January 16, 2016

பாண்டியன் அழைத்தா வந்தான், கம்பணன்?

ஜூனியர் விகடன் இதழில்பெரியோர்களேதாய்மார்களே!” என்ற தலைப்பிலான தொடரை எழுதிவருகிறார் .திருமாவேலன். 20.01.2015 நாளிட்டு மதுரைப் பகுதியில் இன்று கிடைக்கப்பெற்ற இதழில், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவைப் பற்றி எழுதியிருக்கிறார். குமாரசாமி ராஜாவின் தேசப்பற்று, தைரியம், நேர்மையான ஆட்சி பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். இவற்றில் மாற்றுக் கருத்து இல்லை. ஆந்திரத்திலிருந்து குடிபெயர்ந்த ராஜூ சமுதாயத்தின் ஒரு குடிப்பிரிவான பூசப்பாடி வழியினர் பூசப்பாடி சஞ்சீவி குமாரசாமி ராஜா என்கிற பி.எஸ்.குமாரசாமி ராஜா. இதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் அவரது பூர்வ வரலாறாகச் சொல்லுகிற, விஜயநகர சாம்ராஜ்ஜியம் பற்றிக் குறிப்பிடும் இடத்தில்தான் மாற்றுக் கருத்து இருக்கிறது. தன் கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார் திருமாவேலன் :

“14-ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த சுந்தரபாண்டியன், தனக்கு பக்கபலமாக இருக்க விஜயநகர சாம்ராஜ்யத்தில் இருந்து படைகளை வர வைத்தார். ஆந்திராவில் இருந்து தளபதி கம்பண்ண உடையார் தலைமையில் படை வந்தது. இந்தப் படைகளை 14 பிரிவுகளாகப் பிரித்து, ஒரு பிரிவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தங்க வைத்தான் சுந்தரபாண்டியன்....”

14-ஆம் நூற்றாண்டில் பாண்டிய இளவரசர்களுக்குள் அரசுரிமைப் போர்கள் நடந்தன என்பதைப் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், 14-ஆம் நூற்றாண்டே எனினும், இந்த அரசுரிமைப் போர்கள் நடந்த காலத்தில் விஜயநகர சாம்ராஜ்ஜியமே தோன்றியிருக்கவில்லை.

சோழப் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்து (மதுரையை மீட்ட) சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குப் பின், பாண்டிய அரியணை ஏறியவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268-1311). இவனே சிங்கள மன்னன் புவனேகபாகுவை முறியடித்தவனும், ஆரியச் சக்கரவர்த்தி என்ற பாண்டியர் படைத் தலைவனை யாழ்ப்பாணத்திலிருந்து வடஇலங்கையை ஆளச் செய்தவனும் ஆவான். இவனது மகன்களே மேற்படி கட்டுரையில் திருமாவேலன் குறிப்பிடும் வீரபாண்டியனும் சுந்தரபாண்டியனும். குலசேகரனுக்குப் பிறகு இவர்களது வாரிசுரிமைப் போர் நடந்தது 1311- அடுத்த பன்னிரு ஆண்டுகளில். வெற்றி-தோல்வி மாறிமாறி வந்தது. இவர்களுக்கிடையிலான பெரும்போர் என்கிற வீரதவளப்பட்டினப் போர் நடந்தது 1318-ல். இப்போரில் வீரபாண்டியனுக்கு உதவியவன் திருவாங்கூர் அரசன் இரவிவர்மன் குலசேகரன். இருவரையும் சுந்தர பாண்டியன் முறியடித்தான்.

தில்லியில் கில்ஜி மரபிலிருந்து துக்ளக் மரபிற்கு ஆட்சி கைமாறும் காலத்தில் தென்னாட்டின் மீது படையெடுப்பதன் தன்மை மாறியது. முந்தைய 1310-இல் கில்ஜி படைத்தலைவன் மாலிக்காபூர் இராமேசுவரம் வரை வந்து கொள்ளையடித்துச் சென்றானே ஒழிய, ஆட்சி நிறுவ முயலவில்லை. துக்ளக் மரபினர் ஆட்சிக்கு வந்ததும், 1326-இல் துக்ளக் படைத்தலைவனிடம் மதுரை வீழ்ந்தது. முகமது பின் துக்ளக்கின் தென்மாகாணங்கள் ஐந்தில் மதுரையும் (மாபார் என்ற பேரில்) ஒன்றாகி, ஒரு சுல்தானின் கீழ் வருகிறது. 1336 முதல் 1377 வரை மதுரையில் நடைபெற்றது மாபார் சுல்தான்கள் ஆட்சி.

துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம மரபினரான ஹரிஹரன்-புக்கன் உள்ளிட்ட சகோதரர்கள் ஐவரால் விஜயநகர அரசு உருவாக்கம் பெறுவதே 1336-ல்தான். இந்த புக்கனின் மகன்தான் குமார கம்பணன். விஜயநகர ராஜ்ஜியம் நிலைநின்றபின், சாம்ராஜ்ஜியமாக அது விரிவடையவே தமிழகத்தின் மீது படையெடுத்தான் குமார கம்பணன். தமிழகத்தின் வட எல்லையில் விரிஞ்சிபுரத்தில் இராஜநாராயணச் சம்புவராயனை வெற்றிகொண்டு காஞ்சிபுரத்தில் தங்குகிறான். அவனது மனைவி கங்காதேவி எழுதியமதுரா விஜயம்என்னும் வடமொழி நூலில், கம்பணன் அங்கு துயில்கையில் அவனது கனவில் மதுரையின் தேவிஅகத்தியர் பாண்டியருக்கு அளித்த வீரவாளை அவர்கள் கைநழுவ விட்டுவிட்டனர்; அவர்களது கடமையும் பொறுப்பும் இனி நீ நடத்திடுக!’ என்று சொன்னதாகவும், அதனால் குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்து வென்றான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குமார கம்பணன் மதுரையை வென்றது 1371-ல்.

அப்போது வீரபாண்டியன்-சுந்தரபாண்டியன் கையில் மதுரையே இல்லை. மேலும், அவர்களது அரசுரிமைப் போருக்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து குமார கம்பணன் மதுரையை வென்றதும் பாண்டியர்களுக்காக இல்லை. அவனது விஜயநகர சாம்ராஜ்ஜியத்திற்காக.

அவனது வெற்றிக்குப்பின் விஜயநகர மண்டலேசுவரர்கள் ஆட்சி, தொடர்ந்து ஆந்திரத்திலிருந்து குடிபெயர்ந்து வந்து அரசோச்சிய நாயக்கர்களது ஆட்சி என்று தமிழக வரலாறே மாறியிருக்கிறது. சாதக பாதகங்கள் தனியே ஆராயத் தக்கது. தஞ்சையிலும் மதுரையிலும் தெலுங்கு இலக்கியத்திற்கான பேரிலக்கிய காலம் தொடங்கிய நேரத்தில், அரசாட்சியுரிமை இழந்த தமிழில் பேரிலக்கியக் காலம் நிறைவுற்று சிற்றிலக்கியக் காலம் தொடங்கியது. ஆந்திரப் பண்பாட்டுத் தாக்கமும் அதன்வழி சமூக மாற்றமும் பெருமளவில் நிகழ்ந்திருக்கிறது. முந்தைய ஏறு தழுவுதல் என்பது இப்போது விவாதத்திற்குள்ளாகி இருக்கிறஜல்லிக்கட்டு என்று வடிவம் பெற்றதில் கூட நாயக்கர் ஆட்சியின் தாக்கம் இருக்கிறது.

காலப்பிசகிற்காக மட்டும் இத்தனை நெடியதாகப் பேசவில்லை. பாண்டியருக்கு உதவ படைகொண்டு வந்தான் கம்பணன் என்பதற்கும், விஜயநகர சாம்ராஜ்ஜியத்திற்காக படையெடுத்து வந்தான் கம்பணன் என்பதற்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது என்பதற்காகத்தான். 

No comments: