March 24, 2012

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-8)

அல்லூரி அச்சுதப்ப நாயக்கர் (கி.பி.1560-1614)

கி.பி.1560 முதல் இளவரசராக (யுவராஜா) இருந்த அச்சுதப்ப நாயக்கர், தந்தை சேவப்பனின் மறைவுக்குப் பின், 1580-ல் தஞ்சை மன்னரானார். சின்ன சேவாச்சுதா என்றும் அழைக்கப்படும் இவரது பட்டத்தரசி மூர்த்திமாம்பா; மகன் இரகுநாதன்.

இவருக்குப் “பிரதானி”யாக இருந்தவர் கன்னடப் பிராமணரான கோவிந்த தீட்சிதர். சேவப்பரின் இறுதிக் காலத்தில் பிரதானியாகப் பதவியேற்ற இவர், அச்சுதப்பனின் காலத்திலும் தொடர்ந்தார். விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹரிஹரன்–புக்கனுக்கு இராஜகுருவாக விளங்கிய மாதவ வித்யாரண்யருக்கு இணையாக, தஞ்சை அரசில் செல்வாக்குப் பெற்றவராக ஆய்வாளர்களால் அறியப்படுபவர் கோவிந்த தீட்சிதர். பட்டீசுவரம் திருக்கோவிலில் இவருக்குச் சிலை உள்ளது.  

தஞ்சை நாயக்க அரசில் அரசருக்கு அடுத்து பெரும் செல்வாக்கு பெற்ற பதவி பிரதானி என்பதாகும். பிரதம அமைச்சர் (Prime Minister) பதவிக்கு ஒப்பானது அது. நாட்டின் உள்நாட்டு – வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் பிரதானியின் பங்கு மிகப்பெரியது. பிரதானிக்கு அடுத்த முக்கியப் பதவி “தளவாய்” எனப்படும் படைத்தளபதியாகும்.

மாறாக, மதுரை நாயக்க அரசில், அரசருக்கு அடுத்து தளவாய் எனும் பதவியே செல்வாக்கு பெற்றது. தலைமை ஆளுநர் (Governor General) பதவிக்கு ஒப்பானது என்பர். அவருக்கு அடுத்த முக்கியப் பதவியே பிரதானி என்பது. மதுரை அரசைப் பொறுத்தவரை பிரதானி அரசின் வரவு செலவைக் கவனிக்கும் நிதியமைச்சர் மட்டுமே.

அச்சுதப்பனின் இளவரசுக் காலத்தில்தான், விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியுறத் துவங்கியதற்கும், விஜயநகரம் எனும் ஹம்பி முற்றிலும் அழியவும் காரணமான தலைக்கோட்டைப் போர் நடந்தது (ஜனவரி 1565). கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த இப்போரில் தக்காணச் சுல்தான்கள் எனப்படும் ஆமதுநகர், பீரார், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார் ஆகிய ஐந்து நாடுகளின் சுல்தான்களும் ஒன்றுசேர்ந்து விஜயநகரப் படைகளை வீழ்த்தினர். பெனுகொண்டாவிற்குப் பெயர்ந்தது விஜயநகர அரசு.

மதுரை, செஞ்சி நாயக்கர்களைப் போலன்றி, சதாசிவராயர், திருமலைராயர், ஶ்ரீரங்கராயர், வேங்கடபதிராயர் முதலான விஜயநகர அரசர்களுக்குப் பணிந்த உண்மை விசுவாசியாகவே இருந்தார் அச்சுதப்ப நாயக்கர். வேங்கடபதிராயர் எனும் வேங்கடவர் காலத்தில் பேரரசை எதிர்த்துக் கலகம் செய்த மதுரை வீரப்ப நாயக்கரை எதிர்த்து, வல்லம்படுகையில் போரிட்டார் ராயர். அப்போரில் பேரரசுக்குக் கட்டுப்பட்டவர் என்ற நிலையில் பேரரசை ஆதரித்து மதுரை நாயக்கரை எதிர்த்தார் அச்சுதப்பன். இதனால், இப்போரில் தோல்வியுற்ற மதுரை வீரப்ப நாயக்கர் தஞ்சை மீது தீராப் பகை கொண்டார்.

பெனுகொண்டாவில் நிலைகொண்ட விஜயநகர அரசுக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர் தக்காணச் சுல்தான்கள். அவ்விதம் முகமது குலி குதுப்ஷாவின் தலைமையில் படையெடுத்து வந்த கோல்கொண்டாப் படையை, வேங்கடபதிராயரின் சார்பில் எதிர்த்துப் போரிட்டு வென்றார் அச்சுதப்பனின் மகன் இரகுநாதன். இரகுநாதனுக்கு 1589-லேயே இளவரசுப் பட்டம் அளித்து இணையாட்சி நடத்தச் செய்தார் அச்சுதப்பன். நாகப்பட்டினத்திலும் கொழும்புவிலும் கால்கொண்டு அடிக்கடி தொல்லை கொடுத்துவந்த போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக, யாழ்ப்பாண அரசுக்குத் துணைகொண்டு பலமுறை போரிட்டுள்ளார் அச்சுதப்பன்.

இரகுநாத நாயக்கர் எழுதிய “அச்சுதாப்யுதயமு”, விஜயராகவ நாயக்கர் எழுதிய “ரகுநாதாப்யுதயமு” ஆகிய தெலுங்கு நூல்களும், பிரதானி கோவிந்த தீட்சிதரின் மகனும் கவிஞருமான யக்ஞ நாராயணன் எழுதிய “ஸாஹித்ய ரத்னாகரா” என்ற சம்ஸ்கிருத நூலும் அச்சுதப்பனின் போர் வெற்றிகள் குறித்துப் பேசுகின்றன.

காவிரியின் குறுக்கே திருவாடி அருகே அணை கட்டுவித்தது நீர்ப்பாசனத்திற்கான இவரது முக்கியப் பணியாகும்.


திருவரங்கம் அரங்கநாதர் கோவில்
திருவரங்கம் அரங்கநாதன் மீது பெரும்பக்தி கொண்டவர் அச்சுதப்ப நாயக்கர். தஞ்சையிலிருந்து தினமும் திருவரங்கம் சென்று வருவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். திருவரங்கம் செல்ல முடியாத நாட்களில் தஞ்சை அரண்மனையிலிருந்தே திருவரங்கம் கோவிலைத் தரிசிக்க ஏதுவாக ஒரு உயரமான மாடக் கோபுரத்தையும் அரண்மனையில் கட்டுவித்திருந்தார் என்பர். திருவரங்கக் கோவிலின் வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்களும், எட்டாம் திருச்சுற்றும் (பிரகாரம்), கோவிலினுள் பல மண்டபங்களும் அச்சுதப்பன் கட்டுவித்தவை. கோவில் விமானத்திற்கும் கொடிமரத்திற்கும் பொன்வேய்ந்ததுடன், பற்பல மணிகள் பதித்த மகுடத்தோடு கூடிய திருமால் விக்கிரகத்தையும் கோவிலுக்கு வழங்கினார் அச்சுதப்ப நாயக்கர்.

மேலும், மாயவரம், திருவிடைமருதூர், திருவாடி, கும்பகோணம் முதலான ஊர்களில் காவிரிக்கரையை ஒட்டி படிகளுடன் கூடிய புஷ்யமண்டபங்கள் கட்டுவித்தார். திருவண்ணாமலை மற்றும் இராமேசுவரம் திருக்கோவில் கோபுரங்களுக்கு பொற்கலசங்கள் வழங்கினார். சிதம்பரம் திருமூலட்டான ஆலயம், மூவாலூர் மார்க்கசகாயர் ஆலயம், திருவிடைமருதூர் சிவன் கோவில் ஆகியவற்றிற்கு நிலக்கொடையும் வழங்கியுள்ளார் அச்சுதப்பன்.

தனது முதுமை காரணமாகவும், மகன் இரகுநாதனின் திறன் மீது கொண்டிருந்த நம்பிக்கை காரணமாகவும் கி.பி.1600 வாக்கிலேயே ஆட்சிப் பொறுப்பை இரகுநாதனிடம் அளித்திருந்தார் அச்சுதப்பன்.

- யுவபாரதி

(அடுத்தது)

No comments: