January 26, 2016

ஒரு குதிரையும் மூன்று தழும்புகளும்



எங்கள் குடும்பம் செங்கத்தில் குடியிருந்தது குறித்த நினைவு ரொம்பவும் பின்னால்தான் எனக்கு வந்தது. அதுவும் நான் வேலையில் சேர்ந்து செங்கத்தை அடுத்த ஒரு கிராமத்திற்கு மாற்றலாகி வந்தபின்தான் என்றே சொல்லவேண்டும். பதினைந்து வருடங்களுக்கு முன்பு. ஒருநாள் அலுவலக வேலை முடிந்து, மாலையில் ஜீ.முருகனின் ஜெராக்ஸ் கடையில் காத்திருந்தேன். செங்கம் கருவூல வளாகத்திற்கு எதிரே இராஜவீதியைப் பார்த்தவாறிருந்தது அவரது கடை. அப்போதுதான் நினைவு வந்தது.

முன்பு அந்தத் தெருவில் ஒரு துணிக்கடைக்காரருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் குடியிருந்தோம். அப்போது எனக்கு மூன்று வயதுதான் இருக்கும். அந்த வீட்டுக்காரம்மா என் அம்மாவைத் தங்கம் தங்கம் என்றுதான் அழைப்பாள். தங்கத்தின் பேர்கொண்ட என் அம்மாவுக்கு அந்தப் பேரின் மீது எப்போதும் ஒரு அதிருப்தி உண்டு. ‘எந்த நேரத்தில் எனக்கிந்தப் பேரை யார் வெச்சா? தங்கம் தங்கறதே இல்லை’ என்று அடிக்கடி புலம்புவாள். அதென்னவோ நிஜம். அம்மாவின் சிறு சிறு நகை கூட பெரும்பாலும் மிட்டாலால் கடையில் அடகுக்கு மிதக்கும். மெல்ல மெல்ல மூழ்கியும் விடும்.

அந்த வீட்டுக்காரம்மாவின் மகன் சீனு. என் வயது. புஷ்டியாக இருப்பான். தலையிலும் கொள்ளை முடியிருக்கும். நான் அப்போதும் ஒல்லிதான். கொஞ்சம் நன்றாக முடி வளர வளர, மாரியம்மனோ அவளது சின்ன மகனோ நேர்த்தி என்ற பேரில் வாங்கிக் கொண்டுவிடுவார்கள். பிறந்த மூன்றாம் நாளே போய்விட்ட எனக்கு மூத்தவன் போலன்றி, இவ்வுலகில் இன்னும் நான் தங்கியிருப்பதே அவர்களால்தான் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு இன்றும் உண்டு.

நாங்கள் குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்தில் சொஜ்ஜி மாமா என்று ஒருவர் இருந்தார். எங்கள் வீட்டையும் அவர் வீட்டையும் அடுத்திருந்த நர்சம்மா வீட்டையும் வீடுகள் என்று தனித்தனியாய்ச் சொல்லிக் கொண்டாலும் எல்லாம் ஒண்டிக் குடித்தனங்கள்தான். சொஜ்ஜி மாமா என்பது அவர் பேராயிருக்காது. எனக்கும் சீனுவுக்கும்தான் அது அவர் பேர். அரிசியும் பருப்பும் சேர்த்த சொஜ்ஜி என்ற ஒரு வகை உணவை அவர் நன்கு செய்து கொடுப்பார். ஏதோவொரு அலுவலகத்தில் வேலை பார்த்தார். குடும்பம் ஏதோ வெளியூரில் இருந்தது. எங்கள் இருவர் வீட்டுப் பெரியவர்களும் அவரை ராயரே என்று அழைப்பார்கள். அவரது மனைவியும் என் வயது மகளும் மாதமொருமுறை வருவார்கள். அல்லது இவர் போவார்.

அவரது வீட்டில் மரத்தாலான ஆடுகுதிரை ஒன்று இருந்தது. அவரது மகள் ஊருக்கு வராத நாட்களில்,  வீடு திறந்திருக்கும் நேரங்களில் நானும் சீனுவும் முறைவைத்து அந்த குதிரையில் சவாரி செய்வோம். ஒருவர் ஆட ஒருவர் ஏக்கத்தோடு பார்த்து நிற்போம். அப்படித்தான் ஒரு நாள் என் முறை வந்திருந்தது.

நான் குதிரையில் ஆடிக்கொண்டிருந்த போது என்னை எதற்கோ கூப்பிட்டாள் அம்மா. ‘இப்போ நீ உட்காரக்கூடாதுடா சீனு’ என்று சொல்லிவிட்டுதான் ஓடினேன். திரும்பி வரும்போது பார்த்தால், சீனு ஏறி ஆடிக்கொண்டிருந்தான். நான் வந்தபோதாவது இறங்கியிருக்கலாம். கொஞ்சியும் கெஞ்சியும் கூட இறங்கவில்லை. அவன் உடம்புக்கு என்னால் இழுத்து இறக்கவும் முடியவில்லை. என்ன நினைத்தேனோ. அவனது இடதுகாலை இழுத்து கட்டைவிரலை நறுக்கெனக் கடித்துவிட்டேன். இரத்தம் வந்திருக்கும் போல. அவன் இறங்கி அழுதுகொண்டே ஓடியதும், நான் குதிரையேறிவிட்டேன். அழுகுரல் கேட்டு ராயர் வந்து கேட்டும் ஒன்றும் சொல்லவில்லை.

சிறிது நேரத்தில் சீனுவோடு அவன் அம்மாவும் என் அம்மாவும் வந்தார்கள். மொத்து மொத்தென்று என் முதுகில் மொத்தியபடியே, குதிரையிலிருந்து இறக்கி, தரதரவென்று வீட்டுக்கு இழுத்துக்கொண்டு ஓடினாள் என் அம்மா. ‘விடு தங்கம், விடு தங்கம்’ என்று சீனு அம்மா பின்னாலேயே வருவதைத் தடுத்து கதவை அடைத்துவிட்டாள். கரியடுப்பில் என்னமோ வெந்து கொண்டிருந்தது. ஒரு கரண்டியையை எடுத்து தணலில் காயவைத்தவள், எனது வலதுகால் முட்டிக்குக் கீழே சரக்கென ஒரு இழு இழுத்துவிட்டுதான் கோபம் தீர்ந்தாள். கொஞ்சம் நேரம் கழித்து கதவைத் திறந்தாள்.

வீட்டுக்குள் நுழைந்த சீனு அம்மா, ‘இப்படிப் பண்ணிட்டியே தங்கம்!’ என்று என் அம்மாவைத் திட்டியபடியே அலறிக் கொண்டிருந்த என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாள். பின்னாலேயே சீனுவைத் தூக்கிக்கொண்டு என் அம்மா ஓடிவந்தாள். சீனுவின் காயம் சீக்கிரமே ஆறிவிட்டது. என் காயம் ரொம்ப நாள் ஆறவில்லை. என் பல்லைவிட சூட்டுக்கரண்டிக்கு வலு அதிகம்தானே. அந்தச் சூட்டுக்காயம் பட்ட இடத்திலேயே பெரியவனான பிறகும் பலமுறை அடிபட்டிருக்கிறது.

சில நாட்களில் இருவரின் தழும்புகளையும் மாறி மாறித் தொட்டுப்பார்த்து நானும் சீனுவும் ராசியாகிவிட்டோம். ஆனால், வம்பு வந்த அன்றோடு ஆடுகுதிரையை பரணில் ஏற்றிய ராயரோ, அவரது மகள் வரும்போது கூட இறக்கியதாய் நினைவில்லை.

No comments: