July 04, 2013

இப்போதும் சொல்லவில்லை என்றால்?

டிஆர்பி ரேட்டுக்காகக் காட்சி ஊடகங்களும் பத்திரிகை விற்பனைக்காக அச்சு ஊடகங்களும் பரபரப்புகளையே பெரிதும் நம்பியிருக்கும் காலம் இது. பெரும்பாலும் எந்த ஒரு விஷயத்தையுமே சில நாள் அல்லது சில வாரச் செய்திகளாகப் பயன்படுத்தியபின், அடுத்த விஷயத்தை நோக்கி நகர்ந்து விடுபவை இவை. சமூக மாற்றம் மற்றும் முன்னேற்றம் குறித்த அக்கறை கொண்ட தனிநபர்களும் அமைப்புகளும் கூட ஏறக்குறைய இதே விதமாகவே ஆகிவருகிறார்களோ என்று தோன்றுகிறது.

தர்மபுரியில் இரயில் தண்டவாளத்தை ஒட்டி, கவிழ்ந்த நிலையில் கிடக்கும் இளவரசனின் சடலம் சாதிய ஆதரவாளர்களை மட்டும் சாடவில்லை. சாதிய மறுப்பு, சமூக மாற்றம் எனக் குரல்கொடுத்து இயங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளையும் சேர்த்துதான் சாடுகிறது.

சில வாரங்களுக்கு முன் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைக்குப் பின் திவ்யா அளித்த நேர்காணல் பல பத்திரிகைகளிலும் வந்திருந்தது. பலர் கவனிக்கத் தவறினார்களா தெரியவில்லை. இளவரசனும் திவ்யாவும் யாதொரு ஊரிலும் நிரந்தரமாகத் தங்க இயலாமல் தவித்து நகர்ந்து கொண்டே இருக்க நேர்ந்ததாகவும், அதனால் இருமுறை கருக்கலைப்பும் நடந்ததாகவும், ஒரு கட்டத்தில் கையில் காசே இல்லாமல் போக, வேறு வழியின்றி தர்மபுரிக்கே வந்து இளவரசனின் தகப்பனாருக்குரிய அரசு குடியிருப்பில் இருந்ததாகவும் சொல்லியிருந்தார் திவ்யா. அதன்பிறகே அவரது தாயாருடனான சந்திப்பு. இன்ன பிற.

சாதிய ஆதரவாளர்கள் வென்றுவிட்டனர், வென்று விட்டனர் என ஓங்கிக் குரல் கொடுக்கும் அதே தருணம், சாதிய மறுப்பாளர்கள் என்போர் செய்யத் தவறியது என்ன? தந்தையின் மரணம், மூன்று கிராமங்களின் அழிவு என்ற நிகழ்வுகள் அந்தப் பிள்ளைகளின் மனநிலையில் ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்து அவர்கள் உளவியல்ரீதியாக விடுபட உரிய ஆலோசனைகள் (கவுன்சிலிங்) வழங்கப்பட்டிருக்கவேண்டும். சாதிய ஆதரவாளர்கள் திவ்யாவைத் தொடர்பு கொள்ள விடாமல் முயற்சித்த போது, சாதிய மறுப்பாளர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? 
பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை என்பதை அறிந்தவர்கள்தாமே நாம்? சாதிய மறுப்பாளர்கள் என்ற வகையில் தனிநபர்கள் மட்டுமின்றி, சற்றே செல்வாக்குள்ள அமைப்புகளும், செல்வமும் செல்வாக்குமுள்ள என்.ஜி.ஓ.க்களும் நினைத்திருந்தால், அந்தப் பிள்ளைகளுக்குத் தார்மீக ஆதரவு மற்றும் இத்தனை பேர் உங்கள் பின்னால் இருக்கிறோம் என்ற நம்பிக்கை ஆகியவற்றை மட்டுமின்றி, ஒரு நிரந்தர வருவாய்க்குரிய வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்திருக்க இயலும். இவை அப்பிள்ளைகளுக்குத் தங்களின் காதலின் மீதான பிடிப்பையும், பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்வதற்கான தைரியத்தையம் அளித்திருக்கும்.

அவர்களுக்குத் தார்மீக ஆதரவு தருவதாக சாதிய மறுப்பாளர்கள் என்ற பெயரில் இங்கே ஆங்காங்கே கூட்டம் நடத்திக் கொண்டிருந்த அதே தருணத்தில், அந்தப் பிள்ளைகள் ஓரிடத்தில் கூட தொடர்ந்து தங்க இடமின்றி, கையில் போதுமான பணமின்றி ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தனர் என்று அறிகிறபோது மனம் கூசுகிறது. அந்தப் பிள்ளைகளின் திருமணத்தை எதிர்த்து சாதிய அரசியல் செய்து ஆதாயம் அடைய முயற்சித்தவர்கள், அந்தப் பிள்ளைகளின் நகர்வுகளையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கவனித்தபடி இருந்திருக்கிறார்கள். சாதிய மறுப்பாளர்களோ வழக்கம் போல் சில கட்டுரைகள், நேர்காணல்கள், விவாதங்கள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் என்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துவிட்டார்கள். சம்பந்தப்பட்ட பிள்ளைகளைத் தம் பிள்ளைகளாக எண்ணிக் காட்டவேண்டிய அக்கறையைக் காட்டத் தவறிவிட்டார்கள்.

இன்று இளவரசன் உயிரோடு இல்லை. தகப்பன் மரணம் தந்த மன அழுத்தத்தோடு, இளவரசன் மரணமும் சேர்ந்து திவ்யாவை தீரா மனப் புழுக்கத்தில் தள்ளப்போகிறது. ஊடகங்களோடு சேர்ந்திசைந்து ஒரு வாரம் புலம்புவது அல்லது வீரவணக்கம் என்ற பெயரில் ஓரிரு வாரங்கள் இரங்கல் கூட்டம் நடத்துவது, பின் அடுத்த வேறு விஷயத்திற்கு நகர்வது என்பது எதிர்காலத்திலாவது சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்குமானால் நல்லது.

- யுவபாரதி

1 comment:

Anonymous said...

சாதியம் தன் கோர முகத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இங்கு சிக்கலே, சாதி மறுப்பாளர்களின் மவுனங்களும், கையாலாகாத்தனமுமே. தருமபுரி சம்பவம் நடந்த பின் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பை உறுதி செய்ய நாம் என்ன செய்தோம்? சாதி வெறியர்கள் மீது மட்டும் பழியைப் போடுவதன் மூலம் நமது குற்றவுணர்வை மறைக்க முனைவது முறையல்ல. இங்கு சாதி மறுப்பு பேசும் நாம், நமது வாழ்வில் சாதிகளை முற்றாக துறந்து தான் விட்டோமா? அல்லது குறைந்தது சாதி மறுத்து மணந்தோரின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் எத்தகைய உத்தரவாதங்களை எம்மால் அளிக்க முடிந்தது. இங்கு குற்றவாளிகள் தமது வெறித்தனத்தை பரப்பிக் கொண்டே உள்ளனர், அவர்களை நம்மால் ஒழிக்கத் தான் முடிந்ததா? அடுத்து இன்னொரு இளவரசன் இறக்கும் வரை, திவ்யா அபலையாக்கப் படும் வரை, வாய் மூடி மவுனிகளாக கிடப்போம், அல்லது எங்காவது புலம்பித் தீர்த்து விட்டு நாலாம் நாள் அவரவர் சோழியைப் பார்க்கப் போவோம். முடிவு???