December 11, 2012

இது நடிகர்களின் நாடு - தம்பி! நான் ஏது செய்வேனடா?

காலை வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரிந்தது. நகரம் என்றுதான் இல்லை. புறநகர்ப் பகுதிகளிலும் ஆங்காங்கே பேனர்கள், கட்அவுட்டுகள், சுவரொட்டிகள்... நாளை நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளாம். உடனே பல நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். 'இன்று சி.சுப்பிரமணிய பாரதி என்ற ஒரு கவிஞனின் 130-ஆவது பிறந்தநாள் - அவனை நினைப்போம்' என்று.

சில பத்திரிகைகளில் ஓரிரு பத்திகள். ஓரிரு புகைப்படங்கள். அமைச்சர்களும், சில அமைப்பினரும், வயதான கொஞ்சம் தியாகிகளும் கடற்கரையிலுள்ள பாரதி சிலையைச் சுத்தம் செய்து மாலை சூட்டி சில புகைப்படங்கள். சில பள்ளிகளில் பாட்டு, பேச்சு, கட்டுரை என சில போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பு. அவ்வளவுதான் பாரதியின் நினைவு.

அதே பத்திரிகைகளில் நாளை ரஜினியின் பிறந்தநாள் என்பதால் இன்றே அது குறித்த சில விளம்பரங்கள். சிறப்பு மலர் கூட வெளியிடுகின்றனவாம் சில இதழ்கள். நாளை இன்னும் தூள்பறக்கும். பல பக்க விளம்பரங்கள், சிறப்புப் பக்கங்கள், விதவிதமான புகைப்படங்கள் என்று இதழ்கள் குலுங்கும். தெருவெங்கும் "சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு..." என்று ஒலிபெருக்கிகள் அலறும். ஆங்காங்கே 'அவரவர் செலவில்' அன்னதானம் நடக்கும். அலகு குத்து நிகழும்.  பால் காவடி, பழக் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி, மச்சக் காவடி, தீர்த்தக் காவடி என்று முருகன் கோவில்கள் முழி பிதுங்கும். தீச்சட்டி, தீமிதிகளால் அம்மன் கோவில்கள் அமர்க்களப்படும். விசேஷ அர்ச்சனை, அபிஷேகங்கள் என்று இன்ன பிற கோவில்கள் திக்குமுக்காடும்.

இது நடிகர்களின் நாடு. அதனால்தான் நடிகர்கள் வெற்றிபெறும் இந்நாட்டில், உண்மையில் ஊருக்கு உழைப்பவர்கள் வெற்றி பெறுவதில்லை. அப்படியே தப்பித்தவறி ஊருக்கு உழைப்பவன் வெற்றிபெற்று விட்டாலும், சூழல் கருதி அவனும் நடிகனாகிவிடுகிறான். அப்படி ஆனால்தான் அவன் முழுமை பெற்றவனாகவும் நம்பப்படுகிறான். கிளிசரின் தடவாமலேயே - அல்லது வெளியில் தெரியாமல் தடவி - நினைத்த மாத்திரத்தில் குலுங்கிக் குலுகி அழுதல், குத்து வசனம் (பஞ்ச் டயலாக்) பேசுவது போல் அலறிக் கத்துதல் என்று அரசியல்வாதிகளும் நடிகர்களாகிவிடுகிறார்கள். ஒரே பாட்டில் பணக்காரனாகி விடுபவன்தான் இங்கு பெரிய நடிகன் என்பது போல், நம்மை ஒரே பேச்சில் கனவுச் சமுதாயத்தில் நிலைநிறுத்துவதாக நடிப்பவன்தான் இங்கு பெரிய அரசியல்வாதி. தன் நாட்டையும் சமுதாயத்தையும் விட, தத்தம் வீடும் குடும்பமுமே முக்கியம் என்று இருப்பவர்களையே ஆதர்சமாகக் கொண்டு வாழ்கிற நடிகர்களின் நாடு இது. தன் வீட்டையும் குடும்பத்தையும் விட நாடும் சமுதாயமும் முக்கியமென்று வாழ்ந்த பாரதி போன்றவர்களுக்கு இங்குஏது இடம்?

சமுதாயம் என்ற சொல்லே பிறப்பு வழிச் சாதி என்பதாகத் தமிழில் பொருள்கொள்ளப்பட்டு ரொம்ப நாளாயிற்று. அதுவும் சாதி ரீதியாகத் தமிழர்களைத் திரட்டி முண்டா தட்ட வைப்பவர்கள் எழுச்சி பெற முயலும் இக்காலத்தில், "விதியே! விதியே! தமிழச் சாதியை என் செயக் கருதி இருக்கின்றாயடா?" என்று - தமிழச் சாதி என்று - பாடிய அந்த முண்டாசுக் கவிஞனை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

"தம்பி! நான் ஏது செய்வேனடா? தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது..."

- என்று பரலி சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில் எழுதினான் பாரதி.

இனி, பாரதியை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11-இலேனும் பலருக்கும் நினைவு கொள்ளச் செய்ய ஒரே ஒரு வழி இருக்கிறது.

ரஜினிகாந்த்தின் பிறந்தநாளுக்கு முந்தைய நாள்தான் பாரதியின் பிறந்தநாள் என்று பலரிடமும் சொல்லிவைப்பதுதான் அது!


- யுவபாரதி

3 comments:

saji said...

true...

PARITHI MUTHURASAN said...

தேவையான நேரத்தில் தேவையான பதிவு நன்றி

Tamil seiythigal said...

பதிவல்ல
நமக்கெல்லாம் சாட்டையடி
மிக்க நன்றி.