August 14, 2013

பந்துறை கடவுள்

பெரும் பரிவுடன்
உன் உள்ளங்கை அளவாக்கிய
அவன் உலகத்தைச்
சிறு பந்தெனச் சுருட்டினாய்
அக்கம் பக்கம் மேல் கீழ்
எப்பக்கம் எறிந்தாலும்
கைக்கே திரும்பியது அது

ஆடத் தொடங்கிய ஆட்டம்
அலுத்துப் போன கணத்தில்
நண்பர்களோடு மைதானம் நகர்ந்தாய்
பெருவெளி தோதுறா சிறு பந்தை
வீட்டுக்குள் வீச
நான்கு சுவர்களுக்குள்
மோதி மோதிச் சுழன்றடங்கியது அது

நீரில்லை காற்றில்லை
தீயில்லை மனிதரில்லை
பந்துக்குள் உறைந்த தனியன்
நாட்பட நாட்பட
மோனத் தவத்தில்
மூழ்கி மூழ்கிக் கடவுளானான்.

-    யுவபாரதி 

No comments: