December 23, 2011

சாரநாத் தூணும் வில்லிப்புத்தூர் கோபுரமும்


 - யுவபாரதி

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற பெயரில், அரசின் சிறப்பு பயங்கரவாதத்தால் மணிப்பூரில் நிகழ்த்தப்படும் படுகொலைகள், ஆள்கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், ஜனநாயக மறுப்பு இவைகளைக் கண்டு வெறுத்துப்போய், நடைமுறையிலிருக்கும் அச்சட்டத்தைத் திரும்பிப் பெற வலியுறுத்தி ஐரோம் ஷர்மிளா என்ற இளம்பெண் பத்தாண்டுகளாக உயிர் குலையும் உண்ணாவிரதம் இருக்கிறாள். அதற்குச் செவி சாய்க்காமல் அவளுக்கு வலிந்து மூக்கு வழி உணவு செலுத்தி நகரும் மத்திய அரசு, கூடுதலாக ஒரு சட்டம் போட்டுவிட்டால் பாரதநாடே பரிசுத்தமாகிவிடும் என்று ஒரு இந்தியன் தாத்தா வெண்காலர் கூட்டம் கூட்டிக் காட்டினால் பணிகிறது, பாராளுமன்றத்தைக் கூட்டுகிறது.

ஈழப் பிரச்சினையில் தலையிடு! இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடு! அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்று! - எவ்வளவோ கதறியும் படுகொலைகள் நடந்தேவிட்டன. உயிர்பிழைத்தோர் நடைபிணமாகத் திரிகின்றனர். நடுவண் அரசு நாடகமாடியது. இலங்கை அரசு ஈழத்துப் பரணி பாடியது. 

காந்தி பிறந்த மண்ணில் மரண தண்டனையா? புத்தன் வாழ்ந்த பூமியின் சட்டப் புத்தகத்திலிருந்து மரண தண்டனை எனும் சொல்லையே தூக்கி எறி! மூவர் தூக்கு உத்தரவை உடனே இரத்து செய்! - எத்தனையோ கூக்குரல்கள். சட்டமன்றத்தில் ஒரு முகமும், நீதிமன்றத்தில் ஒரு முகமுமாக வேடம் கட்டியது மாநில அரசு.

ஒடுக்குபவனுக்கு ஒரு நீதி, ஒடுக்கப்படுபனுக்கு ஒரு நீதியா? சம்பந்தப்பட்ட காவல்துறையினரைப் பணியிலிருந்து நீக்கு! கடும் நடவடிக்கை எடு! கொல்லப்பட்டோர் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கு! - பரமக்குடி தலித் மக்கள் படுகொலைகளைக் கண்டித்து எழுந்தன கண்டனக் குரல்கள். கொஞ்சம் நிவாரணத் தொகை. பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கவில்லை எனினும், வழக்கம் போல ஒரு ஓய்வு பெற்ற ஒருநபர் கமிஷன்.

நாளடைவில் கதறல்களும் கூக்குரல்களும் கண்டனக் குரல்களும் ஓய்ந்து வருகின்றன.

மின்சாரக் கனவு காட்டி ஆயுதம் வளர்க்காதே! இலட்சம் பேரின் உயிரோடு விளையாடாதே! வேண்டவே வேண்டாம் அணு உலைகள்! - மாதங்கள் பல கடந்தும் அயராதுதொடரும் கூடங்குளம் மக்கள் போராட்டங்கள். சென்னை கடிதமிடுகிறது. டெல்லி மாஸ்கோ பறக்கிறது. இன்னும் சில நாட்களில் திட்டமிட்டபடி அணு உலைகள் செயல்படத் துவங்கும் என அங்கு உறுதி கொடுக்கிறது.

பழைய அணையை உடைப்பதும் உறுதி! புதிய அணையைக் கட்டுவதும் உறுதி! - சொல்கிறது கேரளம். உங்களுக்குத் தண்ணீர்! எங்களுக்குப் பாதுகாப்பு! - வெண்ணெய் தடவிய வார்த்தைகள். முல்லைப் பெரியாற்றுக்காக ஒவ்வொரு நாளும் எல்லை நோக்கி மக்கள் படையெடுப்பு. தடியடி. கலைப்பு. கையைப் பிசையும் மாநில அரசு. கண்டுகொள்ளாமல் மத்திய அரசு. கமிஷன், ஆய்வு எனக் காலந் தள்ளும் உச்ச நீதிமன்றம்.

மக்கள் பொறுமையோடு அமைதியாகப் போராடினால் அரசுகள் கண்டு கொள்ளாமல் ஒதுக்குகின்றன.மக்கள் பொறுமையிழந்து ஆவேசம் கொண்டால் ஆயுதம் கொண்டு ஒடுக்குகின்றன.

சாரநாத் சிங்கத் தூணிலும் வில்லிப்புத்தூர் கோபுரத்திலும், பொருளற்றுப் போன. ஒரே பொருள் கொண்ட இரு வேறு மொழி வாசகங்கள். 

எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இதழோரம் கசந்த புன்னகை. 

சத்தியமேவ ஜெயதே ? வாய்மையே வெல்லும் ??

1 comment:

Samy said...

Sathyam veru. Arasiyal veru.samy