நெஞ்சக் கூடு உலர முயன்றாலும்
சட்டம் விட்டகலப் போவதில்லை
நான்
அடிக்கடி திறக்கும் வாசல்
உயிர்ப் பிணங்களை உள்ளனுப்புவதாய்
உன் பிதற்றல்
கம்பிகளினூடாக வெளியில்
பறக்க யத்தனிக்கலாம் நீ
ஆனால் பகல்
வாய் பிளக்கவில்லை இன்னும்
இருட்டின் வெளிச்சத்தில் பார்
உன் கரங்களை
உன்னைப் பெருநோயாளி
ஆக்கியிருக்கின்றன பகல்கள்
அழுக்கு உதிர்க்க
நீ வெட்டுவது நகங்களை அல்ல
அழ்கிய உன் விரல்களை
நகப் பூச்சு அணிந்து
தினமும் அதை அழகுபடுத்துகிறாய்
உன் மன்றாட்டுக்கு
சாயப் போவதில்லை என் செவி
நான் விலகினால்
நீ சென்றடைய மரம் வயல்
இல்லை
உன் எச்சம் முளைக்காது
நான் விலகினால்
உன் முகத்தில் அப்பிக் கொள்ளும்
விடியல்
குருடாகலாம் அல்லது
இறப்பின் மடியில் நீ
மூச்சுத் திணறலாம்
ஆகவே நண்பனே
படுக்கைக்குத் திரும்பு
வழக்கம் போல கனவுசெய்
உறங்க அல்லது விழிக்காமலிருக்க.
No comments:
Post a Comment