March 16, 2016

சாதி வன்கொலையும் சமூக ஒப்புகையும்


சுவரில் ஒட்டப்பட்ட படத்தில் தலை குனிந்தவாறே கைராட்டையில் நூற்றுக் கொண்டிருக்கிறார் காந்தி. சுதந்திரம் கிடைத்த கையோடு அவரைக் கொன்றாகிவிட்டது. சுவரில் அகழ்ந்த அலமாரியில் சாய்ந்திருக்கும் நூல்களில் உறைந்து நிற்கிறார் அம்பேத்கர். பல நூறாண்டு காலத்துக்கான உழைப்பை ஒரு பத்தாண்டுக்குள் செய்து முடித்த பெரும் களைப்பால் மத்திம வயதிலேயே காலமாகியும்விட்டார். காலண்டரின் கிழிக்கப்படாத இரு நாள் தாள்களைப் பறக்கவைத்துக் காட்டுகிறது காற்றாடி.

***

பட்டப்பகலில், மக்கள் நெருக்கம் மிக்க ஒரு சாலையில், சாலையைக் கடக்கக் காத்திருக்கும் இரு பிள்ளைகளை, துள்ளத் துடிக்கப் பலவெட்டுகள் வெட்டிவிட்டு, எந்தத் தடையுமின்றி நிதானமாகத் தங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லும் மனிதர்களைக் காட்டும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்ததும், பேசமுடியாத பதற்றம் ஏன் என்னைத் தொற்றிக் கொண்டது? பதைபதைத்து ஓடி அருகில் சென்ற ஒருவரைத் தவிர, சுற்றி நின்றோர் எல்லாரும், ஏதோ திரைப்படங்களில் பார்த்துப் பழகிய காட்சி நேரில் நடப்பதைப் பார்ப்பது போலச் நிதானமாகப் பார்க்க என்ன காரணம்? அந்தக் கணத்தில் சாலையைக் கடந்து கொண்டிருந்த வாகனங்களில் இருந்த வாகன ஓட்டிகள் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி, அக்காட்சியைப் பார்த்துவிட்டு, பிறகு அப்படியே கடந்து செல்வது ஏன்?

இப்படி ஒன்று நடந்ததே தெரியாது என்று சொன்ன சிலரிடம், நேற்று இந்தப் கொடூரத்தைப் பகிர்ந்து கொண்டபோது, ஐவரில் ஒருவர்தான் பதறுகிறார். பெரும் குற்றம் என்கிறார். ஒருவர் இப்படி நடக்குறது சகஜம்தான் சார் என்கிறார். மூவரிடம் எந்தச் சலனமோ வெளிப்பாடோ இல்லை. சமூகம் பெரிது. பெரிஞ்சமூகம் இப்படித்தான் இருக்கிறது. பதறுகிறவர்கள்தான் தனிமைப்படுகிறார்கள். அதனால்தான் அந்தக் கொலையாளிகள் எந்தத் தடையுமின்றி நிதானமாகத் தங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்கள்.

அரிவாள் தூக்கும் வன்முறையை நாயகத் தன்மையோடு காட்சிப்படுத்துவதில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படங்கள் செலுத்தும் தாக்கத்தின் பங்கை, அவை ஒரு பார்வையாளராக ஒவ்வொருவரையும் செயலற்றுப் பார்க்கப்பழக்கிய விதத்தைக் குறைத்து மதிப்பிடமுடியாது. அரசியல் கட்சிகள் பலவும் ஏறக்குறைய இதே பண்பு கொண்டவையாகவே வெகுமக்கள் மனதில்  ஆழப்பதிந்திருக்கின்றன. தற்காத்துக் கொள்வதாக நம்புவதில் முன்னிற்கும் அஞ்சும் தற்பண்பு (பயந்த சுபாவம்) எதிர்மறையாக உருவாக்கப்படுகிறது. அரசியல் பண்பு என்பதும் தகர்ந்து கொண்டு இருக்கிறது. மாற்றுத்தரப்பில், உடனடியாக எதிர்வினை செய்கின்றனர் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் இயங்குவோர் மத்தியிலும் அரசியல் பண்பு மிகுந்திருப்பதாக நம்பமுடியவில்லை. எத்தனை பெரிய சிக்கலாக இருந்தாலும், காட்சி மற்றும் செய்தி ஊடகங்களைப் போல, நான்கு நாட்கள் அல்லது அதிகம் சென்றால் ஒரு வாரத்திற்கு மேல் அச்சிக்கல் பற்றிய சிந்தனைகள் காலாவதியாகி விடுகின்றன.

யார் இன்னார் என்று தெரியாத ஒரு நகரத்தில் பலர் முன்னிலையில் நடைபெற்ற ஒரு கொடூரத்தைச் சலனமின்றி பலரும் பார்க்கிறார்கள் என்பதை மட்டும் கணக்கில் கொண்டே கூட, வெகுமக்கள் மனநிலையை இப்படியே புரிந்து கொள்ளமுடிகிறது.

***

கொல்லப்பட்டவர் யார்? கொன்றவர் யார்? காரணம் என்ன? என்பது தெரிய வரத் தொடங்கியதும் மக்களின் மௌனம் அடியாழத்துக்குச் சென்றுவிடுகிறது. வெகுமக்கள் செல்வாக்கு பெற்ற பெரிய கட்சிகளும் அதே மனநிலையைக் கடைபிடிக்கின்றன. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் மட்டுமல்ல. சற்று பின்னோக்கி கவனித்தால் பெரும்பாலும் அவை இப்படித்தான் இருக்கின்றன. சாதி ஆணவக் கொலைகளை மறுக்கவோ அல்லது யாருக்கும் வலிக்காத அளவுக்கு கிளிசரின் கண்ணீர் வடிக்கவோ அல்லது பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நிதி நிவாரணம் அளித்து அமைதியுறச் செய்யவோ மட்டும் செய்கின்றன. ஜனநாயகத்தில் மதப்பெரும்பான்மை வாதம் வலுப்பெறுவதை எதிர்க்கும் பலரும் சாதிப்பெரும்பான்மை வாதம் வலுப்பெறுவதைக் கண்டும் காணாமல் நகர்கிறார்கள். எண்ணிக்கைப் பெரும்பான்மை என்பது மட்டுமே அதிகாரத் தரப்புகளுக்கு முக்கியமான தேவையாகி விடுகிறது.

கடந்த இருபதாண்டுகளில் சாதி ரீதியான திரட்சி வெகு வேகமாகவும் விமரிசையாகவும் நடந்து வருகிறது. எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதிகளைப் பார்த்து, அரசியல் கட்சிகள் அவற்றுக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பார்த்து, சொற்ப எண்ணிக்கையுள்ள சாதிகள் கூட அமைப்புகளாகத் திரண்டு வருகின்றன.

வடக்கே தலித் சாதித் தம்பியும் வன்னியர் சாதிப் பெண்ணும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதை எதிர்த்து ஊர் கொளுத்தப்படுகிறது. பதைபதைத்துச் சில வாரங்கள் அது பற்றி விவாதிக்கப்படுகிறது. கவனப்பாடுகள் அடங்கிய சில மாதங்களில் இளவரசன் உயிரற்ற உடல் இரயில் தடத்தில் கண்டுபிடிக்கப்படுகிறது. அடுத்து அந்தப் பகுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சக்தி எது?

தலித் சாதித் தம்பியும் கவுண்டர் சாதிப் பெண்ணும் கோயிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அந்தத் தம்பியைக் கவுண்டர் சாதி அமைப்பு ஒன்று அடித்து இழுத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. மறுநாள் தலையற்ற கோகுல்ராஜின் உடல் இரயில் தடத்தில் கண்டுபிடிக்கப்படுகிறது. தேடப்பட்டுவந்த சாதி அமைப்பின் தலைவர் எப்பேர்ப்பட்ட அளவில் தலை தூக்கிக் கொண்டாடப்பட்டவாறு சரணடைகிறார்?

சாதி என்ற வகையிலும் பாலினம் என்ற வகையிலும் ஒவ்வொருவரும் அமைப்புக்குள்ளேயே அவரவர் இடத்தில் பொதிந்திருப்பதால் அமைப்பு வன்முறை கண்ணுக்குத் தெரிவதில்லை. திவ்யாவோ சுகன்யாவோ கௌசல்யாவோ, சாதியைக் காப்பாற்ற கடமைப்பட்டவர் என்ற வகையில் பெண்ணின் தரப்பும் தேர்வும் பொருட்படுத்தப்படுவதுமில்லை. இது தனியே ஆராயத் தக்கது. வெளித்தெரியாத அமைப்பு வன்முறை ஊர் ஊருக்கு வெவ்வேறு வகையில் கலாச்சார வன்முறையாக வெளிப்படும்போது ஓரளவு கண்ணுக்குத் தெரிகிறது. சட்டம் இவை எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை எனினும், அரசோ நீதித்துறையோ அரசியல் கட்சிகளோ பிரச்சார இயக்கங்களோ இதைக் களையச் செய்யவேண்டியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காத போக்கினால் நேரடி வன்முறை நடந்தேறுகிறது.

தருமபுரி > திருச்செங்கோடு > உடுமலை என்ற காலவரிசைப்படியான இந்த வன்முறை வெளிப்பாடுகளின் வடிவ மாற்றத்தில், அந்தந்தப் பகுதி பெரும்பான்மைச் சாதிகளின் குணங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பண்புகளுக்கும் பெரும்பங்குள்ளது. இக்கட்டமைவை அந்தந்த சாதி அமைப்புகளின் தலைவர்களும் வரலாற்றுப் புனைவாளர்களும் அதிகார நோக்கத்திற்காக நேரடியாகவும், திரைப்படக் கர்த்தாக்கள் வணிக நோக்கத்திற்காக மறைமுகமாகவும் செய்து வருகின்றனர்.

வடக்கிலும் மேற்கிலும் மறைவாகச் செய்யப்பட்ட வன்முறை தெற்கே நகர மத்தியில் பலர் பார்க்க நடந்தேறுகிறது. தலித் சாதித் தம்பியும் தேவர் சாதிப் பெண்ணும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர். அது முதலான அச்சுறுத்தலை, பிறகு பெண் வீட்டாரால் கடத்தப்பட்ட பெண் காவல் துறையின் துணையோடு மீட்கப்படுகிறார். தம்பதியர் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். பல்பொருள் அங்காடிக்குச் சென்று திரும்பி சாலை கடக்கையில் இருவரும் சரமாரியாக வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள். பலர் பார்க்கச் செய்யப்பட்ட இந்தக் கொடூர வன்முறையின் இலக்கு என்பது, எங்கள் சாதிப் பெண் சாதி மறுப்புத் திருமணம் செய்தால், பலர் பார்க்க நேரடியான வன்முறையிலேயே இறங்குவோம் என்ற அச்சுறுத்தலை அனைவரிடமும் விதைக்கச் செய்தே. அதைப் பதற்றமின்றிச் செய்திருக்கிறார்கள்.

என்ன செய்யப் போகிறோம் நாம் என்றோ, இது ஒரு ஜனநாயகச் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்றோ வழக்கமான சொற்களோடு இக்கட்டுரையை முடிக்க விரும்பவில்லை.

- யுவபாரதி

1 comment:

Raj Kumar said...

எதுக்கு அடுத்தத் ஜாதிய தேடுறீங்க , உங்க ஜதிலேயே பொண்ணு பாருங்க , சண்டை, கொலை நடக்காது... உங்க ஜாதியே உங்களுக்கு பிடிக்கால . அப்புறம் எப்படி மதத் ஜாதிகாரங்க்களுக்கு பிடிக்கும் ?