October 10, 2010

பெருந்திணையும் பேசாமடந்தையும்

- செந்தி

நன்றி: புதிய காற்று மார்ச் 2007

நீர் நிரம்பி ததும்பிய தொன்மையான ஆற்றங்கரையொட்டி தொடங்கிய வாழ்வு போல இலக்கிய மொழிநடையில் கவிதை முதன்மையானதாக தன்னையெப்போதும் முன்னிறுத்திப் பயணிக்கிறது; காலவெளியின் திசையறிந்து தன்னை தகவமைத்துக் கொள்கிறது.



ஐவகை நிலங்கள் ஒருவித ஈர்ப்பையும் மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்தப் கூடியவைதானே. நெகிழ்வும் ஈரமும் கலந்த மனசுக்காரர்கள் அதன்பால் கவரப்படுவதும் வெகு இயல்பானதொன்றே. கவிஞர் மணிகண்டன் அனேகமாக இருபத்தைந்து வயதைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை. திப்பக்காட்டின் மகரந்த நெடியையும், தூண்பாறை, சாத்தனூர் அணையின் நீர்வாசத்தையும் தனது முதல் தொகுப்பெங்கும் பரவ விட்டிருக்கிறார்.

காதலினாற் பொருட்டு விளைகிற வலி, ஏமாற்றம், வதை, துயரின்பம் பல கவிதைகளில் படிந்திருக்கிறது.

உயிர்க் குலையில்
விஷம் பரவ
கதறத் துடிக்கிறது
மெளனம்

நீ தவிர்க்கிறாய்
நான் திரும்புகிறேன்
இன்றும்

தனது இருப்பு குறித்து தீவிர யோசனையிலிருக்கும் கவிஞர் தான் குறித்த தேடலில் மூழ்கிக் கிடக்கிறார் கணந்தோறும்.

சுழலும் மின்விசிறி
புழுங்கும் மூளை
ஜன்னல் மீந்த வெளி

எல்லாம் இருக்கிறதான
நம்பிக்கையுடன்
உட்புழுந்தது

எதுவுமே இல்லை
யென்று வெளியேறிய
நான்

பொதுவாக, கவிதையில் என்று என்பதான சொல்லாடல் கவித்துவத்தை இழக்கச் செய்திடும். தேர்ந்த கவிஞர்கள் அதனைத் தவிர்ப்பர். மணிகண்டன் யென்று என்பதாகப் பதிவு செய்து அழகுணர்ச்சியூட்டுகிறார். வாழ்க்கை நதிப்போக்கில் பயணிக்க முயன்றாலும் சுய வதையுடன் நகரும் பொழுதுகள் கவிஞருக்கு வாடிக்கையாய் அமைகிறது.

விஷரேகைகள் நெளியும்
நடுநிசிக் காற்றில்
பிய்த்தெறியப்பட்ட கனவின்
மண்மடிப்புகளில் ஆழப்புதைந்திருக்கிறது
மெளனத்தின் வேர்.

பெருந்திணை, யாத்ரீகனின் மரணம், ஒளிந்திருக்கும் வீடு - கவிதைத் தலைப்புகளே கவிதையாயிருக்கிறது. சில கவிதைகளில் சொற்கள் வாசிப்பதற்கே தடையாயிருப்பதுடன் கவிதையொழுங்கும் காட்சியொழுங்கும் சீர்குலைய காரணமாயுள்ளன. தனது சிறிய மெளனத்திற்குப் பின் இச்சிறிய தொகுப்பினை வெளியிட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அடர்த்தியான கவிதைகளை உள்வாங்கும் சுகம் பல தருணங்களில் கிட்டுகிறது.

ஒற்றை நுரை
துண்டு துண்டாய்
சிதறுகிறது வானம்

ஹைக்கூ பாணியிலிருப்பதை தொகுப்பில் சாமர்த்தியமாகத் தவிர்த்திருக்கலாம்.

ஸ்டாலின் ராஜாங்கத்தின் அணிந்துரை பொருத்தமானது போல காட்சியளிப்பினும் முடிப்பில் வேறொரு தளத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறார். விவாதிக்கலாம். இறுதிப் பக்கங்களிலுள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகளின் நடை முந்தையப் பதிவுகளைக் காட்டிலும் கூடுதல் மென்மையுடன் இருக்கிறது. நீர்வாசம் சிலிர்ப்படையச் செய்கிற வடிவமைப்பு. மனதைக் கிளர்ச்சிக்குள்ளாக்குகிற கவிதைகள் தந்திருக்கிற மணிகண்டன் பேசப்படுகிற கவிஞனாகிற தூரம் வெகுதொலைவில்லை.

No comments: