March 14, 2013

தமிழகத்தில் மரபுத் திருமணங்களே நடைமுறைவிதி : ஆய்வு முடிவுகள்

நன்றி : தி ஹிந்து
(12.02.2013 The Hindu நாளிதழில் Traditional marriage the norm in State, says study எனும் தலைப்பில் வெளிவந்த ஆர். இளங்கோவன் அவர்களது ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் – யுவபாரதி)

தலித் இளைஞர்கள் பிற சாதிப் பெண்களை மயக்கித் திருமணம் செய்வதாகக் குற்றம் சாட்டிவரும் ராமதாஸின் கூற்றை மறுக்கின்றன ஆய்வு முடிவுகள்.

தலித் இளைஞர்கள் பிற சாதிப் பெண்களை மயக்கித் திருமணம் செய்வதாக யாரொருவர் கூற முனைந்தாலும், தமிழகத்தில் சாதிக் கலப்புத் திருமணங்களின் விழுக்காடு மிகக் குறைவாக இருப்பதை எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் பல ஆய்வு முடிவுகளின் புள்ளிவிவரங்களிலிருந்து சுட்டிக் காட்டுகின்றனர்.
சாதிக் கலப்புத் திருமணங்களுக்கு எதிராகப் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பரப்புரை செய்துவரும் நிலையில், 2005-2006ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப நல ஆய்வு - III (National Family Health Surveyகணக்கீடுகளையும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மக்கள்தொகை சம்பந்தமான கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முடிவுகளையும் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

‘நாடகக் காதல் திருமணங்கள்’ என்பதை எதிர்ப்பதாகப் பரப்புரை செய்துவரும் டாக்டர் ராமதாஸ், இவை சில (தலித்) இளைஞர்களால் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களைக் காதல் என்ற பெயரில் கவர்ந்து, அவர்களது பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் நாடகம் என்கிறார். பிற மாநிலங்களை விட சாதிக் கலப்புத் திருமணங்களில் ஆர்வமற்ற மாநிலம் தமிழகம் என்பதை மேற்படி தேசிய குடும்ப நல ஆய்வு – III கணக்கீடுகளிலிருந்து அறியமுடிகிறது. நாடு முழுவதிலும் திருமணமான தம்பதிகளிடமிருந்து (43102) பெறப்பட்ட தரவுகளிலிருந்து, இந்துத் தம்பதிகளில் (32154) தேசிய அளவில் 10 விழுக்காடு சாதிக் கலப்புத் திருமணம் என்ற நிலையில், தமிழகத்தில் இந்த விழுக்காடு 2.59ஆக இருக்கிறது.
நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சாதிக் கலப்புத் திருமணங்கள் நடக்கும் மூன்று மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மற்ற இரண்டு மாநிலங்கள் : ஜம்மு - காஷ்மீர் 1.67விழுக்காடு. இராஜஸ்தான் 2.36விழுக்காடு.
டி.ரவிக்குமார்
“சாதிக் கலப்புத் திருமணங்கள் தொடர்பான இரு ஆய்வுகளுக்கு இப்புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்பட்டன. “இந்தியா : உண்மையிலேயே காலத்திற்கு ஏற்ப மாறியிருக்கிறதா?” என்ற தலைப்பின் கீழ் குமுதினி தாஸ், டீ.கே.ராய், பி.கே.திரிபாதி, கே.சி.தாஸ், வந்தனா கவுதம் ஆகியோராலும், “இந்தியாவில் மதக் கலப்புத் திருமணங்கள் மற்றும் சாதிக் கலப்புத் திருமணங்களின் இயக்கப்போக்கு” என்ற தலைப்பின் கீழ் குமுதினி தாஸ், கே.சி.தாஸ் மற்றும் சில கல்வியாளர்களும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகள் ‘சாதிக்கு அப்பால் செய்யப்படும் திருமணம் இன்னமும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை’ என்பது போன்ற சில கசப்பான உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டின” என்கிறார் எழுத்தாளரும் வி.சி.க. தலைவருமான டி.ரவிக்குமார்.
“மேலும் தேசிய குடும்ப நல ஆய்வு - III கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டு வேறு சில ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தைப் பொருத்தவரை பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தம்மை விடக் கீழ் சாதிகளைச் சேர்ந்த – குறிப்பாக தலித் - ஆண்களைத் திருமணம் செய்வது என்பது வெறும் 1.66 விழுக்காடு மட்டுமே. இவ்வகைத் திருமணத்தின் தேசிய சராசரி 5.58 விழுக்காடு. அதே சமயத்தில், கேரள மாநிலத்தில் இது 12.24 விழுக்காடு.
தமிழகத்தில் ஒரே சாதிக்குள் நடக்கும் திருமணங்களே 97.41 விழுக்காடு ஆகும். இவ்வகையில் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் ஒரே சாதிக்குள் திருமணம் செய்வது என்பதில் தமிழகமே தலைமை வகிக்கிறது” என்கிறார் ரவிக்குமார்.
ஸ்டாலின் ராஜாங்கம்
“தலித்துகளைக் குற்றஞ்சாட்டி, சாதிக் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான பரப்புரை செய்தென்பது அரசியல் நிர்ப்பந்தத்தால் விளைந்த ஒரு தவறான சமூக இயக்கப் போக்கு என்கிறார்” மதுரையைச் சேர்ந்த தலித்திய எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
மேலும், “பெரும்பாலான சாதிக் கலப்புத் திருமணங்கள் தலித் ஆண்களுக்கும் இடைநிலைச் சாதிப் பெண்களுக்கும் இடையில்தான் நடக்கின்றன என்பதான ஒரு பொய்ச் சித்திரத்தை வரைந்துகாட்டி வருகிறது பா.ம.க. பிற சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தலித்துகளை மட்டுமே திருமணம் செய்கிறார்கள் என்று சொல்வது வெறும் கட்டுக்கதை” என்கிறார் ஸ்டாலின்.
புள்ளிவிவரங்களும் ஆய்வுகளும் கூட இவரது பார்வையையே மெய்ப்பிக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரையில் 15-19 வயதுகளுக்கிடையிலான பெண்கள், தம்மை விடக் கீழ் சாதிகளைச் சேர்ந்த (தலித்துகள் உட்பட) ஆண்களைத் திருமணம் செய்வதென்பதன் விழுக்காடு பூச்சியம். கேரளத்தில் இது 12.5 விழுக்காடு. உண்மையில், தமிழகத்தில் 15-19 வயதுகளுக்கிடைப்பட்ட 98.68 விழுக்காடு பெண்கள் தமது சொந்த சாதி ஆண்களையே திருமணம் செய்கின்றனர்.
தமிழகத்தில் 20-24 வயதுகளுக்கிடைப்பட்ட பெண்களில், தம்மை விடக் கீழ் சாதிகளைச் (தலித்துகள்உட்பட) சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்பவர்களது விகிதம் 2.05 விழுக்காடு என்பது பரவாயில்லை. ஆயினும், கேரளத்தில் இவ்விகிதம் 16.5 விழுக்காடு ஆகும்.
இப்புள்ளிவிவரங்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தலித் இளைஞர்களால் மயக்கிக் கவரப்படுகின்றனர் என்கின்றனர் எனும் குற்றச்சாட்டைப் பொய்யாக்குகின்றன என்கிறார் ரவிக்குமார்.

No comments: