December 03, 2016

சுதாகரனுக்குத் தைக்கத் தெரியும்


அன்றைக்கு வேங்கிக்காலில் பேருந்து விட்டிறங்கியபோது பொழுது சாய்ந்து விட்டிருந்தது. காற்றற்று ஆடாமல் விறைத்திருந்த கருத்த மரங்களை எண்ணியபடி மேற்கே நடந்துகொண்டிருந்தேன். மேலும் கீழும் இடமும் வலமுமாக சொற்கள் எப்போதும் உள்ளுக்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும். யாரோடும் பேச வாய் வராது. புத்தாயிரம் என்று சொல்லப்பட்டது பிறந்து இரண்டு வருடங்களாவது ஆகியிருக்கும்.

இடுக்குப் பிள்ளையார் பக்கம் நடந்துகொண்டிருந்தபோது ‘அண்ணா’ என்ற குரல் கேட்டது. என்னைத்தான் என்று அனிச்சையாய்த் திரும்பினேன். சாலையோரக் கல் ஒன்றிலிருந்து எழுந்து கைலியை இறக்கிவிட்டுக்கொண்டு வந்த உருவம் சுதாகரனுடையது. ‘பீடி?’ என்று கேட்டபடி கைநீட்டி பின் உள்ளிழுத்துக் கொண்டவன், நான் கைநீட்டியதும் ஒன்றை எடுத்துத் தந்து கூடவே நடந்தான்.

அவன் வீட்டுக்குக் கூப்பிட்டான். ஆடையூரை அடுத்திருந்த இலங்கை அகதிகள் முகாமின் கீழ்மூலைக் குடிசை ஒன்றில் குடியிருந்தான். சுதாகரன் அற்புதமான தையல்காரன். சொந்த ஊர் நெடுங்கேணி என்றதாய் நினைவு. பல ஆண்டுகள் முன்பு அம்மையோடு வந்ததாய்ச் சொல்லியிருந்தான். எனக்கு அவனைத் தெரிவதற்கு முன்பே அவன் அம்மை இறந்துவிட்டிருந்தாள்.  அப்போது தனியாகத்தான் இருந்தான்.

அன்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கைனடிக் சபாரியில் வந்து அவ்வப்போது புதுத்துணி தைக்கக் கொடுத்து வாங்கிச் செல்வேன். உடுப்பதிலும் உரைப்பதிலும் அலாதி விருப்பமிருந்த காலமது. அதுவெல்லாம் வெறும் சுவாரசியம்தான் என்று தெரிந்திருக்கவில்லை. என்னை உட்காரவைத்து படித்ததையும் சிரித்ததையும் பேசப் பேசக் கேட்டுக் கொண்டிருப்பான். நடுவிலே எழுந்துபோய் தேநீர் போட்டுக் கொண்டுவருவான். தேத்தண்ணி என்பான். தொண்டைக்குழிக்குள் பாகு இறங்குகிறமாதிரி இனிப்பு போடுவான். முகம் சூம்பி ஒரு நாளும் அவனைப் பார்த்ததில்லை.

கிளம்புகையில் என் கூடவே திருவண்ணாமலை நகரத்திற்குள் வருவான். சாமான்கள் வாங்க ஒரு காப்பி நிறத் துணிப்பையை மாட்டிக்கொண்டு ‘நான்தான் ஓட்டுவன் அண்ணா’ என்று சொல்லி வாங்கிக் கிளப்புவான். ‘அண்ணா’வின் கடைசி எழுத்தை பானு மாதிரி நெடித்து உச்சரிக்கமாட்டான். ஆகாரத்துக்கும் ஐகாரத்திற்கும் இடைப்பட்ட ஒரு அழகான ஒலி வரும். சின்னக்கடைத் தெரு மூலையில் இறங்கிக்கொள்வான். ஒரே ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான். புத்தகங்கள் சிலதை எடுத்துக் கொடுத்தும் படிக்கிற வழக்கம் இல்லையென்று சொல்லி வாங்கிக் கொள்ளவில்லை.

அன்றைக்குச் சுதாகரனுடைய வீட்டுக்குள் நுழைந்து பாயில் உட்கார்ந்தேன். அவனை நலம் விசாரித்ததற்கு அப்பால் எனக்குப் பேச்சு ஏதும் வரவில்லை. கொஞ்ச நேரம் முகம் பார்த்திருந்தவன் எழுந்தான்.

‘அண்ணா! இத்தனை தூரம் நடந்து வந்திருக்கிறியள். சட்டையைக் கழட்டி வையுங்கோ’ என்றான். அப்படியொன்றும் வியர்த்திருக்கவில்லை. ஆனாலும் கழற்றி கதவுவிளிம்பில் மாட்டிவிட்டு உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்தில் முகத்தில் எந்த பாவனையும் காட்டாது அருகே வந்து இரண்டு பன்களைத் தட்டில்வைத்து தேநீரை நீட்டிச் ‘சாப்பிடுங்கோ’ என்றான். சிரித்தேன். சிரித்தான். சாப்பிட்டேன்.

மனிதரைச் சுமந்தும் வீடு தொலைத்த இழப்பும் துயரமும் தனிமையில் குமையக் குமைய, மாலை தொடங்கி இரவின் உச்சி வரைக்கும் இதே பாதையில் நடந்து, சோர்கிற இடத்தில் உறங்கிவிடுகிற என் அப்போதைய நாட்களை அவன் பார்த்திருப்பான். கண்திறந்திருந்தாரும் காட்சியில்லை. சில சமயம் கண்படுகையில் அவன் புன்னகைக்க நானும் பதிலிட்டு நகர்ந்திருப்பேன். ‘என்ன ஆயிற்று அண்ணா?’ என்று ஒரு நாளும் கேட்டதில்லை.

சிரிக்கத் தொடங்கினால் உலகை நினைக்கவேமாட்டாமல் சிரிப்பதைப் பார்த்தவன், வாய்மூடினால் உலகை மறக்கமாட்டாமல்தான் வாய்மூடியிருப்பான் என்று ஊகித்திருக்கக் கூடும். அன்றும் கேட்கவில்லை. சாப்பிட்டபிறகும் பேச வார்த்தைகளற்று ஆஸ்பெஸ்டாஸில் ஒட்டிக்கொண்டிருந்த என் மௌனம் என்னை உட்கார விடவில்லை. சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டேன்.

‘கிளம்பறேன் தம்பி’

‘இங்கயே உறங்கலாமே அண்ணா’

‘இன்னும் நடக்கணும் தம்பி’

வாசலிறங்கி கொஞ்சதூரம் நடந்தவனுக்கு ஏதோ தோன்ற இடது தோள்பட்டையைத் தொட்டுப்பார்த்தேன். பின்னால் விட்டிருந்த தையல் தைக்கப்பட்டிருந்தது. அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.
(நவம்பர் 2016)

No comments: