் எதிர்த்த ​பெரியார் ​வைத்த அந்த ​​கோரிக்​கைகளுக்கு, "கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக்​கொள்ளவில்​லை. என​வே ​வேண்டாம்" என ம.​பொ.சி ​சொன்னார்.

ம.​பொ.சி உயி​ரோடு இருந்த காலத்தில் ​பெரியார் இ​தைப் பதிவு ​செய்துள்ளார். "தாராளமாக நீங்கள் ​போராடுங்கள். நாங்கள் உங்க​ளோடு இ​ணைந்து நிற்கமுடியாது" என்று ​பெரியார் ​தெரிவித்துவிட்டார்.

24-12-2010 ​பெரியார் நி​னைவுநாளில் ​பெரம்பூரில் ​கொளத்தூர் மணி ​பேசியது.

குழப்பவாதிகளுக்கு கழகத் த​​லைவர் ​​கொளத்தூர் மணி பதில் என்ற த​​லைப்பில் சனவரி 20-2011 ​பெரியார் முழக்க பதிவிலிருந்து

http://www.chelliahmuthusamy.com/2011/12/blog-post_27.html

யுவபாரதி said...

பெரியார் வேலூர் கூட்டத்திலே சொன்னதாக நீங்கள் பதிவு செய்திருக்கும் கருத்து விவாதத்திற்குரியது. பெரியார் ஒரு சமூகப் போராளி. எல்லை மீட்பு குறித்து அக்கறை கொண்டவரல்ல. அதற்காக அவரோ, அவரது இயக்கமோ முன்னெடுத்த போராட்டம் என்ன? எல்லாவற்றிற்கும் பெரியாரை சர்வ ரோக நிவாரணி போல பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இதன் மூலம் முழுமையாய்ப் போராடிய பலரது பங்கு இருட்டடிக்கப்படுஇறது.

இதே விடயம் பற்றி ம.பொ.சி. தனது தன்வரலாறான "எனது போராட்டத்திலே" குறிப்பிட்டிருப்பார்.

தட்சிண ராஜ்யம் திட்டத்தை எதிர்க்கவும், தேவிகுளம்-பீர்மேடு தாலுக்காக்களை மீட்கவும், தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்கு வெற்றி தேடவும் அனைத்துக் கட்சிகளும் கலந்த ஒரு கூட்டணியை அமைக்க விரும்பி ம.பொ.சி. மூன்று முறை பெரியாரைச் சந்தித்துப் பேசியபோதும், அப்போராட்டத்தில் தான் பங்கேற்க வேண்டுமானால் தி.மு.க. இல்லாத கூட்டணி அமைக்கப்படவேண்டும் (அதாவது - தி.மு.க. இதில் பங்கேற்கக் கூடாது) என்பதே பெரியார் விதித்த நிபந்தனை என்பதையும், இந்த விடயத்தில் - அனைத்துக் கட்சிகளையும் போராட்டத்தில் இணைக்க எண்ணிய - ம.பொ.சி.யால் பெரியாரைத் திருப்திப்படுத்த முடியவில்லை என்பதையும் அவரது தன்வரலாறு தெரிவிக்கிறது (எனது போராட்டம், பக். 501-504).

எல்லை மீட்பில் ம.பொ.சி.யின் பங்கே அதிகம். அதுதான் வரலாற்றில் அவருக்கான இடத்தை உறுதி செய்திருக்கிறது.