January 04, 2010

கிருஷ்ண கானம்


ப்ரிய மீரா,
காகிதப் பூக்களும்
கலை மறந்த சிற்பங்களுமாய்
பிருந்தாவனம்

புரோகிதர்களின் யாகப் புகையிலும்
பிரார்த்தனைகளின் அதிருப்தியிலும்
மூர்ச்சை அடைந்திருக்கையில்
களவாடப்பட்டு விட்டன
என் குழலும் மயிற்பீலியும்
கொலைஞர்களின் கைவாளும்
கிரீடமுமாய் இப்போது அவை

ப்ரிய மீரா,
அங்கம் குன்றிஉன்
திசைக்கு நழுவுகிறது
என் படகு
நிலவில் விழுந்து
யமுனையில் பிரதிபலிக்கிறது
தூரத்து உன் தம்பூரா நிழல்

உன் வசமிருக்கும் எல்லையற்ற
காதலிலிருந்து வழிகிற
முடிவற்ற ஸ்வரமாலையை
என் தோள்கள் தரிக்கும்
தண்ட கமண்டலங்கள் நொறுங்கப்
புலருமொரு மங்கலப் பொழுதில்
ஜரா*வின் அம்பு தழுவுவதற்குள்.

( * ஜரா என்னும் வேடனின் அம்பு பட்டு கிருஷ்ணன் மறைந்தான் என்கிறது புராணம். ஜரா என்பதற்கு முதுமை என்றும் பொருளுண்டு.)

- யுவபாரதி

No comments: