November 13, 2015

திருப்பங்களில் முடியும் பாதைகள்

இலங்கை என்றொரு நாடு இருக்கிறது, அங்கு நம் மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவந்தது எண்பதுகளின் மத்தியில். ஆரம்பப்பள்ளி மாணவனாக நான் இருக்கையில். சூலைக் கலவரம் குறித்த வீடியோ பதிவுகளை அப்போது என் குடும்பம் வாழ்ந்த கிராமத்தின் நூலக வாசலில் திரையிட்டுக் காட்டினார்கள். சற்றே விவரம் தெரிந்தவர்கள் என்று நான் நம்பிய ஆசிரியர்கள், நூலகச் செய்தித் தாள்களில் தேடி வாசிப்பது என்றே படிப்படியாக அறிந்து கொண்டேன். பலதும் வாசித்த பின்னரே இலங்கை என்ற தீவுக்குள் ஈழம் என்றொரு தேசமே இருக்கிறது என்பது தெரிந்தது.

நம் வீடு நம் மண் நம் மக்கள் என்று விளையாடி வளர்ந்து வாழ்ந்து, நம் நெஞ்சறிந்து யாதொரு குற்றமும் புரியாது, அந்த வீடு மண் மக்களை இழந்து கட்டிய துணியோடு ஏதிலியாய் இரவோடு இரவாக, சீவிதத்துகாக சீவனைச் சுமந்தபடி, முன்னறியா பிரதேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வதென்பதன் துயரை எத்தனை வலிமை மிக்க சொற்களும் வெளிப்படுத்த இயலாது. முந்தைய வாழ்வின் நினைவுச் சுமைகளோடு, புதிய மண்ணில் ஆனா ஆவன்னாவிலிருந்து தொடங்குவது என்பது வெற்றுவெளியில் படிகளைக் கற்பித்து ஏறமுயல்வது போன்றது. அந்த மனநிலையைச் சற்றே அனுபவித்தோருக்கே உணரமுடியும் வலி அது. உள்நாட்டிலேயே அகதியாய்ப் புலம் பெயர்ந்து வாழநேர்ந்தேர்க்கே பக்கத்து நாட்டிலிருந்து அகதியாய்ப் புலம் பெயர்வோர் துயரம் பற்றி ஓரளவேனும் உணரமுடியும்.

முத்துக்குமார் முன்னாலே செத்துப் போனான். கையாலாகாத் தனத்தோடு இங்கத்தைய ஆட்சியாளர்களிடம் முறையிடவும் அவசரக் கூட்டங்கள் நடத்தவும் தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்குலாப்போடும் இராசேந்திரசோழனோடும் சூரியதீபனோடும் சேர்ந்து எம் போன்றோர் பட்டபாடுகள் சொல்லி மாளாது. உண்மை உணர்வுகளை ஆதங்கங்களை வெளிப்படுத்த இடம் தாராத ஆட்சியாளர்கள் கைதேர்ந்த நாடகங்களால் அவற்றை முறியடித்தார்கள். ஆட்சிக்கோல் முள்ளிவாய்க்காலில் ஓடிய குருதியில் நனைந்த செங்கோலானது.

கவிஞர் சித்தாந்தன் யாழ்ப்பாணத்துக்காரர். உடனடி உணவுப்பொட்டலங்கள் போல வருடமிருமுறை படைப்பிலக்கியம் பிரசவிப்போரின் காலமிது. சித்தாந்தனின்துரத்தும் நிழல்களின் யுகம்அவ்வகையில் சேர்த்தி இல்லை. தன்னுணர்வுக் கவிதைகளும் அரசியல் தன்னிலைக் கவிதைகளும் சமமாகக் காணும் தொகுப்பு இது. இன்னமும் சமாதான மந்திர முணுமுணுப்புகளில், நிழல்களின் கண்காணிப்பில் வாழநேர்ந்திருக்கிற கவிஞரின் தன்னுணர்வும் அரசியல் தன்னிலையின் வளையத்துள் வாழ்வதே என்பதும் புரியாமலில்லை.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஈழவாழ்வின் அவநம்பிக்கையை, சமாதான சகவாழ்வு என்ற அழகிய சொல்லாடலை விழுங்கமுடியாத எதார்த்தத்தை, நீட்டி முழக்காத மொழியில் அழுத்தமாகப் பேசுகிறார் சித்தாந்தன். முள்ளிவாய்க்காலில் ஓடிய உறையாத இரத்தத்தைப் பூசிக் கொண்டவர்களாய்த் தோற்றம் தந்து உரக்கப் பேசி வளரந்த பல குறு சிறு பெருந் தலைவர்களைத் தமிழகம் கண்டுகொண்டிருக்கிறது. சித்தாந்தன் இங்கே பெரிதும் அறியப்படாமலிருப்பதற்கு அவர் மொழியல் தென்படும் மௌன வதையே காரணமாய் இருக்கலாம்.

நிகழ்கணத்தின் வலிமற்றும்மகாஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்எனும் இரு கவிதைகளிலும் பொம்மை எனும் குறியீடு ஏற்படுத்தும் மனஅழுத்தம் ஆகப் பெரியது.

ஒரு பொம்மை பற்றிய கவிதையை
பொம்மைகளிலிருந்து ஆரம்பிப்பதை விடவும்
எம்மிலிருந்தே தொடங்குவது நல்லது

எனச் சொல்லும்  நிகழ்கணத்தின் வலியும் சரி, இடப்பெயர்வுகளில் தவறிய பொம்மைகளுக்காக அழுத அனோஜைச் சமாதானப்படுத்துவதாக நகரும் மகாஜனங்களின் அழுகையும் சரி, தாமும் பொம்மைகளாக்கப்படுவதையும், பொம்மைகளெனக் கடந்து போகச் செய்யும் கையறுநிலையைக் கரிப்போடு பழகிக் கொள்ள நேர்வதைச் சொல்கிறார்.

அரசர்கள் வருவார்கள் போவார்கள்
ஒரு அரசன் விட்ட இடத்திலிருந்து
மற்ற அரசன் தொடங்குவான்
இது அரசர்களின் காலம்...

எல்லாம் அரசர்களுடையன
உனக்கும் எனக்கும் மரநிழல்கள் போதும்

என நகர்கிறது மகாஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்.

அதிகாரமுறை மாற்றமின்றி நிகழ்ந்த ஆட்சிமாற்றங்கள் ஏதும் தொடர்ந்து நம்பிக்கையீனங்களையே பரிசளித்து ஆணியால் அறையப்பட்ட இதயத்துடனும் சிலுவையில் தொங்கும் நாக்குடனும் சித்தாந்தனை சுயவதை கொள்ளச் செய்கிறது.


எல்லாப் பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன எனத் தொடங்கும்கடவுளர்களின் நகரங்களில் வாழுதல்எனும் கவிதை முள்ளி வாய்க்காலுக்குப் பின்னான ஈழமக்களின் பிரார்த்தனைகளின் வகைமை பற்றிப் பேசுகிறது. எல்லாக் கடவுள்களும் சனங்களுக்கானவை அல்ல என்பதால், கடவுள்கள் மதுவருந்தி மிதக்கிறார்கள், கொலைகளின் சாகசம் பேசுகிறார்கள், குதவழி முட்கம்பி செருகுகிறார்கள், நடுத்தெருவில் உடைகளைந்து வெடிகுண்டு தேடுகிறார்கள்.

கடவுள்களின் அற்பத்தனங்களுக்கிடையில்
வெறும் பிரார்த்தனைகளோடு
இரவுகளை உறங்குகிறோம்
பகல்ககளை ஓட்டுகிறோம்

சனங்களின் பிரார்த்தனை
தெருவில் சுடப்பட்டு இறந்தவனின்
இறுதி மன்றாடலாயும கதறலாயும்
நிர்க்கதியாய் அலைகிறது

என்கிறார் சித்தாந்தன்.

நாக்குகளில் ஏற்றப்பட்டிருக்கிறது தூண்டில்மற்றொரு முக்கியமான கவிதை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான தேர்தல் எத்தனத்தைப் பேசித் தொடங்குகிறது கவிதை.

சிலுவையில் அறையப்பட்ட மனிதர்களின்
கனவுகள் மீது
கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன

சுதந்திரம் என எழுதப்பட்ட
பிரசுரங்களில் புன்னகை புரியும்
தலைவர்களுக்கு வாக்களித்துவிட்டு
வீடு திரும்பினர்

இன்னும் அவர்கள்
இவர்களின் சகோதரர்களைக்
கொன்று புதைக்கிறார்கள்

இவர்களால் பதாகைகளை உயர்த்த முடியவில்லை
மௌனங்களால் துயரை அழுது கரைக்கிறார்கள்


என நீளும் கவிதை இது. இக்கவிதையில் குறிப்பிடப்படும் சகோதரர்கள் சமாதானக் கொடியின் கீழ் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கவிதையை வாசிக்கையில் நடேசன் முதலானோர் நினைவுக்கு வருவதும் அவர்களுக்கு கடைசியாய் நம்பிக்கை தந்து வாளாவிருந்த இங்கத்தைய தலைமக்கள் பற்றிய தகவல்கள் நினைவுக்கு வருவதும் தவிர்க்கமுடியாதவை. வடக்கில் வசந்தம் பேசப்படுகிறது. சுற்றியிருக்கும் துவக்குகளுக்கு நடுவில், ஒன்றிணைந்திருப்பதான கைகளைப் படம் காட்டி கொடி பறக்கும் வெள்ளை வேன்களின் கண்காணிப்பில், வீதிகளோ பயணங்களோ அற்ற மனிதர்களுக்குத் தேர்தல் நடக்கிறது.

