June 23, 2013

எலும்புக்கூடும் களவாணியும்

பென்னாத்தூரிலிருந்து தெற்கே எட்டு பர்லாங் தூரத்திலிருக்கும் கிராமம் கருங்காலிக்குப்பம். சிறிய கிராமம். அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப்பள்ளி ஒன்று அங்குண்டு. தமிழ்வழிக் கல்வி. நன்கொடை கிடையாது. சுற்று வட்டாரத்திலேயே அப்பள்ளிக்கு நல்ல பேர் உண்டு. பாடம் நடத்துவதிலும் பிள்ளைகளைப் படிக்கவைப்பதிலும் அப்பள்ளி ஆசிரியர்கள் பேர் பெற்றவர்கள். பக்கத்திலுள்ள சற்றே பெரிய ஊர்களில் வேறு பள்ளிகள் இருந்தாலும் எட்டு மைல் தாண்டி இங்கு சேர்ந்து படித்தவர்கள் ஏராளம். அதன் நிர்வாகம் அப்போது ரெட்டியார்களிடம் இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அதை வாங்கிவிட்டது என்றார்கள்.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நான் படித்தது அங்குதான். காலையில் பள்ளி தொடங்கும் நேரத்திற்குச் சற்று முன் அங்கு சென்று சேர்வதற்குத் தோதாக அந்த வழியாகச் செல்லும் ஒரு தனியார் பேருந்து உண்டு. அந்த பேருந்தை விட்டுவிட்டால் நடராஜா சர்வீஸ்தான். மாலையில் வழக்கமாகவே நடராஜா சர்வீஸ்.

கருங்காலிக்குப்பம் முதல் பென்னாத்தூர் வரை நீண்டிருக்கும் ஏரி ஒன்று உண்டு. சாலையை ஒட்டி மேற்குப் பக்கம் சுமார் மூன்று சதுர மைல் பரப்புள்ள ஏரி அது. பெரியேரி என்போம். மாலையில் அதன் கரைமேட்டின் மீதுதான் நண்பர்கள் நடந்து வருவோம். ஏரியில் நீர் நிரம்பியிருக்கும் காலங்களில் எங்கள் வீடு திரும்பல் சற்றுத் தாமதமாகும். ஏரியிலோ அல்லது அதன் ஓரம் கட்டியிருக்கும் மதகிலோ இறங்கி ஒரு குளியல், சில்லோடுகளைக் கொண்டு நீர்ப்பரப்பில் தவக்களை (தவளைதான்) விடுதல் என்று நேரம் போகும். யார் விடும் சில்லோடு நீர்ப்பரப்பின் மேல் அதிக தடவை குதித்துச் செல்கிறது என்பதுதான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். என் பள்ளிக் கல்வி முடியும் காலம் வரை, அந்த ஏரி முற்றிலும் வறண்டு நான் பார்த்ததில்லை.

சுற்றுப்பக்கம் ஏழெட்டு மைல் தூரத்திற்குள் இருக்கும் கிராமங்களிலிருந்து வந்து அப்பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர்கள் பெரும்பாலும் சைக்கிளிலேயே வருவார்கள். திருவண்ணாமலை, அவலூர்பேட்டை பக்கமிருந்து வருபவர்கள் மட்டுமே பேருந்தில் வருவார்கள். காலை வழிபாட்டு நேரத்திற்கு வெகு சீக்கிரமே பள்ளிக்கூடம் வந்து விட்டால், பிரதான வாயிலில் சைக்கிளோடு நுழையும் ஆசிரியர்களிடமிருந்து சைக்கிளை வாங்கவும், அவர்களது கைப்பைகளை வாங்கிச் சுமந்து வரவும் போட்டி போட்டுக் கொண்டு ஓடுவோம். பெரிய வாத்தியார் வந்தால் மட்டும் ஒருத்தரும் கிட்டே போக மாட்டோம். அவருக்கு அது பிடிக்காது. அவரவர் வகுப்பின் வெளிச் சுவரோரம் பல்லி போல் ஒடுங்கி வணக்கம் சொல்லிவிட்டு, அவர் அவரது அறை சென்று சேர்கிறவரை கப்சிப்.

எங்கள் பள்ளியில் பெரிய வாத்தியார் அறையை விடவும் இன்னொரு இடத்திற்குப் பயந்தேன் என்றால், அவரது அறைக்குப் பக்கத்தில் இருக்கும் எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவு வகுப்பறைதான் அது. அந்த அறைக்குள் நுழைந்ததுமே வலது பக்கம் ஒரு மூடிய கண்ணாடி பீரோவுக்குள் மனித எலும்புக் கூடு ஒன்று ‘ஈ’ என்று இளித்துக் கொண்டு நிற்கும். பள்ளியில் சேர்ந்த நாள் முதல் நண்பர்கள் சொல்லும் முனி மற்றும் பேய்க் கதைகளிலெல்லாம் இந்த எலும்புக் கூடு உயிருடன் உலாவும். அல்லது ஓர் உதாரணமாகவாவது வரும். ஐந்தாம் வகுப்பு தாண்டும் வரை அந்த எலும்புக் கூட்டின் மீதான பயம் எனக்கு இருந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியிலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்ற சுற்றுலாவில் செத்த காலேஜுக்கும் கூட்டிப்போனார்கள். அங்கு இறந்து போன ஏகப்பட்ட ஜீவராசிகளின் எலும்புக் கூடுகளைப் பார்த்தபின் எங்கள் பள்ளி எலும்புக்கூட்டின் மீதான பயம் போய்விட்டது.செத்த காலேஜ் என்றால் அருங்காட்சியகம். உயிர் காலேஜ் என்றால் மிருகக் காட்சி சாலை.

படிப்பு விஷயத்தில் ஒரு நாளும் வீட்டிலோ பள்ளிக்கூடத்திலோ அடி வாங்கியதில்லை. பள்ளியிறுதி வரை வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுபவனாகவே இருந்திருக்கிறேன். ஆனால், சண்டையில் இறங்கி, தறி வாத்தியாரிலிருந்து பெரிய வாத்தியார் வரை அடி வாங்கியிருக்கிறேன். பெரும்பாலும் கூட்டாளிக்கு வேறொருத்தனுடன் வரும் சண்டையில், கூட்டாளிக்கு ஆதரவாகக் களமிறங்குவதாலும், சில சமயம் புளியம்பழம், மல்லாட்டை (வேர்க்கடலை), கொடுக்காப்புளி பங்கீட்டில் எழும் பிரச்சினைகள் முற்றியும் சண்டை வரும். வாத்தியாருக்குத் தகவல் எட்டியதும் வதைபாடுதான்.

புளியம்பழம் – மல்லாட்டை விஷயம் என்று பார்த்தால், தோட்டக்காரன் வருகிறானா என்று காவலுக்கு நிற்க இரண்டு பேர். புளியந்தோப்பிலும் மல்லாட்டைக் கொல்லையிலும் முறையே கல்லெறிந்து வீழ்த்தவும் கொல்லையில் இறங்கிப் பிடுங்கவும் நாலு பேர். பங்கு பிரிக்கையில் காவலாளி – களவாணி இருவரில் யாருக்கு ஆபத்து அதிகம் என்கிற கோதாவில் யாரேனும் இருவருக்குள் சண்டை வந்து தலைமுடி கலையும். சட்டைப்பை கிழியும். பட்டன் எகிறும். வாத்தியாரிடம் பஞ்சாயத்து போகும். எல்லோருக்கும் ‘சமபங்கு’ அடி விழும்.

அடிப்பதிலும் வாத்தியாருக்கு வாத்தியார் வித்தியாசமுண்டு. பெரிய வாத்தியார் என்றால் ரூலரால் கையைக் கவிழ்த்து நீட்டச் சொல்லி, விரல் முட்டிகளில் அடிப்பார். வலியால் கையை மடக்கினால் இன்னும் இரண்டு அடி சேர்த்து விழும். பெரிய தெரு வாத்தியார் ஸ்கேலால் புட்டத்திலேயே போடுவார். நாகலாம்பட்டு வாத்தியார் பிரம்பால் முதுகில் பின்னி எடுப்பார். தறி வாத்தியாரோ தலையில் குட்டுவார். மோதிரக் கைதான் என்றாலும் குட்டு குட்டுதான். விளையாட்டு வாத்தியார் என்றால் இருபது புல் அப்ஸ் எடுக்கவைப்பார். நடுவில் நிறுத்தினால் மெல்லிய குச்சியால் கரண்டைக்காலிலேயே விளாசுவார். டீச்சர்களோ கன்னத்திலேயே அறைவார்கள். எங்களை அடித்தாலும் அவர்கள் மீது வருத்தமோ கோபமோ நிரந்தரமாக இருந்ததில்லை. அடிவாங்கிய அன்று உம்மென்று இருந்தாலும் மறுநாள் சம்பந்தப்பட்ட வாத்தியாரிடம் சகஜமாகிவிடுவோம். ஒரு வேளை தோட்டக்காரர்களிடம் சிக்கி அடி வாங்கியிருந்தால் வாத்தியாருக்கும்தானே கெட்ட பெயர் வந்திருக்கும்?

எட்டாம் வகுப்பை எட்டும்போதெல்லாம் மேற்படி சண்டித் தனமும் களவாணித் தனமும் போய்விட்டது.எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்ல குணம் மட்டும் அப்படியே தங்கிவிட்டது.
-    யுவபாரதி

1 comment:

Anonymous said...

உள்ளத்தில் இருந்து எழும் பதிவுகளுக்கு தனி அழகு உண்டு என்பதை இப்பதிவு விளக்குகின்றது. ஏறக்குறைய இதே அனுபவங்கள் என் பள்ளிக் காலங்களில் வந்ததுண்டு. அதே அடிகள், எலும்புக் கூடு கதைகள் நல்லதொரு நினைவு மீட்டலாய் அமைந்தது. பால்யக் காலங்கள் உண்மையில் வாழ்வில் மறக்க இயலாத பருவம் தான் என்பதில் ஐயமில்லை.