October 16, 2011

நாம்தேவ் லக்ஷ்மண் டசால் : ஒடுக்கப் பட்டவர்களின் மொழி

நாம்தேவ் லக்ஷ்மண் டசால்
"சமூகப் போராட்டங்களின் இலக்கு துயரத்திலிருந்து விடுவிப்பது என்றால்,  அதற்குத் தேவையானது கவிதை; ஏனெனில் அதுவே மகிழ்ச்சியை வலுவாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது" என்று கூறிய நாம்தேவ் லக்ஷ்மண் டசால் (Namdeo Laxman Dhasal) மூத்த மராட்டிக் கவிஞர்களில் ஒருவர்; தலித் இலக்கிய முன்னோடி; இந்திய தலித் சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவர்; தம் இலக்கியப் பணிகளுக்காக நடுவண் அரசின்  'பத்மஸ்ரீ' விருதும் பெற்றவர்.

1949-இல் மராட்டிய மாநிலம் பூனாவுக்கு அருகில் பூர் கினேர்கர் என்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மஹர் சாதியில் பிறந்தவர் நாம்தேவ். இவரது பள்ளிப் பருவம் மும்பையின் கோல்பீட்டா பகுதியில் கழிந்தது. மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி என அறியப்படும் அங்குதான் நாம்தேவின் தந்தை ஒரு இறைச்சிக் கடையில் வேலை பார்த்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக நாம்தேவால் பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியாமல் போனது.

இளம் பருவத்தில் ராம் மனோகர் லோகியாவின் சோஷலிசக் கருத்துகளில் பற்று கொண்டிருந்த நாம்தேவ், பிறகு மார்க்சியத்தால் கவரப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரப் பணியாற்றினார்.  எஸ்.ஏ.டாங்கேவால் அடையாளம் காணப்பட்டவரும், வெகுவாக அறியப்பட்ட கம்யூனிஸ்ட் பாடகருமான ஷாகிர் அமர் ஷேக்கின் மகள் மல்லிகாவை மணந்தார் நாம்தேவ்.

அனைத்து அரசியல் இயக்கங்களும் உயர்சாதி இந்துத் தலைமை மற்றும் பூர்ஷ்வாத் தனத்தால் வரையறுக்கப்பட்ட எல்லைகளையே கொண்டிருப்பதாக உணர்ந்த நாம்தேவ், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக இயங்கிய கருஞ் சிறுத்தைகள் (Black Panthers Party) அமைப்பு ஏற்படுத்திய தாக்கத்துடனும், அம்பேத்கரியப் புரிதலுடனும் அருண் காம்ப்ளே, ராஜா தாலே முதலானவர்களுடன் இணைந்து 1972 -இல் ''தலித் சிறுத்தைகள்'' (Dalit  Panthers of India) என்ற அமைப்பை நிறுவினார். அனைத்து மட்டங்களிலும் உள்ள உயர்சாதித் தனத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான பல துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல், போராட்டங்களை வழிநடத்துதல் முதலான தனது தீவிர அரசியல் செயல்பாடுகளால், மகாராஷ்டிரத்தில் மட்டுமின்றி அனைத்திந்திய அளவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியது தலித் சிறுத்தைகள் இயக்கம். அவசர நிலைக் காலத்தில் போலீசாரால் தலித் சிறுத்தைகள் அமைப்பின் மீது 300க்கும் மேற்பட்ட போலி வழக்குகள் போடப்பட்டன. பிரதமர் இந்திரா காந்தியை நேரடியாகச் சந்தித்து, அனைத்து வழக்குகளையும் நீக்கச் செய்தார் நாம்தேவ். அவரது பிரியதர்ஷினி என்ற கவிதை நூல் இந்திரா காந்தியைப் பற்றியதே. பிறகு பற்பல கருத்து முரண்கள் மற்றும் தேர்தல் அரசியல் பங்கேற்பு காரணமாக இவ்வியக்கம் பற்பல பிளவுகளைச் சந்தித்தது. தற்போது இந்தியக் குடியரசுக் கட்சியில் இயங்கி வருகிறார் நாம்தேவ் டசால்.

இலக்கியத்தைப் பொறுத்த வகையில், பல தலித் எழுத்தாளர்களைப் போல பாபுராவ் பாகூலின் எழுத்துகளால் தாக்கம் பெற்றவர் நாம்தேவ். இவருக்குப் பெரும் இலக்கிய அந்தஸ்தையும் மக்கள் அபிமானத்தையும் பெற்றுத் தந்த இவரது முதல் கவிதை தொகுதியான கோல்பீட்டா (Golpitha) 1973-இல் இவரது 24 ஆம் வயதில் வெளிவந்தது. 

மராட்டி இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நூல் அது. மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி என அறியப்படும் கோல்பீட்டாவின் தலித் வாழ்வை அதற்கே உரிய மொழியில் தீராக் கோபத்தோடு வெளிப்படுத்தும் கவிதைகளைக் கொண்டது அது. வெளிவந்த அதே ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசின் விருதையும், அடுத்த ஆண்டு சோவியத் லேன்ட் நேரு விருதையும் பெற்றது கோல்பீட்டா.

ஆனந்த் டெல்டும்டே
"அதன் ஒவ்வொரு வார்த்தையும், அதில் பொதிந்திருந்த ஆற்றலும், சீற்றமும், ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த இலக்கிய ஒளிவட்டங்களுக்கு முற்றிலும் அன்னியமானதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருந்தது. உழைக்கும் மக்களின் மொழியில் திருவுருக்களை உடைக்கும் தன்மையிலான படிமங்களாலும், அடங்க மறுக்கும் சொற்களாலும், கடுங்கோபத்தாலும் அதிகாரத்திலிருந்த நிறுவனங்களை வேர் வரை அசைத்தது," என்று கோல்பீட்டாவை மதிப்பிடுகிறார் விமரிசகரும் தீவிர தலித் இயக்கச் செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே.

'கோல்பீட்டா'வைத் தொடர்ந்து துஹி யத்தா கஞ்சீ? (எவ்வளவு படித்தவர் நீங்கள்?), மூர்க் மாதார்யானே (முட்டாள் முதியவன்), மீ மார்லே சூர்யாச்யா ரதாச்சே கோடே சாத் (நான் சூரியனின் ஏழு குதிரைகளைக் கொன்றுவிட்டேன்)  உட்பட ஒன்பது கவிதைத் தொகுதிகளையும், ஹாட்கீ ஹாட்வாலா, நெகட்டிவ் ஸ்பேஸ் ஆகிய நாவல்கலையும் வெளியிட்டுள்ளார் நாம்தேவ் டசால். அந்தாலே ஷதக் (குருட்டு நூற்றாண்டு), அம்பேத்கரி சால்வால் (அம்பேத்கரிய இயக்கம்) ஆகிய இவரது கட்டுரை நூல்களும் குறிப்பிடத் தக்கவை.

1973,1974,1982,1983 ஆகிய ஆண்டுகளில் இலக்கியத்துக்காக மகாராஷ்டிர மாநில அரசின் விருதுகளும், 1974இல் கோல்பீட்டாவூக்காக சோவியத் லேண்ட் நேரு விருதும், 1999ஆம் ஆண்டு உயரிய பத்மஸ்ரீ விருதும், 2004ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார் நாம்தேவ் டசால்.

நாம்தேவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "Namdeo Dhasal : Poet of the Underworld" என்ற பெயரில் வெளியிட்டவரும், ஆவணப்பட இயக்குநரும், கவிஞருமான திலீப் சித்ரே (1938-2009) "மராட்டி மொழியில் மட்டுமன்று, இந்தியக் கவிதை நூல்களிலேயே கோல்பீட்டா டி.எஸ். எலியட்டின் 'பாழ்நில'த்திற்கு ஒப்பானது" என்கிறார்.

திலீப் சித்ரே
 "2001 ஆம் ஆண்டு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்த சர்வதேச இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட நாம்தேவின் கவிதைகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. அத்தகையவரின் கவிதைகள் பெங்காளியைத் தவிர்த்து பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படவே இல்லை என்பதைக் கண்டு, அவரது எழுத்தின் வீரியத்தை உணர்ந்தவன் என்ற வகையிலும், மொழிபெயர்ப்பாளன் என்ற வகையிலும் பெரும் மன அழுத்தத்தை உணர்கிறேன்" ஒரு கட்டுரையில் வருந்தியுள்ளார் திலீப் சித்ரே.


-யுவபாரதி 


தொடர்புடைய சுட்டிகள் :    
கவிதைப் புத்தகம் (நாம்தேவ் டசாலின் கவிதை)
மரங்களின் அமைதியற்ற ஆன்மா (திலீப் சித்ரேவின் கவிதை)


2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_15.html

Siraju said...

மிக முக்கியமான பதிவு. பதிவிட்ட உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.