இத் தொகுப்பின் தலைப்புக் கவிதைதுரத்தும் நிழல்களின் யுகம்”.

எது எனது நிழல்
எது உனது நிழல்
நிழல்களால் நிறைந்த இவ்வுலகில்
ஒரு பூவையோ
பறவையையோ வரைந்திடமுடியவில்லை

மிகவும் கொடியது
உறக்கத்தின் நடுநிசியில் கனவுகளை
உதறியெழ வைக்கும் சப்பாத்துகளின் நிழல்கள்

நிழல்களுக்கிடையில்தான்
நீயும் நானுமாகத் தூங்குகிறோம்
நிழல்களோடு...


கண்ணறியாத நிலையிலும் கண்காணிப்புக்குள்ளாகவே வாழநேர்கிற துயரம் உறக்கத்தையும் கனவுகளையும் கூட அர்த்தமிழக்கச் செய்வதை இக்கவிதையில் புலப்படுத்துகிறார் கவி. குதிரைகள் பற்றிய குறிப்புகள் மற்றும் மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு ஆகிய இரு கவிதைகளும் முக்கியமானவை.


துவக்குகள், சப்பாத்துகள், கண்காணிப்பு, வெளியின்மை, மரத்த நிலை எனப் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றதுதான். தினசரி வாழ்வு இதற்குள்தான் என்ற நிர்ப்பந்தத்தில் எளிய சொற்களில் வெளிப்படுத்துவதை விட வேறென்னதான் செய்துவிடமுடியும்?

சித்தாந்தன் எனும் கவிஞனின் எதிர்பார்ப்பகவும் கடமையாகவும் உணர்வதைப்பூக்களில் வசிக்கிற கனவுஎனும் கவிதையில் தன் குழந்தையிடம் சொல்கிறார்:

யுத்தம் எமது காலத்திலேயே
முடிந்துவிட வேண்டும்
உனது மின்மினிக் கண்களுக்கு
யுத்தமேயில்லாத உலகைக்
கையளிக்கவே விரும்புகிறேன்

அப்போது உனக்குச் சொல்வேன்
யுத்தம்
நம் நிலங்களைத் தின்றதை
நம் வனங்களைத் தின்றதை
நம்மை அகதியாக்கியதை

குழந்தாய்
எப்போதையும் போலவே
உனது கைகளில்
பூக்களைக் காணவே விரும்புகிறேன்


தமிழகத்தில் எலுமிச்சம்பழ வெளிச்சம் படைப்பாளிகளை விதையற்ற பழங்களாக்கி வணிகப்படுத்துகிறது. அதன் விளம்பரங்கள் தரும் தொடர்புகள் கருதிச் சிறுகச் சிறுக உள்ளீடற்றுப் போகச் சம்மதிப்பவர்களாகி விடுவோரே இப்போது வெகுபலர். அந்த ஆபத்தும் ஒப்பனைகளும் சித்தாந்தனைத் தீண்டாதிருக்கட்டும்.

எழுத்து ஒரு திறன். வெளிப்பாடு அதன் உந்துதல். மொழிக்கும் தன்னிலைக்குமான ஒரு இசைவில்தான் கவிதை சாத்தியமாகிறது. இந்த சாத்தியமுமற்று சகோதார மண்ணின் துரோகத்தாலும் இரசாயனக் குரோதத்தாலும் அழிந்தனவும் முள்வேலிகளுக்குள் வானம் பார்த்து வெறித்து நிற்பனவுமான சீவன்களே கவிதைகளை விடவும் எமக்கு நெருக்கமானவை.

(2015 ஜூன் 21 அன்று கூழாங்கற்கள் அமைப்பினர் மதுரையில் ஏற்பாடு செய்திருந்தஇனப்படுகொலையும் இலக்கியங்களும் - முள்ளிவாய்க்காலை முன்னிறுத்திஎனும் நிகழ்வில், கவிஞர் சித்தாந்தனின்துரத்தும் நிழல்களின் யுகம்எனும் கவிதை நூல் குறித்து ஆற்றிய உரை)

1 comment:

Uduvil Aravinthan said...

நல்ல பதிவு.