February 17, 2014

அப்பன் எனும் சொல் – சில குறிப்புகள்

தமிழரில் பெரும்பாலோர் தந்தையை அப்பா என்றே அழைக்கிறோம். தெலுங்கு பேசும் மக்களின் அழைப்பு முறையை ஒட்டி நாயனா என்று அழைப்போரும் நம்மில் உண்டு. தந்தை என்பது தமிழில் வேர் கொண்ட தமிழ்ச் சொல். சங்க இலக்கியங்களிலேயே - தம்மைத் தந்த தலைவன் என்ற பொருளில் - வருவது தந்தை எனும் சொல். அதே போல நாயனா என்பது நாயகன் என்ற சம்ஸ்கிருதச் சொல்லடி நின்று நாயகன் > நாயகனார் > நாயனா என்ற திரிந்த வடிவம். அதற்கும் தலைவன் என்ற பொருள்தான்.
ஆனால், அப்பா/அப்பன் எனும் சொல் சங்க இலக்கியங்களில் இல்லை. ஆனால், பக்தி இலக்கியங்கள் இறைவன் எனும் தலைவனை உரிமையோடு அப்பெயர் சொல்லி அழைக்கின்றன. பின்னாளில் தந்தையையும் குறிக்கத் தொடங்கி இன்றுவரை நிலைபெற்றுள்ளது. அப்பா என்பது வியப்புச் சொல்லாகவும் பாடல்களில் விளங்கிவருகிறது. இடைப்பட்ட காலத்தில்தான் இச்சொல் புழக்கத்திற்கு வந்திருக்கிறது.
அப்பன் எனும் சொல்லைத் தமிழ் லெக்சிகன் cf. Pkt. Appa – பிராகிருதத்தின் அப்பா என்பதன் திருந்திய வடிவம் - என்று குறிப்பிடுகிறது. ஆகவே, தந்தையைக் குறிக்கும் அப்பன் என்ற சொல் பிராகிருதத்திலிருந்து தமிழுக்கு வந்ததுதான் என்பது தெரிகிறது.

பிராகிருதம் என்று பொதுவாகச் சொல்லப்படுவது கி.பி. முதலாயிரம் ஆண்டுகளில் வடஇந்திய மற்றும் தக்காணப் பகுதிகளில் வழங்கிவந்த மொழி வழக்குகளையே. அவை சிற்சில இடம், எழுத்து மற்றும் ஒலிப்பு முறை சார்ந்த மாறுபாடுகளுடன் மாகதி, சௌரசேனி, மஹாராஷ்டிரீ என்று மூன்று பெயர்களில் வழங்கி வந்தன. இன்றைய பிகார், ஜார்க்கண்ட், கிழக்கு உ.பி. அடங்கிய பண்டைய மகத நாட்டுப் பகுதிகளில் வழங்கியது மாகதி. இன்றைய உத்தரகாண்ட், மேற்கு உ.பி., அரியானா, வடக்கு ம.பி. அடங்கிய பண்டைய சூரசேன நாட்டுப் பகுதிகளில் வழங்கியது சௌரசேனி. இன்றைய மகாராஷ்டிரம், தெற்கு குஜராத், வட ஆந்திர மற்றும் வட கருநாடகப் பகுதிகள் அடங்கிய தக்காணப் பகுதியில் வழங்கியது மஹாராஷ்டிரீ. கி.மு.வில் சாதவாகனர்கள் பேரரசாய் ஆண்டதால் அப்பகுதிக்கு மஹாராஷ்டிரம் எனப் பெயர் வந்ததென்பர்.

தொடக்க காலப் பிராகிருதமான பாலிக்கு பௌத்தர்களிடம் இருந்த செல்வாக்கு போல, இடைக்காலப் பிராகிருதங்களில் ஜைனர்களின் செல்வாக்கு மிகுதி. ஆதி ஜைனத் துறவிகள் மாகதியில் தம் சமயப் பனுவல்களை யாத்தனர். பின்னர் இரு பிரிவுகளாகப் பிரிந்து இயங்கிய காலத்தில் திகம்பரர் எனும் உடைதரிக்காத துறவிகள் சௌரசேனியிலும், சுவேதாம்பரர் எனும் வெள்ளுடை தரித்த துறவிகள் மஹாராஷ்டிரியிலும் தமது சமயப் பனுவல்களை இயற்றினர். இவர்கள் பயன்படுத்திய மொழியின் தனித்தன்மையின் அடிப்படையில் இம் மொழி வழக்குகள் முறையே ஜைன மாகதி அல்லது அர்த்த மாகதி, ஜைன சௌரசேனி, ஜைன மஹாராஷ்டிரீ என்று அடையாளம் காணப்பட்டன.

ஜைனத்தின் இரு பிரிவுகளும் தமிழகம் வந்துள்ளன. எனினும், அதிகம் செல்வாக்கு பெற்றிருந்த பிரிவு திகம்பரம் என்பதே. மகதத்தில் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மெளரியன் கி.மு.விலேயே ஜைனத் துறவியான பத்திரபாகு முனிவரோடு கருநாடகம் வந்து, வடக்கிருந்து உயிர்துறந்தான் என்பது அறிந்ததே. தமிழகத்தின் திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி முதலான பகுதிகளைச் சுற்றி இன்றும் ஜைனர்கள் குறிப்பிடத் தக்க அளவில் வாழ்கின்றனர். தேவார மூவர்களுள் ஒருவரான நாவுக்கரசர், தருமசேனர் எனும் பேரில் முன்பு ஜைனராக இருந்து, பின்பு சைவம் வந்தவரே என்பதும், தமிழின் பல இலக்கண நூல்கள் மற்றும் நிகண்டுகளை ஜைனர்கள் அளித்திருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே .

அவ்வகையில் வடநாட்டிலிருந்து வந்த ஜைனர்களின் பனுவல் மற்றும் வழக்கு மொழியான பிராகிருதச் சொற்களும் தமிழில் குறிப்பிடத் தக்க அளவில் கலந்து விட்டிருக்கின்றன. அவற்றில் அப்பனும் அடக்கம்.

சம்ஸ்கிருதத்தில் ஆத்மன் > ஆத்மா என வழங்கிய சொல், மாகதி பிராகிருத எழுத்தமைதி மற்றும் ஒலிப்புமுறைப்படி அப்பா என்று வழங்கியிருக்கிறது. தமிழ் தற்பவ விதிப்படி அப்பன் என அன் விகுதி பெற்று தமிழுக்கு வந்திருக்கிறது. தொடக்கத்தில் உள்விளங்குவோன், தலைவன், இறைவன் என்றவாறு வழங்கிய இவை, நாளடைவில் குடும்பத்திற்குள் அதே பொருளில் விளங்கும் தந்தையைச் சுட்டும் பெயராகவும் ஆகியுள்ளது. வெகுகாலம் ஜைனம் செல்வாக்கு பெற்றிருந்த கருநாடகத்தில், கன்னட மொழியில் அப்பா எனும் சொல் இன்றும் மதிப்பான பின்னொட்டாக விளங்கிவருகிறது.

மேலும் அப்பன் எனும் சொல்லிருந்து தமிழ் இலக்கண முறைப்படி,    தம்+அப்பன்>தமப்பன்>தவப்பன்>தகப்பன்/தோப்பன் (தந்தை), அப்பன்+ஆத்தாள்> அப்பாத்தாள்>,அப்பத்தா, அப்பன்+ஆயி>அப்பாயி (தந்தையின் தாய்), அப்பன்+பாட்டன்>அப்பாட்டன் (தந்தையின் பாட்டன்) என்ற சொற்களும் பெருகி தமிழில் நிலைபெற்று விட்டன.


- யுவபாரதி 

உசாத்துணை:
 1) சங்க இலக்கியச் சொல்லடைவு / தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் / 2007
2) Tamil Lexicon / University of Madras / 1982.
3) Introduction to Prakrit / Baptist Mission Press, Calcutta / 1917.
4) Illustrated Ardha Magadhi Dictionary / Probsthain & Co., London / 1927.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பல சான்றுகள் + விளக்கத்திற்கு நன்றி...