September 08, 2010

கடிதம் - இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகலும் அவையகத்து அஞ்சாமையும்


நன்றி: காலச்சுவடு


போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது' என்கிற குறளை மனத்தில் இருத்திக் கொண்டே இப்படிச் சொல்லியிருப்பார் இமையம். 'அரசு நினைத்தால் நூலகத் துறையில் மட்டுமல்ல, காலச்சுவடையே நிறுத்த முடியும். காலச்சுவடுக்கு வரக்கூடிய விளம்பரங்களை நிறுத்த முடியும்' இந்த அக்கறையான குரலைக் காலச்சுவடு செவிமடுப்பது நல்லது.

காலச்சுவடு இதழ் அரசு நூலகங்களில் தடைசெய்யப்பட்டிருப்பதற்கு உரிமை சார்ந்த எதிர்வினையாக, அவ்விதழ் மேற்கொண்டுவருகிற கருத்துரிமைப் போராட்டத்தின் அறம் சார்ந்து, பல படைப்பாளிகளும் வாசகர்களும் இடதுசாரிகளும் பண்பாட்டியலாளர்களும் ஆகஸ்டு 2008 இதழில் செய்திருந்த கருத்துப் பதிவுகளை அரசியல்வாதிகளைப் புகழும் அடிவருடித்தனமெனச் சொல்லிக்காட்ட நேர்ந்திருக்கிறது இமையத்திற்கு.

வாசகர்களின் ஒரு பிரிவினரை மட்டும் கணக்கில் கொண்டு, காலச் சுவடை வெளியிடவோ, (கடைகளில்) விநியோகிக்கவோ ஏதும் தடையில்லை என்கிற நிலையில், நூலகத் துறை ஆணை இல்லாமல் போவதால், இதை வாசிக்கிற வாசகர் எவரும் இன்மையை உணரப் போவதில்லை என்கிற தொனியில் எழுதியிருக்கிறார் அவர். காலச்சுவடு வாசகர்களில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தொடர்ந்து வாங்க இயலாத பொருளியல் சூழல் உள்ள பலரும் இருக்கிறார்களே! இப்பிரிவினரையும் உள்ளடக்கியதுதான் பொது நூலகம்.

எண்ணிக்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல்வாதிகள்தான், இலக்கியவாதிகள் அல்ல என்று துவக்கத்தில் பொதுவாகக் குறிப்பிடுகிற இமையம், அடுத்த சில வரிகளில் தமிழ்நாட்டில் படித்தவர்கள் எத்தனை பேர்? அதில் புத்தகம் படிப்போர் எவ்வளவு? அதிலும் காலச்சுவடு போன்ற இதழ்களைப் படிப்போர் எவ்வளவு? என்கிற வினாக்களை எண்ணிக்கையை நம்பியே முன்வைக்கிறார். 24.08.2008 ஜூனியர் விகடனில் வாசகர்கள் அதிக அளவில்(?) படிக்கும் இதழ்களை நூலகங்களுக்கு வாங்கலாம் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில்தான் (நூலக ஆணைக் குழு) காலச்சுவடு பத்திரிகையை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. எண்ணிக்கையில் நம்பிக்கைகொண்ட அமைச்சர் அரசியல்வாதிதான். இமையம் அரசியல்வாதியும் 'கூட'.

உண்மை புரியாமல், அரசியல் காரணங்களுக்காகக் காலச்சுவடு நிறுத்தப்பட்டதாகத் தவறாக யூகித்துக்கொண்டு, பிரச்சினையைத் தி.மு.க. பக்கம் திருப்பிவிடுகிறார்கள் என்கிற வார்த்தைகளுக்கும், காலச்சுவடு போன்ற இதழ்களைக் கண்டு உருவான அச்சத்தினால் தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது போன்ற தோற்றத்தைக் காலச்சுவடு உருவாக்குகிறது என்கிற வார்த்தைகளுக்கும் உள்ள இடையழுங்கு கவனிக்கத் தக்கது. இதைத்தான் ஆள்வோர் உளப்பாங்கைக் குறிப்பறிந்து ஒழுகுதல் என்பர்.

அரசியல் - ஆட்சி - ஊடகம் என மூன்றிலும் மாறன் சகோதரர்கள் மேலாதிக்கம் பெற வேண்டி, பல இடையூறுகளும் நால்வகை உபாயங்களினாலும் தகர்த்தெறியப்பட்டு, திமுகவின் மாநிலத் தலைமையாலும் வட்டாரத் தலைமைகளாலும் ஊக்குவிக்கப்பட்டபோதும், அதனால் வெகுபல ஊடகங்கள் - நிறுவனங்கள் இன்னலுற்றபோதும் எழாத அறச்சீற்றம், இப்பொழுது சன் குழுமம் திமுகவிலிருந்து விலக்கப்பட்டிருக்கிற சூழலில், அக்குழுமத்தால் தமிழ்ச் சமூக வாழ்வில் நேர்ந்துள்ள விபரீதங்களில் காலச்சுவடைக் கவனம் செலுத்த வழிநடத்த முயல்கிற இமையம் போன்றோரின் உள்ளடக்கம் தெரியாத அளவிற்கு ஒன்றும் தமிழ் வாசகன் இல்லை.

பொதுவாக "நாம் 'பிறருக்கான புனிதத்தை' மட்டுமே பேசுபவர்களாக இருக்கிறோம்" (இமையம்) மற்றும் "விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இப்பூவுலகில் எதுவுமில்லை என்பதே எங்கள் நம்பிக்கை" (காலச்சுவடு) என்பதான வரிகள் அவரவர் உள்ளிருப்பை அடையாளப்படுத்துகின்றன.

இமையமே சொல்கிறாரே 'நமது பலவீனங்கள் எதுவோ, அதுவாகத்தான் நாம் இருப்போம்' என்று.


- யுவபாரதி, சென்னை


No comments: