December 28, 2016

ஒரு ஓவியனின் கவிதைப் புத்தகம்

                                

மனிதர்கள் சிறிது சிறிதாக
வெளியேறிவரும் தேசத்திற்குள்
கடவுள் நுழைகிறார்

என்றே தொடங்குகிறது திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ‘ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம்’  என்ற தொகுப்பின் முதல் கவிதை. கடவுளோடு அரசனும் வணிகனும் நுழைகிறார்கள். படையலில் மணத்தில் மயங்கிய கடவுள் கண்ணாடிச் சட்டகத்திற்குள் சிறைப்படுகிறார். வணிகனிடம் அடகுபோகிறான் அரசன். அரசனது கழுத்தெலும்புகள் உருவப்பட்டு வணிகனின் இச்சைக்கேற்றத் தலையாட்டும் வகையில் ஸ்பிரிங்குகள் பொருத்தப்படுகின்றன. அறம் மயங்கிச் சரிவதும், இலாபநோக்கம் அதிகாரக் கயிற்றைத் தன் விருப்பப்படி ஆட்டுவதும், வெகுமக்கள்  விலகிச் செல்லவதுமான சமகாலத்தை ஆற்றாமையோடு குறியீடு செய்கிறது ‘இரசவாதி என்கிற வணிகன்’ எனும் இக்கவிதை.

ஏரியை குளத்தைத் தூர்வாராமல் புதர்மண்டவும் குப்பை சேரவும் கைவிடுபவர்கள், நதியை மட்டும் அப்படியே விட்டுவிடுவதில்லை. ஒவ்வொரு நதித்தடத்திலும் குளத்தாழம் மணல்வெட்டித் துடைத்து; வாருகிறார்கள். குதித்தெழ, குடிநீர் அள்ளிச்செல்ல, கால்நடை குளிப்பாட்ட, கழனிக்குப் பாய்ச்ச என்று உயிரோடு பழகிய நதிகளைக் காவு கொடுத்து அடுக்குமாடிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. நாகரிகத்தின் தொட்டில் என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நதிக்கரையை ஒட்டிய ஒவ்வொரு கிராமத்தின் வழியாகவும் ஒவ்வொரு நாளும் செல்லும் லாரிகள் மணலை மட்டுமா அள்ளிச் செல்கின்றன?

‘இராட்சத இயந்திரம் லாரியின் மீது குவித்த
கல்லறையின் வடிவொத்த
மணல் குவியலிலிருந்து வழிகள் தோறும்
சிந்தின மீன்களின் பச்சை இரத்தம்

நாகரீகத்தின் தொட்டில் கயிற்றை
தரத்தரவென இழுத்துச் செல்லும்
மணல் லாரியின் பின் கதறியபடி
ஓடுகிறாள் மார்பு குதறப்பட்ட ஆதித்தாய்

மணல் மலைகளை இலாபமாக்க
சூத்திரம் புனையும் வியாபாரிகளின்
செவிகளுக்கு எட்டவேயில்லை
பின்தொடரும் நதியின் அலறல்’

என்று நீள்கிறது ‘கொலையுண்ட நதியின் பாடல்’ எனும் கவிதை.

நடப்புக் காலத்தின் உலகப் பொருளாதாரச் சூழல் தாராளமயமானது. அதாவது அதிகாரத்திலும் பொருளிலும் வலுத்த தனிநபர், குழு அல்லது தேசம் அதனினும் இளைத்ததைச் சட்டப்பூர்வமாகவும் இல்லாமலும் தாராளமாகச் சுரண்டலாம். உலகின் எந்தவொரு மூலையிலும் இருந்துகொண்டு, உலகின் எந்தவொரு மூலையிலுள்ள மண்ணின் மூலமரத்தையும் ஆணிவேரோடு பிடுங்கிப் பையிலிடலாம். ஒரு மண்ணின்  ஆதார நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, நாவறண்டு நிற்கும் அதே மண்ணின் மக்களிடம் விற்கலாம். நதியைப் பலிகொடுப்பதைப் போலவே மரத்தையும் மணலையும் பலியிடுவதும் நமக்குப் பழகிவிட்டது. இவ்விரண்டையும் இணைத்து ‘ஒரு நீர்க்குப்பி + ஒரு ஆக்சிஜன் குப்பி = ஒரு சயனைடு குப்பி’ என்ற கவிதையில் பின்வருமாறு சொல்கிறார் தமிழ்ப்பித்தன்.

‘தலை, கை, கால் நறுக்கப்பட்டு
பிண்டமெனக் கிடக்கும்
நெடுமரத்தின் இலைகளிலிருந்து
வழிந்தோடிய பறவைகளின் பாடல்களை
வயிறு ஒட்டிய நாய்கள் கவ்வி ஓடின

பாதசாரிகள்
துளிநீருக்காய் வானம் பார்க்கையில்
அவர்களின் நிழல்களை
மாயக்கரமொன்று வெட்டிக்கொண்டிருந்தது

அறுபட்ட நிழல்களின் வேர்கள் ஊரும்
ஒவ்வொரு பாதத்தின் கீழும்
முளைக்கிறது மணல் தேசம்
ஊசிமுக கழுகு நாட்டினன்
தாதுவையும் மணலையும்
பிரித்துப் பருகும் பறவையை
மணல்தேசத்தில் கண்டெடுத்த போது
தன் உள்ளங்கையில்
ஒளித்துவைத்திருந்த மழையை
ஆசனவாயொப்ப மடக்கி
மணல்தேசத்தின் வாயில்
சொட்டுச் சொட்டாய் ஊற்றினான்’

முற்றிலும் குறியீடுகளாலான கவிதை இது.

பெண்வெளி பற்றிப் பேசும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள், பெண் குறித்த ஆணின் குரலாக அல்லாமல் பெண்ணின் குரலிலேயே பேசுகின்றன. செவ்வாயில் தொங்கும் தூண்டில்கள், எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே, மியாவ் என்ற அப்பா ஆகிய கவிதைகளை இப்படிக் குறிப்பிடலாம்.

‘அச்சமூட்டுகின்றன
கவியும் பார்வைகள் அனைத்தும்
அம்மணத்தை மூழ்கடித்து
பனிவெள்ளத்தில் விறைக்கும் உடல்
காலை தொடங்கி
இரவு வரை சுமக்கமுடியவில்லை

ஒரு கையில் வேலை
ஒரு கையில் துப்பட்டா
சுதந்திரமற்ற குனியல் நிமிரல்
அறுத்து எறிந்திடலாம் போல் இருக்கிறது’

என்று ஒவ்வொரு கணமும் உடலையே கொத்திக் கொண்டிருக்கும் ஆணின் கழுகுப் பார்வைகளால் பெண்ணுக்கு மூளும் கோபத்தை செவ்வாயில் தொங்கும் தூண்டில்கள்’ கவிதைப் பதிவு செய்கிறது.

ஒவ்வொரு நாளும் இந்நாட்டில் பெண்ணுக்கெதிராய் நேரும் வன்முறைகளும் வன்கொலைகளும், தனக்கு இவ்வெளியின் பாதுகாப்பு எக்கணமும் கேள்விக்குறியாகலாம் என்ற அச்சத்தை ஊட்டவே செய்கின்றன. சாதி, சமய, வட்டார, மொழி வேறுபாடுகளைக் கடந்த பொது அச்சம் இது. ‘எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே?’ என்ற கவிதையின் தலைப்பே இந்நாட்டின் ஆண்மையம் குறித்தும் இக்கவிதையின் பேசுபொருள் குறித்தும் சொல்லிவிடுகிறது.

‘எங்கள் தந்தையர் நாட்டில்
தலை தொடங்கி
பாதம் வரை
வற்றாது ஓடும்
ஆண்மை நதியில்
அனுதினம் மிதக்கின்றன
கூட்டாய் குதறப்பட்ட பெண் உடல்கள்

பிச்சைப் பாத்திரமெனத் தொங்கும்
கருப்பையில் விளைந்த
குழந்தை உறுப்பில் ஆண்சாயல் தேடி
களிப்புறும் அந்த தருணம்
உணர்த்துகிறது
என் இயந்திரப் பெண்மையை

உடலெங்கும் உறுத்தும்
பொருத்தப்பட்ட முகமூடிகளை
பிய்த்தெறிந்ததும் வடிகிறது
பன்னெடுங்கால சீழ்’

என நீள்கிறது இக்கவிதை.

ஒடுக்கப்பட்டோர் எதிர்கொள்ளும் சவால்களும், அவற்றை எதிர்கொண்டு கடக்கும் திறமும் இத்தொகுப்பில் பல கவிதைகளில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எம் மண், மனிதன் பிறந்த கதை, பீ, இரவுபகல், ஒருத்தி அறுத்தா, ஒழுகும் வானத்தை நேற்றுதான் மாற்றினோம் ஆகிய கவிதைகளைச் சான்றாகக் குறிப்பிடலாம்.
அரசியல் சட்டத்தில் இருந்தாலும் நடப்பில் ஊர் என்பது எல்லாருக்கும் பொதுவாக இல்லை. ஊர் கும்பிடும் சாமியும் அதை அனுசரித்தே உருள்கிறது. தலித்துகள் வடம் பிடிப்பதென்றால் தேர் நகராமல் திருவிழாவே நின்று போகும் ஊர்களில் கண்டதேவி, சங்கராபுரம் என்பனவெல்லாம் வெளியுலகிற்குத் தெரியவந்த பெயர்கள் மட்டுமே. ஏன் ஏன் என்ற கேள்விகளை எழுப்பும் ‘எம் மண்’ என்ற கவிதை இப்படி முடிகிறது.

