January 18, 2016

தாரை தப்பட்டை எனும் நசிவு

சுந்தரரின் ஆவடுதுறைத் தேவாரத்திலிருந்து நான்கு வரிகளோடு தொடங்கி, என் உள்ளம் கோவில் என்று பல்லவி பிடிக்கும் ராஜாவின் பாடல் அற்புதம். ஒரு காட்சியில் பின்னணியாக ஒலிக்கும் பாருருவாய எனத் தொடங்கும் திருவாசகத்தின் எண்ணப்பதிகப் பாடல் ஆசுவாசம் தருகிறது.

தஞ்சைப் பெரிய கோயிலை ஒட்டியுள்ள பகுதியில் வாழும் ஒரு கரகாட்டக் குழுவின் நசிந்துபோகும் வாழ்வைக் காட்டுவதாய் எண்ணி துண்டு துண்டாய்க் குலைத்துப் போட்டிருக்கிறார் பாலா. கால ஓட்டத்தில் நசியும் வாழ்வைக் காட்சிப்படுத்த எழும் கண்ணிகளை எல்லாம் எடுத்து எறிந்துவிடுகிறார். அக்குழுவின் இயல்பான வாழ்க்கை முறையைக் கூட இல்லாததோடெல்லாம் கூட்டி மிகைப்படுத்தி ஒட்டாமல் செய்துவிடுகிறார். பாலாவைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டியிருக்கிறது. நடிகர் நடிகைகளை நன்கு வேலை வாங்கியிருக்கிறார். பாலாவை நம்பி அவர்களும் செய்திருக்கிறார்கள். பாவம்.

குரூரத்தையும் வன்முறையையும் கொண்டாட்டத்தோடே செய்கிறார் பாலா. நம்மால்தான் பார்க்கமுடியவில்லை. இறுதிக் காட்சியில் தெறிக்கும் சித்திரவதையைப் பார்க்கவொண்ணாமல் இருக்கையை விட்டே எழுந்துவிட்டேன். படம் முடிந்து திரும்புகையில் நண்பர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் புலம்பிக்கொண்டே வரும்படி ஆகிவிட்டது. வழியில் ஒரு கடையில் நின்று காப்பி அருந்துகையில் கூட குவளையில் இருப்பது இரத்தமோ என்று ஒரு கணம் தோன்றியது.

பார்வையாளனிடம் இந்த எரிச்சலையும் பதற்றத்தையும் விளைவிப்பதுதான் தன் திறமையின் வலு, தாரை தப்பட்டையின் வெற்றி என்று காட்டிக்கொள்ள விரும்புகிறாரோ பாலா!

அவன் ஒரு காரியக்கிறுக்கன் என்று நண்பர் சொன்னது சரிதான்.

2 comments:

காரிகன் said...

--பார்வையாளனிடம் இந்த எரிச்சலையும் பதற்றத்தையும் விளைவிப்பதுதான் தன் திறமையின் வலு, தாரை தப்பட்டையின் வெற்றி என்று காட்டிக்கொள்ள விரும்புகிறாரோ பாலா!---


தான் போலவே தன் படத்தைப் பார்ப்பவர்களும் மாறவேண்டும் என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம்.

Kasthuri Rengan said...

கோப்பையில் இரத்தமோ என்று நினைக்கும் மனப் பக்குவம் கொண்ட நீங்கள் எதற்காக பாலா படத்திற்கு போனீங்க..

@காரிகன் ஜி.

இங்கேயும் ..
ஆகா ரெண்டுபேரும் சுத்தி சுத்தி வரோம்

நீங்கள் சொல்லியிருப்பதில் ஒன்றில் உடன்பட வேண்டியிருக்கிறது .. பேராண்மை வந்த பொழுது ஒரு ஈவ் டீசிங் தகராறில் கழுத்தில் பலமுறை பல கத்திகளால் குத்தப் பட்ட ஒரு கொலைச் சம்பவம் செய்தியில் வந்தது.

இப்படி சிலர் திரையைப் பார்த்து நிஜத்திலும் செய்ய விளைகிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் ஒன்று காதலிக்காக கொலை செய்யும் சன்னசிகள் வருவதை விட கருப்பையாக்கள் வரலாம் ..