December 21, 2015

ஒரு ஒலிவாங்கியும் சில ஓலங்களும்

இருநாட்கள் முன்பு அலுவலகத்திற்கான காலைப் பேருந்து ஓட்டத்தின் போதுதான் முகநூலில் இளையராஜா குறித்து ஓடிக்கொண்டிருந்த சர்ச்சை தென்பட்டது. சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் கண்டனக் கடிதம் என்று ஒன்றும் கண்ணில்பட்டது. என்ன விசயமென்று அறிய தொடர்புடைய காணொளிப் பதிவையும் பார்க்கநேர்ந்தது. அக்காணொளியைப் பார்த்ததும் புரிந்தது, மாற்றுக் கருத்துகள் எனப் பதியப்பட்டவை பலவும், இளையராஜா மீது வீசவென்றே வாய்ப்புக்காக எப்போதும் காத்திருக்கும் பலரது அவதூறுகளே என்பது. சமூக அக்கறை-அரசியல் அக்கறை என்ற முகமூடிகளை அணிந்தபடி, இளையராஜாவிடம் மட்டுமே வினவும் ஆழ்மனம் கொண்ட பதிவுகளும் அவற்றில் சில. 

சென்னையை அடியோடு புரட்டிப் போட்ட சமீபத்திய மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதோடு, தன்னாலான நிவாரண உதவிகளையும் செய்து வருகிறார் இளையராஜா. அப்பணி சார்ந்த செய்தியாளர் சந்திப்பில், சிம்பு-அனிருத்தின் போக்கிலித் தனச் செய்கை பற்றி சம்பந்தமே இல்லாமல் கேட்கிறார் ஒரு நிருபர். யாராயிருந்தாலும் தான் செய்துகொண்டிருப்பது என்ன? இவன் கேட்பது என்ன? என்ற கோபம் வரத்தான் செய்யும். ‘உனக்கு அறிவிருக்கா?’ என்று கேட்கத்தான் தோன்றும்.  சூழலையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் எத்தனம் ஏதுமின்றி எள்ளலோடு அந்த நிருபர் தொடர்ந்து பேசுவாரெனில் இன்னும் கோபம் மிகத்தான் செய்யும். எனவே இளையராஜாவின் கோபமும் எதிர்வினையும் நியாயமானவையே.
ஒலிவாங்கியும் காணொளிப் பதிவியும் கையில் இருந்தால் நிருபருக்கு இடம் பொருள் தெரியாமல் போகலாமாம். நிவாரணப் பணிகள் பற்றிய கேள்விகளின் கவனத்தில் இளையராஜா இருக்கும்போதும் கூட இந்நிருபரின் இத்தகைய கேள்வியைப் பொறுமையாக எதிர்கொண்டிருக்கவேண்டுமாம். இப்படி இருந்தது பலரது ஆலோசனை. Bite, News Value, Reach என்பதே ஊடகங்களின் தாரக மந்திரங்களாய் மாறிவரும் சமகாலச் சூழல் குறித்த கவலை இவர்களுக்கு இல்லை. நீதிமன்றங்களிலும் நிவாரணப் பணிகளிலும் கூட பாகுபாடுகள் பட்டவர்த்தனமாய்த் தென்படும் வேளையில் ஊடகங்களின் கவனம் சிம்பு-அனிருத்தின் போக்கிலித் தனச் செய்கை மீது மட்டுமே ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் இந்த ஆலோசகர்களுக்கு எழுவதில்லை.

இளையராஜா குறித்து எழும் எந்த சர்ச்சையிலும் அவருக்கு ஆலோசனை என்ற பெயரில் மெதுவாய்த் தொடங்கி, அவர் இப்படித்தான் - அடுத்தவரை மதிக்கமாட்டார் என்று மிகைப்படுத்தி, இறைப்பற்றாளர், சனாதனி, என்பதாய்க் ‘கட்டுடைத்து’, அவர் பிறந்த சாதியின் எந்தப் பிரச்சனையிலும் அக்கறையற்றவர் - பிற்போக்காளர் என்பதாய் வசைபாடி, தனிநபராய் அவரை நிராகரிப்பதில் போய் முடிப்பவர்கள் பலருண்டு. அவரது இசையை ஏற்கலாம், அவரை ஏற்கமுடியாது என்பதான முடிவு அது.

உண்மையில் அவ்வப்போதைய ஒவ்வொரு விசயத்திலிருந்தெல்லாம் இவர்கள் இப்படிப் படிப்படியாக முடிவுக்கு வருவதில்லை. அவரது இசையை ஏற்கலாம், அவரை ஏற்கமுடியாது என்பதான இந்த முடிவிலிருந்தே தொடங்கி தலைகீழாய் வருகிறார்கள்., அவர் பிறந்த சாதியின் மீது அக்கறையோடு இருக்கவேண்டும், பிற்போக்குத்தனமாய் இருப்பதை உணரவேண்டும், முற்போக்காய் முழங்க வேண்டும், அடுத்தவரை மதிக்கவேண்டும் என்று ஆலோசனைக்கு வருவார்கள். இளையராஜா என்ற ஆளுமையை நாங்கள் ஏற்கவேண்டும் என்றால், அவர் இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவர்களுடையது.

இவர்கள் சொல்கிற குணாம்சத்தோடே இளையராஜா இருப்பதாய் ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொண்டாலும், இந்த எதிர்பார்ப்பு, இளையராஜாவிடம் மட்டும்தான் கேட்கப்படும்; ஆலோசனை இளையராஜாவுக்கு மட்டும்தான் சொல்லப்படும். திரைத்துறையில் மிகவும் கோபக்காரர்கள் என்றும், கோபம் வந்தால் சட்டெனக் கைநீட்டி அடித்துவிடக் கூடியவர்கள் என்றும் எல்லோராலும் அறியப்படும் பாரதிராஜாவிடமோ, விஜயகாந்திடமோ இவர்களுக்கு இந்த எதிர்பார்ப்பும் இருக்காது; ஆலோசனையும் கிடையாது. அவர்களை இயல்பாக ஏற்றுக் கொண்டுவிட முடிகிறது. இதைத்தான் பொதுப்புத்தி என்பது.

தனித்திறனோடு தன்னுழைப்பால் எத்தனை உயரத்தில் இருந்தாலும் இச்சமூகத்தில் ஒருவரைச் சாதி பார்த்தே மதிப்பிடுவதும் எதிர்பார்ப்பதும் ஆலோசனை வழங்குவதுமான குணம் என்பது வீடு-பள்ளி-தெரு-நட்பு-பணியிடம் என்று இங்கு உருவாக்கப்படுகிறது; இயல்பாக உரையாடலிலும் வெளிப்படுகிறது. சுட்டிக்காட்டினால் குற்றம் சொல்கிறார்கள் என்றுதான் படுகிறதேயொழிய, குற்றவுணர்வு வருவதேயில்லை. இதற்கான காரணத்தைத்தான் பொதுப்புத்தி என்பது. இங்கு பொதுப்புத்தி என்பதே நடைமுறையில் ஊருக்கு மட்டுமே பொதுவாக இருக்கிற பொதுக் கிணறு போல்தான். இளையராஜாவுக்கு (மட்டும்) ஆலோசனை சொல்லும் ஓலங்கள் மட்டுமல்ல, பல ஊடகங்களின் ஒலிவாங்கிகளும் இதே தண்ணீரில் முங்கி எழுந்தவைதான்.

No comments: