June 05, 2013

கம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்

கம்பனால் ‘சொல்லின் செல்வன்’ எனப் போற்றப்படுபவன் அனுமன் என்பதைப் பலரும் அறிவர். எனில், ‘வில்லின் செல்வன்’ எனப் போற்றப்படுபவன் யார்? அது, இராவணனின் மகன் மேகநாதன். இந்திரனை வென்றதால் இந்திரசித்து. அவனது வில்லின் திறத்தை நான்முகனே மெச்சிப் புகழ்வதாக ஒரு மதுரகவியில் சொல்வான் கம்பன்.

சந்த வில்லி முப்புரம் தழற்படச் சரந்தொடும்
அந்த வில்லி யும்சினத்து அரக்கரோடு தானவர்
சிந்த வில்லி ஐந்தெடுத்த தேவர்தேவ னும்அலால்
இந்த வில்லி ஒக்கும் வில்லி எங்குமில்லை இல்லையே.

வில்லைத் திறம்படக் கையாளத் தெரிந்தவன் வில்லி. திரிபுரம் எரிக்கும் பொருட்டு பினாகம் எனும் வில்லினை எடுத்த சிவனையும், அரக்கரும் தானவரும் அழியும் பொருட்டு ஐம்படைகளை எடுத்த திருமாலையும் தவிர, இந்த மேகநாதனுக்கு இணையான வீரன் எவ்வுலகத்திலும் இல்லை என்பது பொருள்.

திருமாலின் ஐம்படைகள் என்பவை சக்கரம், சங்கு, கதை, வில், வாள் என்பன. இவற்றிற்கு முறையே சுதர்சனம், பாஞ்சசன்னியம், கௌமோதகி, சார்ங்கம், நந்தகம் என்று பெயர், முற்காலத்தில் திருமாலின் ஐம்படைகளும் பொறிக்கப்பட்ட தகட்டினை குழந்தைகளுக்குக் காப்பாகக் கழுத்தில் கட்டிவிடுவார்களாம். அதற்கு ஐம்படைத் தாலி என்று பெயர்.

தன் பாசக் கயிற்றால் அனுமனையே கட்டிப்போட்டான் மேகநாதன். பின் கருடன் வரவால் அது இற்றது. தன் பிரம்மாஸ்திரத்தால் இலக்குவனையும் வானர சேனையையும் சாய்த்தான் மேகநாதன். பின் அனுமன் சஞ்சீவிமலை கொணர்ந்து அவர்களின் உயிர்மீட்டான்.

தன் ஆற்றலையும் ஆயுதவலிமையையும் எதிர்கொண்டு மீளும் எதிரிகளின் வல்லமையைக் கண்டு வந்த மேகநாதன், மறுநாள் போருக்குப் புறப்படும் முன் இராவணனிடன் சொல்வான்.

ஆதலால் அஞ்சி னேன்என்று அருள் அலைஆசை தான்அச்
சீதைபால் விடுதி யாயின் அனைவரும் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகெலாம் கலக்கி வென்றான்.

எதிரிகளைக் கண்டு அஞ்சிச் சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம், அப்பா! உன் மீதுள்ள அன்பினால் சொல்கிறேன் என்று மேற்கண்டவாறு சொல்கிறான். பொருள் வெளிப்படை. இராவணன் மகன் சொல்லும் கேட்கமாட்டான். மகன் போர்க்களம் புகுவான். இறுதியில் இலக்குவன் கணைகளால் மாள்வான். வெட்ட வெட்டத் தன் அங்கங்களைச் சேர்க்கத் தெரிந்த மாயாவி மேகநாதன் என்பதால், தொடர் கணைகளால், கை-கால்கள் வேறு, உடல்-தலை வேறென அறுத்து, தலையை மட்டும் கடலில் வீழ்த்தி மூழ்கடிப்பான் இலக்குவன்.

வாய்மையும் வலிமையும் மிக்க மேகநாதன் அடையும் இத்தகைய மரணம்தான், யுத்த காண்டத்திலேயே இராவணன் மரணத்தை விடவும் படிப்போர் மனத்தை நோகச் செய்வதாகும். அவன் வீழ்ந்துபட்ட செய்தியை இராவணனிடம் சொல்ல போர்க்களத்தினின்று தூதுவர் வருவர். பதைபதைத்து வந்தோர் ஒரே வரியில் சொல்வர்.

பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார்
இல்லை ஆயினன்; உன்மகன் இன்றுஎனச்
சொல்லினார் பயம் சுற்றத் துளங்குவார்.

(தூதுவர்) பற்களும் வாயும் மனமும் கால்களும் உயிர்ப் பாரமும் நடுநடுங்க, அச்சம் கொண்டு, நிலை தளர்ந்து (இராவணனிடம்) கூறினர் : உன் மகன் இன்று இல்லாமல் போனான்.

சோகத்தில் கொடியது புத்திர சோகம். அதுவும் தனக்குப் பின் தன் குலம் தழைக்க விளங்குவான் எனக் களித்திருக்கையில், தாம் உயிர் தரித்திருக்கும்போதே, தோளுக்கு மேல் வளர்ந்த நிலையில் தம் மகனைப் பறிகொடுக்கும் பெற்றோரின் துயரம் சொல்லி மாளாதது. ‘இலக்கியங்களில் புத்திர சோகம்’ எனும் தன் நூலில் நமது பல்வேறு இலக்கியங்களிலும் பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோர் துயர்ப்படும் காட்சிகளை உணர்ச்சி பொங்கக் காட்டியிருப்பார் ம.பொ.சி. அதன் முன்னுரையில் இந்நூலை எழுதியதற்கான காரணத்தையும் சொல்லியிருப்பார். தமது எண்பதாவது வயதில், நாற்பது வயதிலிருந்த தம் மகனைப் பறிகொடுத்திருக்கிறார் .பொ.சி. வளர்ந்த தம் மகன் மறைந்த துக்கம் தாளாது அதை ஆற்றும் முகமாகவேனும் ஆகாதா என்ற நோக்கில் எழுதியது அந்நூல்.

மேகநாதன் இறந்த செய்தி கேட்டு மலைகள் பொடிபடும் வண்ணம் இடிக்கும் இடியென பற்களைக் கடித்தபடி, அம்மலைகள் வழி கடல்நீர் கொப்புளித்து வெளிப்படும் வண்ணம் தரையில் கைகளால் அடித்து அழுகிறான் இராவணன். பத்துத் தலைகளில் ஒவ்வொன்றும் ஆற்றாமையால் அழும். அரற்றும். புலம்பும். இராவணனுக்குப் பத்துத் தலைகள் எனும் உருவகத்திற்கு, எட்டுத்திசைகளையும் ஆகாயத்தையும் பாதாளத்தையும் தன்வயப்படுத்தி, தன் பார்வையிலேயே வைத்திருந்தான் என்று பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன்

(காண்போம்).

- யுவபாரதி

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்... சோகத்தில் கொடியது புத்திர சோகம் தான்...

ஐம்படைத் தாலி விளக்கம் அருமை...

Yuvabharathy Manikandan said...

நன்றி தனபாலன்