‘உங்களைச் சுமப்பதற்கும்
உங்களின் தேரை இழுப்பதற்கும்
வித்தியாசமில்லை
ஒன்றே ஒன்றுதான்

உங்கள் கோவிலும் தேரும்
நிற்பது எம் மண்ணில்
அதை அகற்றத் தேவைப்படுகிறது
கோவில் நுழைவும்
தேரிழுப்பும்’

எல்லாரும் சமம் என்பது எப்படி சட்டத்தில் மட்டும் இருக்கிறதோ அதே போலவே சட்டத்தில் மட்டும் இருப்பது மனிதக் கழிவை மனிதர் அகற்றுவது தடைசெய்யப்பட்டது என்பதும். இரு கவிதைகள் இந்த அவலத்தை அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.

வீட்டின் நிலையையும் உழைப்பின் வலியையும் ஒரே வரியில் சொல்கிறது இரவுபகல் எனும் கவிதை.

‘பகலில் பல சூரியன்கள்
இரவில் பல விண்மீன்கள்
பெருச்சாளிகளைப் போல்
வந்துபோகும்
எங்கள் கிரகத்தின்
இரவுபகலைத் தீர்மானிப்பது
பீக்கூடையின் உள்ளிருப்பும்
வெளிநகர்வும்’

இந்த அவலத்தைக் கோபத்தோடு பதிவு செய்யும் மற்றொரு கவிதை ‘பீ’.

‘கண்கள் இறுகமூடி
மூக்கடைத்து செல்பவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை
சிலரின் தலைச்சுமையாய்
அனைவரின் வயிற்றிலும்
பீ

நாய்கள் திரும்பிப் பார்ப்பதில்லை
நான் பேண்டதை
மனிதனென்றால்
ஒருமுறையாவது திரும்பிப்பார்
நெடி நுகர்
புழுக்கள் எண்ணு
வெறுங்காலிலாவது மிதி
உன் குழந்தைகளுக்காவது கழுவிவிடு
இல்லை
நீ பேண்டதை அள்ளாத
உன் கைகளை வெட்டி எறி.

ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் தலித் பெண்கள், ஆதிக்கசாதி ஆண்களிடம் எதிர்கொள்ளும் துயரத்தைப் பேச்சு மொழியில் வெளிப்படுத்தும் கவிதை ‘ஒருத்தி அறுத்தா..?’ அது இப்படி முடிகிறது.

‘வயசுக்கு வந்துட்டா
கற்பழிப்பாங்களாம்
கல்யாணம் முடிச்சுப்புட்டா
மொத ராத்திரியே
அவிங்க வந்து கழிப்பாங்களாம்

மார்ப தடவிப் பாக்குறதும்
குளத்தங்கரப் பக்கம்
குளிக்கிறவள தூக்கிக்கிட்டு
சோலக்குள்ள ஓடுறதும்
வழக்கமாய் போச்சு
எனக்கும் வயசு வரட்டும்

ஒருத்தி அறுத்தா
இனி ஒரு பயலுக்கும்
எந்திக்காது!’

திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ‘ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம்' தொகுப்பிலுள்ள கவிதைகளில் இயற்கையின் மீதான, பெண்களின் மீதான, தலித்துகளின் மீதான சுரண்டல்களைப் பேசும் கவிதைகளைப் பற்றி மட்டுமே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். அடிப்படையில் தமிழ்ப்பித்தன் ஒரு ஓவியர் என்ற வகையில் கவிதையின் காட்சிப்படுத்தல்கள் பலவும் சித்திரமாகவே வெளிப்பட்டுள்ளன. தமிழ்ப்பித்தன் இன்னும் பல நல்ல கவிதைகளைத் தருவார் என்ற நம்பிக்கையையும் தருகின்றன.

(04/12/2016 அன்று தேனியில் முற்போக்கு கலை இலக்கிய மேடை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ‘ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம்’ என்ற கவிதைத் தொகுப்பைப் பற்றிப் பேசியது.)

No comments: