January 11, 2010

ஃபெர்ன் ஹில் : ஒளிந்திருக்கும் வீடு

அந்த நிலையம் வெறிச்சோடிக் கிடந்த்து
அல்லது பயணிகள் காத்திருக்கிறார்கள்
உள்ளுக்குள் ஒடுங்கித் தேநீரில்
புதைகின்றன பாதையோர மஃப்ளர்கள்
சாலைப் பனிவெளியில்
தலை கவிழ்ந்த புன்னகை முணுமுணுக்கிறது
நிகழ்காலத்தில் கசிந்துருகிய
நினைவுகளின் கதகதப்பு
முதன்முதலாய்க் கடல்பார்த்து
அலைகளின் விளிம்பில் கால்நனைக்க
ஓடுகிற குழந்தையென
நான்

திசைகலைத்து சிறகடிக்கிறது
மௌனமாய்த் தவழ்ந்தோடிய
இரயிலின் வெண்புகை
ஃபெர்ன் ஹில்*லின் வண்ணம் சுருங்காத
நீலமலர்கள் ஒரு திசையில்
மொட்டவிழ்க்கின்றன
முதுகில் பாடல்கல் நிரம்பி வழியும்
கனவுகளோடு சரிந்து மறைகிறார்கள்
சில தேவதைகள்

பைக்காரா**வின் வசீகரத்தில்
தொலைந்து விடுவேனோவென முன்பு நீ
இழுத்துக் கோர்த்த விரல்கள்
ஆர்ப்பரிக்கின்றன
காலம் பருகிய பால்யம்
குழைத்து மெருகூட்டிய நீ
ஒளிந்திருக்கும் வீடு
அந்தத் திசையில் தானிருக்கும்.


( * உதகையில் ஒரு பகுதி ; ** உதகையை அடுத்த ஒரு சுற்றுலாத் தலம் )

No comments: